சட்டத்தரணி சுனில் வட்டகல
தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாநாட்டுக்கு முட்டைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்திற்கு பொறுப்புக்கூறவேண்டிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். அந்த இருவரதும் வெளிப்படுத்தல்கள் ஊடாக விடயங்களை ஆராய்கையில் இந்த சம்பவத்தின் பின்னால் பொறுப்புவாய்ந்த ஒருவர் அல்லது குழுவொன்று இருப்பது தெளிவாகின்றது. இது ஒரு குற்றவியல் தவறாகும். குற்றவியல் சட்டத்தின் அடிப்படைச் சித்தாந்தங்கள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன. பொலிஸ் மா அதிபர் இற்றைவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? சரியாக வாக்குமூலமொன்றைக்கூட பதிவுசெய்யவில்லை. இலங்கைப் பொலிஸ் இது சம்பந்தமான சான்றுத் தொடர்களைத் தேடிக்கொள்ளவேண்டும். இந்த சங்கிலித் தொடரின் ஒவ்வொரு கணுவையும் தேடிக்கொள்ளும் ஆற்றல் பொலீசுக்கு உண்டு. ஆனால் அவற்றைப் பாவனைக்கு எடுக்கின்ற சாயல் தென்படவில்லை.

சனாதிபதிக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் உடனடியாக விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு பிரசன்ன ரணதுங்கவினால் இரண்டு கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதனைப் பார்த்ததும் கள்வனைப் பிடியுங்கள் என்று கள்வனே ஓடுவதுபோன்ற ஒரு வேலைபோல் எனக்குத் தோன்றியது. எவ்வாறாயினும் கபினற் அமைச்சரொருவர் சனாதிபதியர்களிடம் வேண்டுகோள் விடுத்தும் இன்னமும் வாக்குமூலம் பெறப்படவில்லை என்பது பற்றி எமக்குப் பிரச்சினையொன்று இருக்கின்றது. அதனோடு தொடர்புடைய ஆட்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அதற்காக வந்த ஒருவர் மஹகெதர விஜயஆரச்சிகே ரன்மல் அசித்த குமார விஜேரத்ன ( முன்னைய பெயர் : கேப்ரியல் ரத்மல் அசித்த குமார) இரண்டாவமர் ஆனந்த பண்டார, கம்பொல. ஒருவர் அவன்ற்காட் கம்பெனியுடன் தொடர்புடைய புகைப்படங்களில் இருக்கிறார். இந்த ஒழுங்கமைந்த அமைப்பு அவன்காட் கம்பெனியுடன் நேரடியாக தொடர்புடையதாகும். அவன்காட் கம்பெனியின் தலைவர் சனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான ஒருவராவார்.
இன்று அமைச்சர் ரமேஷ் பத்திரண இந்த அரசாங்கத்தை சிரமத்திற்குள்ளாக்க மேற்கொள்ளப்பட்ட செய்த ஒரு வேலை எனக் கூறுகிறார். சனாதிபதிக்கு நெருக்கமானவரின் பிரத்தியேக பாதுகாப்பு நிறுவனத்தின் ஒரு குழுவினர்தான் இந்த தாக்குதலில் தொடர்புபட்டார்களென நாங்கள் கூறகிறோம். எனவே அரசாங்கம் நேரடியாக தொடர்புட்டுள்ளதென நாங்கள் கூறகிறோம். இது சம்பந்தமாக சனாதிபதி விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும். எமக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளது. மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்திக்கு இருக்கின்ற கவர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாமல் மேற்கொண்ட தாக்குதலே இது. சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். பொலீசாரால் விசாரணைகளை முன்னெடுத்துச்செல்ல முடியும். அம்பேபிட்டிய படுகொலை சம்பவம் எமக்கு ஞாபகம் இருக்கின்றது. துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர் வேறோர் ஆள். இறுதியில் ஒத்தாசை புரிந்தமைக்காக பொட்ட நௌபரே மரண தண்டனைக்கு இலக்கானார். எனவே இந்த முட்டைத் தாக்குதல் சம்பவத்தின் பிரதிவாதி ரூபா 5000 வாங்கிக்கொண்டு வந்தவர் அல்ல. இந்த சம்பவத்திற்கு ஒத்தாசை புரிந்தவர்தான் உண்மையான பிரதிவாதி. சனாதிபதி இதில் இடையீடுசெய்ய வேண்டும். உண்மையான பிரதிவாதி வெளிப்படுத்தப்படாவிட்டால் இதன் பின்னால் அரசாங்கம் இருக்கின்றது என்பதில் சந்தேகமே கிடையாது. அதைப்போலவே நாங்கள் இந்த விசாரண தொடர்பில் கவனத்துடன் இருக்கிறோம்.
