சனாதிபதி,
சனாதிபதி அலுவலகம்,
கொழும்பு.
பொருளாதார மற்றும் சமூகரீதியான உறுதிநிலையை ஏற்படுத்துவதற்கான தேசிய சர்வகட்சி வேலைத்திட்டத்தை அமுலாக்குதல்
மேற்படி விடயம் சம்பந்தமாக தங்களால் எனக்கு அனுப்பிவைக்கப்பட்ட தங்களின் PS/DCA/03/02 இலக்கமும் 2022 ஓகத்து 04 ஆந் திகதிய கடிதம் சம்பந்தமானது.
மேற்படி கடிதம் மூலமாக தங்களால் சர்வகட்சி அரசாங்கமொன்றை நிறுவிக்கொள்ளல் பற்றிய பேச்சுவார்த்தைக்காக எமது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நாடு எதிர்நோக்கியுள்ள மிகவும் பாரதூரமான பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு குறுங்கால ரீதியாகவேனும் தீர்வுகளை முன்வைத்து, மக்கள் அனுபவித்து வருகின்ற துயரங்களுக்கு நிவாரணம் வழங்கி இடைக்காலத்திற்காக சர்வகட்சி வேலைத்திட்டமொன்றுக்கு செல்வதற்கான நேர்மையான அவசியப்பாடு இருந்திருப்பின் முன்னாள் சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சனாதிபதி தனது சனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து நாட்டிலிருந்து வெளியேறியமையும் அதன் பின்னர் தோன்றிய நிலைமையுமே அத்தகைய சந்தர்ப்பமாகும். அத்தகைய எவருமே ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவரதும் இணக்கப்பாட்டுடனான சர்வகட்சி அரசாங்கமொன்றை கட்டியெழுப்புவதற்காக கிடைத்த மிகச்சிறந்த சந்தர்ப்பம் இன்றளவில் கைநழுவிச் சென்றுள்ளது.
அதன்போது தேசிய மக்கள் சக்தி என்றவகையில் நாங்கள் சர்வகட்சி அரசாங்கத்திற்கான யதார்த்தபூர்வமான முன்மொழிவினை சமர்ப்பித்து பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டோம். அங்கு எமது முன்மொழிவாக அமைந்தது பின்வருமாறு.
- சனாதிபதி விலகிய பின்னர் வெற்றிடமாகிய சனாதிபதி பதவிக்கு எதிர்கால அரசியல் அதிகாரக் கருத்திட்டமற்ற பாராளுமன்ற உறுப்பினரொருவர் அரசியலமைப்பிற்கு அமைவாக பாராளுமன்றத்தில் இருந்து நியமித்துக்கொள்ளலும் பிரதமர் பதவிக்காக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகளின் இணக்கத்துடன் பாராளுமன்ற உறுப்பினரொருவர் நியமிக்கப்படுதல்.
- சர்வகட்சி அரசாங்கத்துடன் இணைகின்ற அனைத்துக்கட்சிகளும் சமமான உரிமைகொண்ட பங்காளிகளாக கருதப்பட்டு அந்த அரசாங்கத்தின் அனைத்துவிதமான தீர்மானம் மேற்கொள்ளல் மற்றும் அந்த அனைத்து தரப்பினர்களும் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்ற மிகச்சிறிய அமைச்சரவை நியமிக்கப்படுதல்
- அந்த சர்வகட்சி அரசாங்கம் ஓர் இடைக்கால அரசாங்கமாக கருதப்பட்டு 06 மாதங்கள் எனப்படுகின்ற குறுகிய காலத்திற்காக அந்த அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்டு அதன்பின்னர் பொதுத்தேர்தலை நடாத்தி புதிய மக்கள் ஆணையுடன் தாம்விரும்பிய ஆட்சியை உருவாக்கிக் கொள்வதற்காக மக்களுக்கு வாய்ப்பு வழங்குதல் ஆகிய பிரதான விடயங்களாகும்.
உத்தேச சர்வகட்சி அரசாங்கத்தின் செயற்பொறுப்பாக அமைவது, நாட்டில் நிலவிய மக்கள் போராட்டத்தின் எதிர்பார்ப்பாகவும் அமைந்த,
- மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதாரச் சிரமங்களுக்கு சீக்கிரமான நிவாரணங்களை வழங்கி நாட்டை மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டுவருதல்
- சனாதிபதி பதவியின் தத்துவங்களை இயலுமான உச்ச அளவில் குறைக்கின்ற மற்றும் மக்களின் சனநாயகரீதியான உரிமைகளை வலுப்படுத்துகின்ற, சாதகமான அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவதற்கான முன்மொழிவுகளைக்கொண்ட அரசியலமைப்புத் திருத்தமொன்றை நிறைவேற்றிக்கொள்ளல்.
