தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவை அங்கத்தவர் கலாநிதி ஹரினி அமரசூரிய
தேசிய மக்கள் சக்தி இரண்டாயிரத்தி பத்தொன்பதில் தொடங்கிய பயணத்தின் தீர்வுக்;கட்டமானதும் முக்கியமானதுமான திருப்புமுனைக்கு இன்று வந்துள்ளது. கொவிட் தடைகளுக்கு மத்தியில் நாங்கள் செய்த வேலைகளின் பெறுபேறாக எமது தலைமைத்துவத்தையும் நிறைவேற்றுப் பேரவையையும் அறிமுகஞ்செய்ய எம்மால் இயலுமாயிற்று. எமக்கிடையில் நிலவிய உரையாடல்கள,; கொள்கை வகுத்தல் வேலைத்திட்டத்தின் ஊடாக இந்த இடத்திற்கு வருகைதந்துள்ளோம். எம்மை கேள்விக்குட்படுத்தியவர்கள் எம்மை விமர்சித்தவர்கள் பலர் இங்கு இருக்கிறார்கள். மேலும் பலர் இணையத்தளம் ஊடாக எம்மோடு இணைந்துள்ளார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.
தேசிய மக்கள் சக்தி என்பது, உரையாடல்கள் ஊடாக நின்றுவிடாத செயற்பாங்கிற்குள்ளே முன்நோக்கிச் செல்கின்ற ஓர் அமைப்பாகும். இன்றைய காலகட்டத்தில் தேசிய மக்கள் சக்தியை கட்டியெழுப்பியமைக்கான பிரதான காரணம் எமது நாட்டையும் எமது வாழ்க்கையையும் இதைவிட அழகான வசதியான இடத்திற்கு வைப்பதாகும். ஒருவரையொருவர் அழுத்தத்திற்கு இலக்காக்குவதைவிட ஒருவரையொருவர் பேணிப்பாதுகாக்கின்ற, இயற்கையை அழிப்பதற்குப் பதிலாக கட்டிவளர்க்கின்ற, கலாசாரரீதியாக முன்னேற்றமடைந்த மனிதநேயம்கொண்ட சமூகமொன்று எமக்கு உரித்தாக வேண்டுமென நாங்கள் நம்புகிறோம். அத்தகைய உலகமொன்றை உருவாக்குவதற்கான வேலைத்திட்டமொன்று. அர்ப்பணிப்பு, அரசியல் தலைமைத்துவம் மற்றும் பாவனையொன்று எம்மிடம் இருக்கின்றது. இதைப்போன்ற பல ஆட்களும் அமைப்புக்களும் உள்ளனவென்பது எங்களுக்குத் தெரியும். அந்த அனைவரும் ஒன்றுசேர்வதற்கான மேடையொன்றைத்தான் நாங்கள் கட்டியெழுப்பி இருக்கிறோம்.
இன்று எமது நாடு இருக்கின்ற இடத்திற்கு இழுத்துப்போட்ட பிரதான காரணம் எம்மிடையில் இருக்கவேண்டிய ஈடுபாடுகள், ஒத்துழைப்பு, கூட்டுமனப்பான்மை அழிக்கப்பட்டமையாகும். அது தானாகவே இடம்பெற்ற ஒன்றல்ல. அழிக்கப்பட்டது. சமூமொன்று இல்லையென கற்பிக்கப்பட்டது. போட்டித்தன்மை நிறைந்த தன்னலம் கருதுகின்ற தனிப்பயனாளிக்கப்பட்ட மனிதனொருவன் சமூகத்திற்கு அறிமுகஞ் செய்யப்பட்டான். நாங்கள் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகள் சாதாரணமானதெனவும் இயற்கையானதெனவும் எங்களுக்கு உணர்த்தப்பட்டது. இதனால் இந்த நிலைமைகளை மாற்ற முடியாதென எமக்கு கூறப்பட்டது. இல்லாவிட்டால் நாங்கள் எதிர்நோக்குகின்ற சிக்கல்கள் தனிப்பட்ட பலவீனங்கள் என கூறப்பட்டது. எனவே தனித்தனியாக தீர்த்துக்கொள்ளுமாறு எமக்கு வற்புறுத்தி அரசியலில் இருந்து எம்மை விலக்கிவைத்தார்கள். சனநாயகச் செயற்பாங்கில் நாங்கள் வெறுமனே பார்வையாளர்களாக மாற்றப்பட்டோம். எதிர்பாரப்பு மற்றும் ஒத்துணர்வுக்குப் பதிலாக குரோதமும் உதாசீனப்போக்கும் உருவாக்கப்பட்டது.