முட்டை ஓர் ஆரம்பம் மாத்திரமே. இதன் பின்னர் என்ன வேண்டுமானாலும் நடைபெறலாம். அனைத்திற்குமான பொறுப்பினை சனாதிபதி உள்ளிட்ட இந்த குழுவினர் ஏற்றுக்கொள்ள வேண்டும்….
சட்டத்தரணி உபுல் குமரப்பெரும
இந்த சம்பவம் ஒரு சாதாரணமான முட்டைத் தாக்குதல் அல்ல. எதிரியொருவர்மீது முட்டை, தக்காளி வீசுவதைப் போலன்று. அதன் பின்னால் பாரதூரமான நிலைமையொன்று உள்ளது. அதனை நெறிப்படுத்தியவர் பிரசன்ன ரணதுங்கவே என கைதுசெய்யப்பட்டவர்கள் கூறியுள்ளார்கள். அதைப்போலவே சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் அவன்காட் கம்பெனியுடன் தொடர்புடையவரென்பது பூர்வாங்க விசாரணைகள் மூலமாக வெளிப்பட்டுள்ளது. இந்த அவன்காட் நிறுவனம் என்றால் என்ன? இந்த நாட்டில் முப்படையினதும் பொலீசினதும் ஆயுதங்களை வாடகைக்குப் பெற்று பேணிவரப்படுகின்ற கூலிப்படையாகும். இந்த நிறுவனத்தில் இலங்கை இராணுவத்திற்குச் சொந்தமான ரீ 56, ஏ.கே. 47, ரீ 81 மெஷின் கன், சப் மெஷின் கன் போன்ற அனைத்து ரகங்களையும் சேர்ந்த ஆயுதங்கள் இருக்கின்றன. அதைப்போலவே இது ஓர் ஒட்டுப்படையாகும். இந்த ஒட்டுப்படை சம்பந்தமாக பலவிதமான விமர்சனங்கள் நிலவின. அதனால் அந்த கம்பெனிக்குச் சொந்தமானதாக நிலவிய வணிகச் செயற்பாடுகள் கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டன. இந்த கம்பெனியில் இராணுவத்திலிருந்து இளைப்பாறிய மேஜர் ஜெனரல்மார்கள், கடற்படைத் தளபதிகள், சிப்பாய்கள் அனைவரும் இருக்கிறார்கள். மிகவும் சிறந்த பயிற்சியைப்பெற்ற ஓர் இராணுவமாகும். இதனால் இருக்கின்ற பயங்கரமான நிலைமை என்ன? இந்த சம்பவத்தைப் பிடித்துக்கொள்ள இயலாமல் போயிருந்தால் அடுத்ததாக என்ன நடக்கக்கூடும்.