- நாட்டில் புரியப்பட்டுள்ள மோசடிகள், ஊழல்கள் மற்றும் பொதுப்பண விரயத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற பலம்பொருந்திய நடவடிக்கைகள் என்றவகையில், கடந்த காலத்தில் மோசடிகள் – ஊழல்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள, பல்வேறு காரணங்களின்பேரில் விடுவிக்கப்பட்டுள்ள வழக்குகள் சம்பந்தமான மீளாய்வொன்றினை மேற்கொண்டு நீதிமன்றத்திடம் மேன்முறையீடு செய்தல்
- இலஞ்சம் அல்லது ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினால் இடைநடுவில் பல்வேறு தொழில்நுட்ப காரணங்களின்பேரில் வாபஸ்பெறப்பட்டுள்ள வழங்குகளை மீண்டும் தாக்கல் செய்தல்
- மோசடிகள் மற்றும் ஊழல்கள் பற்றி தற்போது புலனாய்வு நிறுவனங்களுக்கு கிடைத்துள்ள மற்றும் புலனாய்வு தாமதித்து மூடிமறைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் பற்றி துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு வழக்குத் தாக்கல் செய்தல்
- ஆயினும் நாடு எதிர்நோக்கியுள்ள சமூக, பொருளாதார, அரசியல் நெருக்கடிகளை தீர்த்துவைப்பதற்காக ஆழமான பொருளாதார மற்றும் அரசியல்ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள இடைக்கால சர்வகட்சி ஆட்சிக்கு இயலுமை கிடையாதென்பதால் மக்களின் அங்கீகாரம்கொண்ட மக்கள் ஆணைக்காக 06 மாதங்கள் போன்ற குறுகிய காலத்திற்குள் தேர்தலை நடாத்துதல்
எமது இந்த முன்மொழிவினை அத்தருணத்தில் ஈடேற்றிக்கொள்ள இயலாமல் போனதோடு உங்களால் பாராளுமன்றத்தில் ராஜபக்ஷநேயமுடைய 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைக்கொண்டு சனாதிபதியாகி ரனில் – ராஜபக்ஷ அரசாங்கமொன்று நிறுவிக்கொள்ளப்பட்டது.
தற்போது நிலவுவது மக்கள் ஆணை இல்லாதொழிந்த, மக்களின் எதிர்ப்பிற்கும் இலக்காகிய ரனில் – ராஜபக்ஷ ஆட்சியாகும். உங்களை உள்ளிட்ட ராஜபக்ஷ குழுவினால் அந்த ஆட்சி நிறுவப்பட்டு அதன் பங்காளிகளாக அமையுமாறு எமது கட்சிக்கு அழைப்பு விடுப்பதே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அது நேர்மையாகவே சர்வகட்சி வேலைத்திட்டமொன்றுக்கான சர்வகட்சி அரசாங்கமொன்றை நிறுவுகின்ற தேவையுடன் மேற்கொள்ளப்படுவதில்லை என்பது மிகவும் தெளிவாகின்றது. குறைந்தபட்சம் தற்போது நீங்கள் நிறுவியுள்ள ஆட்சி எவ்வளவு காலத்திற்கு செல்லுபடியாகும் என்பதுகூட தங்களின் தரப்பினால் தெளிவுபடுத்தப்படவில்லை.
அதற்கிணங்க சர்வகட்சி அரசாங்கம் பற்றிப் பேசுவது இனிமேலும் யதார்த்தபூர்வமானதாக அமையாத பயனற்ற முயற்சியாகும்.
எனவே தற்போது நிறுவப்பட்டுள்ள தங்களினதும் ராஜபக்ஷாக்களினதும் அரசாங்கத்தின் பங்காளிகளாக அமைவது பயனற்றதென்பதை நாங்கள் திடமாக வலியுறுத்துகிறோம்.
எவ்வாறாயினும் எமது நாடும் மக்களும் எதிர்நோக்கியுள்ள இந்த நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்காக ஏதெனுமோர் ஏற்றுக்கொள்ளக்கூடிய யதார்த்தபூர்வமான வேலைத்திட்டமொன்றை திட்டவட்டமான ஒரு காலச்சட்டகத்தைக் கொண்டதாக நீங்கள் முன்வைப்பீர்களாயின் மக்களின் பக்கத்தில் இருந்துகொண்டு அதற்கு ஆக்கமுறையான பிரதிபலிப்பினைச்செய்ய நாங்கள் தயார்.
மறுபுறத்தில் சர்வகட்சி அரசாங்கமொன்றுக்காக எதிர்த்தரப்புக் கட்சிகளுக்கு அழைப்புவிடுக்கின்ற நீங்கள் அதேவேளையில் நாட்டில் அவசரகாலச்சட்டத்தை அமுலாக்கி, அரசியலமைப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமையை அபகரிக்க நீதிமன்ற கட்டளையைப் பெற்றுக்கொள்ள முயற்சிசெய்து, கடந்த காலத்தில் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட அதன் தலைவர்களையும் செயற்பாட்டாளர்களையும் கைதுசெய்து அடக்குமுறையை நாட்டில் அமுலாக்கி வருகிறீர்கள். அத்தகைய அடக்குமுறைக்கு நாங்கள் முற்றாகவே எதிரானவர்கள் என்பதை மேலதிக விடயமாக குறிப்பிடுகிறோம்.
இறுதியாக “சர்வ கட்சி” அல்லது “பல் கட்சி” என்ற நாமத்தின்கீழ் நிகழ்கால பாராளுமன்றத்தில் நிறுவப்படுகின்ற அரசாங்கத்திற்கு நீண்டகாலம் நாட்டை ஆட்சிசெய்வதற்கான மக்கள் ஆணையோ நெறிமுறைசார்ந்த உரிமையோ கிடையாதென்பதையும் இந்த நாடு வீழ்த்தப்பட்டுள்ள நிகழ்கால நெருக்கடிக்கு உறுதியானதும் நீண்டகாலரீதியானதுமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய புதிய ஆட்சியொன்றை உருவாக்கிக்கொள்வதற்காக துரிதமாக பொதுத்தேர்தலை நடாத்தி புதிய மக்கள் ஆணைக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்பதையும் கடுமையாக வலியுறுத்துகிறோம்.
நன்றி,
இப்படிக்கு,
அநுர திசாநாயக்க,
தலைவர்,
தேசிய மக்கள் சக்தி 2022.08.10