ஆட்சியாளர்களும் அவர்களின் நண்பர்களும் செல்வந்தர்களாகி நாங்கள் எல்லாவிதத்திலும் ஏழைகளானதே இறுதியில் எமக்கு நேர்ந்தது. இது மாற்றியமைக்கப்படல் வேண்டும். கூட்டுமனப்பான்மையும் பொதுமையும் என்பது தனிப்பட்ட சுதந்திரத்தையும் அடையாளத்தையும் அற்றுப்போகச் செய்விப்பதல்ல. தனிப்பட்ட சுதந்திரத்தை பாதுகாத்துக்கொண்டு கூட்டுமனப்பான்மையயை மதிக்கின்ற சமூகமொன்றை உருவாக்க முடியும். ஆனால் இன்று சமூகத்திற்கும் ஆளுக்கும் இடையில் சமநிலை கிடையாது. இன்றுள்ள பெறுமானங்கள் மற்றும் பாவனைகள் மூலமாக தனிப்பட்ட நோக்கங்களும் தனியான பயணமுமே இருக்கின்றமையே எமக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது. எமது ஈடுபாடுகள், உறவுகள் மற்றும் எமது குடும்பங்கள் போன்றே பொது நன்மைகளே அதன் மூலமாக அழிக்கப்படுகின்றது. ஒவ்வொரு மனிதனும் தேடுகின்ற இடைத்தொடர்புகளே அதன் மூலமாக கீழடக்கப்படுகின்றது. பொது நன்மைக்காக இருக்கின்ற அர்ப்பணிப்பு, சேவை புரிவதற்குள்ள ஆர்வம் அழிக்கப்பட்டுள்ளது. போட்டித்தன்மைக்கும் மனிதப் பண்புகளுக்கும் இடையில் சமநிலை அவசியமாகும். இந்த சமநிலை அற்றுப்போனமையால் பிரச்சினைகளுக்கான தீர்வினைக்காண ஆட்கள் என்றவகையில் தூண்டப்பட்டுள்ளார்கள். ஆனால் இன்று நாங்கள் முகங்கொடுப்பது பொது மற்றும் கட்டமைப்புசார்ந்த பிரச்சினைகளையாகும். எமது கல்வி, சுகாதாரம், போக்குவரத்து இவையனைத்திலும் இருப்பது கட்டமைப்புசார்ந்த பொதுப் பிரச்சினைகளாகும். எனவே இந்த நிலைமைகளை மாற்றியமைத்திட கட்டமைப்புசார்ந்த மாற்றமொன்று அவசியமாகும். அந்த மாற்றத்தை தனித்தனியாகவன்றி கூட்டாகவே ஏற்படுத்திக்கொள்ள முடியும். எம்மை சிறைப்படுத்தியுள்ள மூடநம்பிக்கைகள், மனோபாவங்கள், விஞ்ஞானரீதியற்;ற கருத்துக்கள் தற்போது நிராகரிக்கப்பட்டு வருகின்றன.
முழு உலகுமே ஒரு புதிய பாதையைத் தேடிக்கொண்டிருக்கின்றது. புதிய பாதை திறக்கப்பட்டுள்ளது. கொவிட் நெருக்கடியிலிருந்து மாற்றம் பற்றிய ஒருசில பாடங்கள் எமக்கு கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. முழு உலகுமே தற்போது அந்த மாற்றத்திற்காக தூண்டப்பட்டுள்ளது. அந்த புதிய உலகம் எம்மருகில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றதெனும் நற்செய்தியை இன்று காலையில் கேள்விப்பட்டோம். சிலீ தேசத்தில் சனாதிபதி தேர்தல் முடிவுகளின்படி ஒரு மாணவர் தலைவராக விளங்கிய கேப்ரியல் வொறிட் வெற்றிபெற்ற சனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இடதுசாரி, முற்போக்குவாத, சனநாயகத்தை மதிக்கின்ற அனைவருக்கும் அது பாரிய சமிக்ஞை என நான் நினைக்கிறேன். எம்மால் இந்த உலகத்தை மாற்றியமைத்திட இயலுமென்ற நம்பிக்கையின் பேரில்தான் தேசிய மக்கள் சக்தி கட்டியெழுப்பபட்டது. வாருங்கள்! நாங்கள் வேலைசெய்வோம்: வேலைகளை பொறுப்பேற்போம்: நாங்கள் அர்ப்பணித்திடுவோம், புதியதோர் உலகம், இன்றைய தினத்தைவிட அழகான உலகத்தை உருவாக்கிட ஒன்றுசேர்வோம்: அதனைக் கட்டியெழுப்புவோம்.