இது ஒரு சாதாரணமான சிக்கியுரிட்டி பர்ம் அல்ல. ஆயதங்களை கைவசம் வைத்துள்ள ஒட்டுப்படையாகும். இராணுவத்தை ஒத்த அல்லது அதைவிட அதிகமான ஒழுக்கம் நிலவவேண்டும். இராணுவம் அரசாங்கத்திற்கு பொறுப்புக் கூறுகின்றது. இந்த ஒட்டுப் படைக்கு பொறுப்புக் கூறுவது யார்? இந்த நிறுவனத்தின் தலைவரே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் திரு. அநுர திசாநாயக்கவிற்கு, மக்கள் விடுதலை முன்னணிக்கு பல பாரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சவால்களை விடுத்துள்ளார். அவதூறான கூற்றுகளை வெளியிட்டுள்ளார். இப்படிப்பட்ட ஆளொருவர் தலைமை வகிக்கின்ற ஒட்டுப்படைக்குப் பொறுப்புக் கூறுபவர் யார்? இத்தகைய ஒட்டுப்படைக்கு ஆயுதம் தரித்திட அனுமதிப் பத்திரம் வழங்குவது பாதுகாப்பு அமைச்சாகும். பாதுகாப்பு வழங்குகின்ற நிறுவனமாயினும் அனுமதிப்பத்திரம் வழங்குவது பாதுகாப்பு அமைச்சாகும். அவன்காட் நிறுவனத்தின் ஆட்கள் ஒரு கட்சி மாநாடுமீது தாக்குதல் நடாத்துவார்களாயின் அவர்கள் மேற்கொள்வது சம்பந்தப்பட்ட அனுமதிப்பத்திரம்பெற்ற கம்பெனியின் அலுவலையா? அது பற்றி இந்நாட்டு மக்கள், ஊடகங்கள் போன்றே பாதுகாப்பு அமைச்சும் நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நிஸ்ஸங்க சேனாதிபதி ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வித்துக் கொள்வதற்கான தூதராக விளங்குகிறார். பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவும் நிஸ்ஸங்க சேனாதியிடமே சனாதிபதிக்கு செய்திகளை எடுத்துச் செல்லுமாறு கூறுவார். நிஸ்ஸங்க சேனாதிபதிக்கும் சனாதிபதிக்கும் இடையிலான தொடர்பு என்னெவென்பது இதிலிருந்து விளங்குகின்றதல்லவா? அப்படியானல் சனாதிபதி இது சம்பந்தமாக விசாரணையைக் கட்டாயமாக மேற்கொள்ளவேண்டும். இதன் பின்னர் வருவது குண்டுதானா என்ற விடயமே இதில் உள்ள பாரதூரமான விடயமாகும். கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் மக்களுக்கு ஞாபகமிருக்கும். அரசியல் கட்சிகளுக்கே இவ்வாறு செய்வார்களாயின் சாதாரண மக்களுக்கு செய்வது என்னவாக அமையும்? எனவே பொலீசார் இந்த புலனாய்வுகளை முறைப்படி செய்யவேண்டும். தொலைபேசி அழைப்புகளின் விபரங்கள் பெறப்படல் வேண்டும். சீசீரீவீ காட்சிகள் புலனாய்வு செய்யப்படல் வேண்டும். தொலைபேசிக் கம்பெனிகளிடமிருந்து விபரங்களை பெற்றுக்கொள்ளுங்கள். இந்த சந்தேகிக்கப்படுகின்ற ஆட்கள் தொடர்புகொண்ட ஆட்கள் பற்றி விசாரித்தறியுங்கள். இவற்றை புலனாய்வு செய்வதற்கான ஆற்றல் பொலீசாரிடம் இருக்கின்றது. அதற்கிணங்கவே சரியாக குற்றஞ்சாட்டப்பட்டவர் இனங்காணப்படுவார். குற்றச்செயல்கள் சம்பந்தமான புலனாய்வுகள் பற்றி தேவையான அளவில் உதாரணங்கள் நிலவுகின்றன.
வாக்குமூலத்தைப் பதிவுசெய்யாமல் பொலீசார் உறக்கநிலையில் இருக்கிறார்கள் என்பதே பொலீசார்மீது அழுத்தம் நிலவுகின்றது என்பதை பறைசாற்றுகின்றது. பொலிஸ் மா அதிபரும் பொலீசின் ஏனைய உத்தியோகத்தர்களும் அவர்கள் சம்பளம் பெறுவது பொதுப் பணத்திலிருந்தே என்ற விடயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அரசாங்கம் சதாகாலமும் நிலவமாட்டாதென்பதை பொலிசார் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பொலீசார் நீதின்றங்கள்தோறும் அலைந்துதிரிய வேண்டி நேரிடுமென்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். முட்டை என்பது ஆரம்பம் மாத்திரமே. இதற்கு அப்பால் என்னவேண்டுமானாலும் நேரிடலாம். இதன் பின்னர் நடைபெறுகின்ற அனைத்தச் சம்பவங்களுக்கும் இந்த குழுக்கள் பொறுப்புக்கூற வேண்டும். அவன்காட் முதலாளி எவ்வளவுதான் தனக்கு நெருக்கமானவராக இருந்தாலும் சனாதிபதி இதுசம்பந்தமாக பக்கச்சார்பற்ற விசாரணையொன்றை நடாத்தவேண்டும்.
அரசாங்கம் தனது குப்பை வேலைகளை செய்துகொள்வதற்காக ஒட்டுப்படையொன்றை பேணிவருகின்றது.
