
ராஜபக்ஷாக்களின் கொந்துராத்து முறைக்கிணங்க நியமிக்கப்பட்ட ரனில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின்பேரில் கோல்பேஸ் போராட்டக்காரர்கள் மீது பாரிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களின் சனநாயகரீதியான நியாயமான போராட்டத்தை அடக்குமுறையால் இல்லாதொழிக்க அவர் ஆரம்பத்தில் இருந்தே முயற்சிசெய்து அதன் ஒரு படிமுறையாக நேற்றிரவு மிலேச்சத்தனமான தாக்குதலொன்றை அமுலாக்கினார். பெருந்தொகையானோருக்கு காயமேற்படுத்தி பத்து பேருக்கு மேற்பட்ட எண்ணிக்கை கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இரண்டு வெகுசன ஊடகவியலாளர்களை தடுத்துவைத்திருந்தமையால் பொழுதுபுலரும்வரை தேடிக்கொள்ள முடியவில்லை. தாக்குதலுக்கு இலக்காகியவர்கள் மத்தியில் சட்டத்தரணியொருவரும் இருக்கிறார். வெகுசன ஊடகவியலாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள்மீது தாக்குதல் நடாத்தி அந்த இடத்தில் இருந்தவற்றை உடைத்தெறிகின்ற கீழ்த்தரமான தாக்குதலை தேசிய மக்கள் சக்தி கண்டிக்கின்றது. இந்த நிலைமையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டுமென நாங்கள் மக்களை வலியுறுத்துகிறோம். சனநாயகரீதியாக கடந்த காலம் பூராவிலும் போராட்டத்தில் இருந்த மக்கள் இந்த நிலைமையை தோற்கடித்திட உடனடியாக அணிதிரளவேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறோம். இரத்தம் மீது பயணித்து ராஜபக்ஷாக்களின் நோக்கங்களை ஈடேற்ற ரனில் விக்கிரமசிங்க தயாராகி வருகிறார். ராஜபக்ஷவிற்கோ ரனில் விக்கிரமசிங்கவிற்கோ அந்த இயலுமை கிடையாதென எமக்கு நன்றாகவே தெரியும்.
போராட்டம் நிச்சயமாக முன்நோக்கி நகரும். கோல்பேஸ் மீதது தாக்குதல் நடாத்தி மக்களின் எதிர்ப்பினை முடிவுக்கு கொண்டுவர முயற்சிசெய்யப்படுமாயின் அது அவ்வாறு நடைபெற மாட்டாது. கோல்பேஸ் மைதானம் போராட்டத்தின் ஒரு கேந்திரநிலையமாக இருந்தாலும் நாடுபூராவிலும் மக்கள் மத்தியில் போராட்டம் நிலவுகின்றது. நாடுபூராவிலும் இருக்கின்ற பொதுமக்கள் போராட்டத்தை அடக்குமுறையால் நிறுத்திவிட இயலாதென்பதை நாங்கள் தெளிவாகவே கூறுகிறோம். சதிநிறைந்த, கொந்துராத்து முறைக்கிணங்க ரனில் விக்கிரமசிங்கவை சனாதிபதியாக்கிய பின்னர் அடக்குமுறையை அமுலாக்கமுன்னர் போராட்டக்காரர்கள் கைப்பற்றிய இடங்களிலிருந்து படிப்படியாக நீங்கிச்சென்று கொண்டிருந்தார்கள். அத்தகைய குழுவினர்மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றது. அதனை முழு நாடும் முழு உலகுமே கண்டிக்கவேண்டும். இதனை ரனில் விக்கிரமசிங்கவின் முதலாவதும் இறுதியுமான தாக்குதலாக மாற்றிக்கொள்ள வேண்டும். மக்கள் ஆணையின்றி புண்ணியத்திற்காக பிரதமர் பதவி கிடைத்து ராஜபக்ஷாக்களின் நல்லாசியுடன் சனாதிபதி பதவியையும் பெற்ற ரனிலினால் பாதுகாக்கப்படுவது மக்கள் அல்ல. ராஜபக்ஷாக்களே. அவருக்கு சனாதிபதி பதவியைக் கொடுத்தது மக்கள் அல்ல, ராஜபக்ஷாக்களே. மக்கள் ஆணை இல்லாத ரனில் விக்கிரமசிங்கவை சனாதிபதியென எமது நாட்டில் எவருமே கணக்கெடுக்கத் தேவையில்லை. கோட்டாபய ராஜபக்ஷ விரட்டியடிக்கப்பட்டாலும் அவருக்கு மக்கள் ஆணை இருந்தது. ரனில் விக்கிரமசிங்கவிற்கு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக்கூட பெறமுடியவில்லை. போராட்டம் காரணமாக பதவியைக் கைவிடவேண்டி நேரிட்ட, மகுடங்கள் கழன்ற ராஜபக்ஷாக்களுக்கே ரனில் சேவகம் புரிகிறார். போராட்டக்காரர்களை பழிவாங்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கின்றது. அந்த கொந்துராத்து வேலை ரனிலிடமே ஒப்படைக்கப்படுகின்றது.
