இத்தருணத்தில் அரசாங்கத்தின் மக்கள் ஆதரவு துரிதமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. இந்தளவுக்கு மகத்தான மக்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கமொன்று இரண்டு வருடங்கள் கழிவதற்கு முன்னராக மக்களின் வெறுப்புக்கு இலக்காதலை நாங்கள் அண்மைக்கால வரலாற்றில் கேள்விப்பட்டதில்லை. அதைப்போலவே பல நெருக்கடிகள் உருவாகி வருகின்றன.
தமது தோல்விநிலையின் மத்தியில் மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக பலவற்றைச் செய்வதையே 73 வருடங்களாக அரசாங்கங்கள் செய்தன. அதுதான் இனவாதத்தை தூண்டிவிடுவது. மக்கள் மத்தியில் பிளவுகளை உண்டாக்குவது இந்த அரசியல் கட்சிகளின் தந்திரோபாயமாகும். அதனால் மனித உயிர்கள் இழக்கப்படுவது இரத்தம் சிந்துவது ஆட்சியாளர்களுக்கு ஏற்புடையதல்ல. அவர்களின் அதிகார கருத்திட்டத்திற்காக எந்தவொரு வேலையையும் செய்வார்கள். அதேபோல் இந்த அரசாங்கமும் இனவாத முரண்பாடுகளை ஏற்படுத்துகின்ற வகையிலான தீர்மானங்களையும் முடிவுகளையும் எடுத்துவருகின்றது. அது மாத்திரமல்ல நாட்டில் சனநாயகத்தை இல்லாதொழிக்கின்ற வழிமுறைகளை கடைப்பிடித்து வருவதை நாங்கள் அவதானித்து வருகின்றோம்.
அத்துடன் அவர்கள் சட்டத்திற்கும் பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்துவருவதையும் நாங்கள் காண்கிறோம். அரசாங்கத்தின் எதிரிகளுக்கு விமர்சிப்பவர்களுக்கு ஒரு சட்டமும் தமது நண்பர்களுக்கும் சகபாடிகளுக்கும் மற்றுமொரு சட்டமும் அமுலாக்கப்படுகின்றது. ஒரு நாடு – ஒரு சட்டம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்றளவில் தெளிவாகவே மக்களுக்கு ஒரு சட்டத்தையும் தமது நண்பர்களுக்கும் சகபாடிகளுக்கும் மற்றுமொரு சட்டத்தையும் அமுலாக்குவதுதான் இதில் மிகப்பெரிய கேலிக்கூத்து. கொத்தலாவல சட்டத்திற்கு எதிராக போராடிய பத்து அரசியல் செயற்பாட்டாளர்கள் 100 நாட்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். அதைப்போலவே உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக அபிப்பிராயம் தெரிவித்த மதத்தலைவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது. அருட்தந்தை சிறில் காமிணியை கைதுசெய்வதற்காக முஸ்தீபு நிலவுவதாக அவரே கூறியிருக்கிறார். அவ்வாறு இடம்பெறுகையில் மிகவும் துரிதமாக அரசாங்கத்தின் அன்புக்குரியவர்களினதும் அரசாங்கத்தின் அமைச்சர்களினதும் வழக்குகள் வாபஸ்பெறப்பட்டு வருகின்றன. இது ஒரு பாரதூரமான நிலைமையாகும். அதனால் சட்டம், நீதிமன்றம் பற்றிய நம்பிக்கை சிதைவடைந்து வருகின்றது. சான்றுகள் சகிதமே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. அரசாங்கம் மாறும்போது சான்றுகள் எவ்வாறு மாறும்? அது ஒரு புதிர். அதனால் சர்வதேச நற்பெயருக்கும் களங்கம் எற்படுகின்றது. இந்த வழக்குகள் மனித உரிமைகள் மீறப்பட்ட, பாரியளவில் பேசப்பட்ட வழக்குகளும் வாபஸ்பெறப்பட்டுள்ளன.
அதைப்போலவே கடந்த காலத்தில் பொலிஸ் பகிரங்கமாக மக்களைத் தாக்குகின்ற தொந்தரவு செய்கின்ற தருணங்களை நாங்கள் காண்கிறோம். பொலிஸ் உத்தியோத்தர்களின் பிரச்சனையைப் பார்க்கிலும் சட்டம் அமுலாக்கப்படுகின்ற கட்டமைப்பு சீரழிந்துள்ளமையாகவே இதனை நாங்கள் காண்கிறோம். சட்ட அமுலாக்கலின்போது நெறிமுறையோ மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற கலாசாரமோ புலனாவதில்லை. இராஜாங்க அமைச்சர் கூறுகின்ற கூற்றுக்களிலிருந்து இந்த நிலைமை மென்மேலும் தீவிரமடைகின்றது. பொலிஸ் சம்பந்தமான மனித உரிமைகள் வழக்குகள் 06 மாதங்களுக்குள் நிறைவடையாவிட்டால் வாபஸ் பெறப்படுவதாக அமைச்சர் கூறுகிறார். இந்த நாட்டில் எந்த வழக்கு 06 மாதங்களில் புலன்விசாரண செய்யப்பட்டது? எனவே இந்த சமிக்ஞைகளிலிருந்து சமூகம் எதனை உணர்கின்றது. சட்டத்தை அமுலாக்குகின்ற உத்தியோகத்தர்களுக்கு அரசியல் அதிகாரத்திற்கு கட்டுப்படாமல் இயங்கமுடியாத நிலை உருவாகி வருகின்றது. இவையூடாக அரசாங்கம் தனது ஆற்றாமையை மூடிமறைத்திட முயற்சிசெய்து வருகின்றது.
மக்கள் இப்போது ஏமாறுகின்ற யுகத்தை நிறைவுசெய்து வருகிறார்களென நாங்கள் நினைக்கிறோம். மக்கள் அண்மைக்கால வரலாற்றில் அதாவது 2015 இலும் 2019 இலும் நிலவுகின்ற அரசியல் பற்றி பாரிய விமர்சனத்துடன் அரசாங்கத்தை மாற்ற ஒன்று திரண்டார்கள். அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்திடம் ஏமாந்தார்கள் மற்றும் மக்கள் நன்றாக பாவிக்கப்பட்டார்கள் என்ற விடயம் தற்போது உரையாடலுக்கு இலக்காகி உள்ளது. மீண்டுமொரு தடவை அவ்வாறு ஏமாற்றப்பட இடமில்லை என நாங்கள் நினைக்கிறோம். மக்களின் பிரதிபலிப்பிலிருந்து நாங்கள் அதனை உணர்கிறோம். இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் இனவாதத்ததையோ அநீதியையோ விரும்புபவர்கள் அல்ல. இந்த நாட்டின் அரசியல்வாதிகளே அந்த திசையை நோக்கித் தள்ளுகிறார்கள். மீண்டுமொரு தடவை எங்களை ஏமாற்றிவிட முடியாது என்ற செய்தியை மக்கள் மிகவும் பலம்பொருந்தியவகையில் அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுக்க வேண்டும்.