சட்டத்தரணி சரித் கல்ஹேன
பொலிசார் தரப்பில் நீதி கிடைக்குமென்ற நம்பிக்கை கிடையாது. இலங்கை அரசியலில் காடையர்களை பாவிப்பதென்பது வரலாற்றுக் காலந்தொட்டே இடம்பெற்று வந்துள்ளது. நிறைவேற்று சனாதிபதி பதவியின் உருவாக்கத்துடன் பாதாள உலகம் ஈடுபடுத்தப்பட்டது. ஜேஆர் தொடக்கம் அது இடம்பெற்றது. இராணுவ அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டார்கள், கலைஞர்கள், புத்திஜீவிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் காடையர்களின் தாக்குதலுக்கு இலக்காகினார்கள். நிகழ்காலத்தில் வித்தியாசமான நிலைமையொன்றே உருவாகி இருக்கின்றது. பொலீஸ் அல்லது இராணுவத்தைப் பாவிக்காமல் அரசியல்வாதிகளின் கைகளில் அழுக்குப்படியாமல் அரசியல்வாதிகளுக்கு அவசியமான அனைத்துவிதமான குப்பை வேலைகளையும் புரியச் செய்வதற்காக ஒட்டுப்படையொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது பயங்கரமான ஒரு நவீன ஆயுதங்களைத் தரித்த, ஆயுதங்கள் பற்றிய புள்ளிவிபரங்கள்கூட இல்லாமல் அயுதப்படையொன்றை ஒரு தமிழ் மனிதனால் அல்லது முஸ்லிம் மனிதனால் பேணிவர இயலுமா? இத்தகைய தொழில் முயற்சியொன்றை ஆரம்பித்தால் ராஜபக்ஷமார்கள் ஆட்சியில் இல்லாத சந்தர்ப்பத்தில் அத்தகைய லயிசன் ஒன்றைக் கொடுத்தால் எத்தகைய எதிர்ப்பு தோன்றியிருக்கும்? இராணுவத்திலென்றால் சிப்பாய்க்கு ஆயுதமொன்றைக் கொடுத்தால் அந்த ஆயதத்திற்காக பாவிக்கின்ற ஒவ்வொரு தோட்டாவுக்கும் அவனுக்கு பொறுப்பு உண்டு. சம்பந்தப்பட்ட சிப்பாயிடம் இருந்த ஆயுதத்தின் இலக்கம்கூட இருக்கின்றது. மக்களுக்கு நாட்டுக்கு பொறுப்புக்கூற கடப்பாடு கொண்டிராத ஒழுக்கமற்ற ஒரு கும்பலுக்கு ஆயுதங்களைக்கொடுத்து காடைத்தனமான ஒட்டுப் படையொன்றை பேணிவருகின்ற நிலைமை தற்போது உருவாகி இருக்கின்றது. அது பயங்கரமானது. முட்டையிலிருந்து ஆரம்பித்தாலும் இலக்கு நாமாக அமையக்கூடும். எனினும் இது எங்கே போய் நிற்கும்?

முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களுமே காடையர்களை பராமரித்து வந்தார்கள். சனாதிபதிக்கு பிரதமருக்கு தேவையான எந்தவொரு காடைத்தனமான வேலையையும் செய்விக்க அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் காடையர்களை பராமரித்து வந்தார்கள். இன்று அந்த நிலைமை மாறி சனாதிபதியைச் சுற்றியுள்ள ஒருசில வணிகத் தொழில்முயற்சியாளர்கள் இந்த வேலையைச் செய்துகொள்கிறார்கள். சனாதிபதிக்கு எல்லையற்ற அதிகாரங்களைப் பெற்றுக்கொடுத்து பாராளுமன்றத்தில் 2/3 ஐப் பெற்றுக்கொடுத்து ஒருசில வணிகத்தொழில் முயற்சியாளர்களுக்கு நாட்டை ஆட்சிசெய்வதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. அதில் ஒரு தொழில் முயற்சியாளர் ஒட்டுப்படையொன்றைப் பராமரித்து வருகிறார். இது நாட்டின் சனநாயத்தின் வழியுரிமைக்கு அச்சுறுத்தலாகும். எனவே தேசிய மக்கள் சக்திக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதலாகவன்றி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதல் என்பதாலேயே இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். அதைப்போலவே இந்த ஆட்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காதன உரிமை மக்களுக்கு உண்டு.