ரனில் விக்கிரமசிங்க ஒருபோதுமே மண்ணில் கால்பதித்து இருந்தவரல்ல. இப்போதுகூட மண்ணில் நிலவுகின்ற பாரிய மக்கள் எதிர்ப்பினை விளங்கிக்கொள்ளவில்லை. ஐந்து வருடங்களுக்காக தெரிவுசெய்யப்பட்ட சனாதிபதியை இரண்டரை வருடங்களில் விரட்டியடித்த மக்கள் அபிப்பிராயத்தை விளங்கிக்கொள்ளாமல் அவசரகால சட்டத்தைப் பிரகடனஞ்செய்து இராணுவத்தை ஈடுபடுத்தி இருக்கிறார். பயமுறுத்தி இராணுவத்தை ஈடுபடுத்துகின்ற தந்திரோபாயத்தை ரனிலைவிட சிறந்தமுறையில் ராஜபக்ஷ அமுலாக்கினார். பிரமாண்டமான சமூக பொருளாதார நெருக்கடியின் மத்தியில் அதனால் பாதிக்கப்பட்ட மாபெரும் மக்கள் எதிர்ப்பின் மத்தியில் விளையாட்டு காட்டுவது கடுகளவேனும் மூளையுள்ள ஒரு தலைவர் செய்யக்கூடியதொன்றல்ல. மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்குப் பதிலாக அச்சுறுத்தி போராட்டத்தை அடக்க முயற்சி செய்வாராயின் அது எவ்வித்திலும் வெற்றியளிக்க மாட்டாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். எவருமே பயப்படமாட்டார்கள். பயப்பட நாங்கள் இடமளிக்கவும் மாட்டோம். இந்த நாட்டு மக்களின் இறைமையை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஆட்சியொன்றை நிறுவும்வரை இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தேசிய மக்கள் சக்தி பிரமாண்டமான இடையீட்டினைச் செய்யும்.
தமது பகைவர்கள் எங்கே இருக்கிறார்கள், பிரச்சினை சரியாக என்னவென்பதை மக்கள் விளங்கிக்கொள்ளவேண்டும். மக்களால் உறுப்பினர் பதவிகூட வழங்கப்படாத ரனில் விக்கிரமசிங்கவை இந்த நாட்டின் சனாதிபதியாக்கியது ராஜபக்ஷநேயமுள்ள பாராளுமன்ற உறுப்பினர் குழுவாகும். ரனில் விக்கிரமசிங்க மாத்திரமல்ல, இந்த பாராளுமன்றமும் மக்கள் அபிப்பிராயத்திற்கு முரணானதாகும். பொதுமக்களின் விருப்பமின்றி ரனில் விக்கிரமசிங்க பிரதமராகவும், சனாதிபதியாகவும் நியமிக்கப்பட்ட மக்கள் ஆணையை திரிபுநிலையுறச் செய்வித்த பாராளுமன்றத்திற்குப் பதிலாக உண்மையான மக்கள் அபிப்பிராயத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற பாராளுமன்றத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டியது அவசியமாகும். பாராளுமன்றத்தின் இந்த உள்ளடக்கத்தை வைத்துக்கொண்டு, மக்கள் அபிப்பிராயம் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்ற உண்மையான பாராளுமன்றத்தை நியமித்துக் கொள்ளாமல் ஓரங்குலம்கூட முன்நோக்கி நகரமுடியாது. தற்போது ரனிலை விரட்டுகின்ற போராட்டம் மாத்திரமல்ல இந்த பாராளுமன்றத்தையும் சேர்த்து விரட்டவேண்டும். அதற்காக நாங்கள் கூட்டாக போராடவேண்டி உள்ளது. அதுவரை இந்த போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படும். ரனில் விக்கிரமசிங்க, கோட்டாபய கற்றுக்கொண்ட பாடத்தை கற்றுக்கொள்ளப் போகின்றார். அதற்காக எமது நோக்கங்கள், போராட்டக் கோஷங்களை சரியாக விளங்கிக்கொண்டு போராட்டங்களை மேற்கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இராணுவம் பொலீஸ் என்பவர்களும் இந்த நாட்டின் பிரசைகளே. முழுநாடுமே எதிர்த்து நிற்கையில் இராணுவத்தினாலும் பொலீஸாரினாலும் இதனை பாதுகாக்க முடியாது. புதிய படிமுறையொன்றிலான போராட்டத்தை தொடங்கவேண்டும். அதுவரை கைதுசெய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறும் அதற்காக போராடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
திருட்டு சனாதிபதி போராட்டக்காரர்களை எப்படி பாசிஸவாதிகள் எனக்கூறுவது?

நிராயுதபாணிகளான, அமைதிவழி போராட்டக்காரர்கள் மீது சனநாயக விரோதமான வன்முறைத் தாக்குதலை நடாத்தி சுற்றுப்புறத்தில் இருந்தவர்களையும் அந்த இடத்திற்குள் பிரவேசிக்க இடமளிக்காமல் இறுதியில் காயமடைந்தவர்களை அகற்றிக்கொள்ளக்கூட இடமளிக்கவில்லை. அனைத்துவிதமான அடிப்படை உரிமைகளையும் மீறி சனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அவரது பணிகளைத் தொடங்கினார். துர்நாற்றம் வீசுகின்ற அரசியலை மாற்றியமைக்குமாறே பாரிய போராட்டம் மூலமாக மக்கள் கோரிநிற்கிறார்கள். அந்த போராட்டத்தின் ஒருசில வெற்றிகள் பெறப்பட்டுள்ள பின்னணியில் ரனில் விக்கிரமசிங்கவின் தலைமையில் துர்நாற்றம் வீசுகின்ற அரசியல் கலாசாரத்தையே முன்னெடுத்துச் செல்ல முயற்சி செய்கிறார்கள். அதற்காக மக்கள்மீது தாக்குதல் நடாத்த தலைமை வகிப்பவர் ரனில் விக்கிரமசிங்கவே. இந்த சம்பவங்கள் ஏன் இவ்விதமாக வரிசைப்படுத்தப்படுகின்றன என்பதை நாங்கள் சரிவர விளங்கிக்கொள்ள வேண்டும்.
இலங்கையில் பல வருடங்களாக பிரதிநிதித்துவ சனநாயகம் பாவனையில் இருந்து வருகின்றது. மக்களின் அபிப்பிராயத்தை வெளிப்படுத்த பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. தேர்தலில் போன்றே எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்கள் ஊடாகவும் வெளிப்படுத்தவதற்கான உரிமை இருக்கின்றது. தேர்தல் நடைபெறாத நேரத்தில் மக்களுக்கு எதிரான அரசாங்கத்திற்கு போராட்டங்கள் மூலமாக தமது அபிப்பிராயத்தை வெளிக்காட்டுகிறார்கள். அவ்விதமாக அபிப்பிராயங்களை வெளிப்படுத்துபவர்களை பாசஸவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் என இந்த திருட்டு சனாதிபதி கூற ஆரம்பித்துள்ளார். மாபெரும் லிபரல்வாத, சனநாயகத்தை மதிக்கின்ற ஒருவராக தோற்றினாலும் அவரது உண்மையான இயல்பினை இந்த காலத்தில் விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. போராட்டத்தின் அடுத்த கட்டம் என்னவென்பதை நாங்கள் சரியாக தெரிவுசெய்யவேண்டும். இன்றளவில் மக்கள் ஆணையற்ற பாராளுமன்றமும், சனாதிபதியொருவரும் இருக்கிறார்கள். மக்கள் ஆணை கிடையாது என்பது மாத்திரமல்ல அனைத்துப் பிற்போக்குவாத கும்பல்களையும் அவர்களின் செயல்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற இடமாக பாராளுமன்றம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த பாராளுமன்றம் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு இடமல்ல. மக்களின் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துகின்ற இடமுமல்ல. அதனால் மக்கள் ஆணை மூலமாக புதிய பிரதிநிதிகளை நியமித்துக் கொள்வதற்காக பாராளுமன்றம் கலைக்கப்படவேண்டும். அது நாளுக்குநாள் உறுதிசெய்யப்பட்டு வருகின்றது. உருவாக்கிகொண்ட சனாதிபதியும் இன்று பதவிப்பிரமாணம் செய்கின்ற அமைச்சரவையும் மாத்திரமல்ல பாராளுமன்றமும் உண்மையாகவே மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற இடமாக மாற்றப்படவேண்டும். அதனூடாக மாத்திரமே போராட்டத்தின் இறுதி வெற்றியை அடையமுடியும்.
நாட்டை இரத்தக் களரியாக்காமல் மக்களின் ஆட்சியை தாபித்துக்கொள்ள இடமளிக்க வேண்டும்

மக்களின் அங்கீகாரம் இல்லாத ரனில் விக்கிரமசிங்கவின் ஆட்சியால் கோல்பேஸ் போராட்டக்காரர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலை அருவருப்புடன் கண்டிக்கிறோம். நாடு பூராவிலும் கடந்த காலத்தில் பல்வேறு போராட்டங்கள் நிலவினாலும் அதிக கவனத்தை வென்றெடுத்தது கோல்பேஸ் போராட்டக் களமாகும். அதன் முதலாவது கட்டத்தில் கட்சிசார்பற்ற, சர்வகட்சி போராட்டமே நிலவியது. அங்கு ரனில் விக்கிரமசிங்கவின் ஆட்களும் இருந்தார்கள். அவர் பிரதமராகிய பின்னர் முதலில் போராட்டத்தைப் பாதுகாப்பதாகவே கூறினார். அந்த மனிதன் சனாதிபதியாகி ஒரேயடியாக ஏன் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறார். இந்த நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்தினர்கூட ஒன்றுசேர்ந்து கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்ப குரலெழுப்பினார்கள். அவர் தொடர்ந்தும் இருந்திருந்தால் முதலாளித்துவ வர்க்கத்தினருக்கும் பாரதூரமான பிரச்சினை உருவாகி இருக்கும். தருணம் பார்த்து அவரது மாமாவின் அரசியலமைப்பு உறுப்புரைகளால் போராட்டத்தை கொள்ளையடிப்பதையே ரனில் விக்கிரமசிங்க செய்தார். உலக வரலாற்றிலும் இத்தகையவை இடம்பெற்றுள்ளன. எந்தவிதமான மக்கள் ஆணையும் இல்லாதவர்கள் அரசியலமைப்பினைப் பாவித்து அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள்.
அமைதிவழிப் போராட்டத்திற்கு பொதுவான தலைமைத்துவம் இருந்தமையால் பல்வேறு சிக்கலான தருணங்கள் நிலவின. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த நாட்டை இரத்தக்களரியாக்க இடமளிக்க முடியாது. மக்கள் தமது விருப்பத்தை பாவிக்க போராட்டம் காரணமாக இடமளிப்பதற்குப் பதிலாக பாசிஸவாத லேபளை ஒட்டினார். மக்களின் விருப்பத்தைப் பாவிக்க இடமளிப்பதற்குப் பதிலாக இராணுவத்தைப் பாவித்து இந்த நாட்டை இரத்தக்களரியாக்காமல் மக்களின் ஆட்சியை நிறுவ இடமளிக்கவேண்டும். இந்த நாட்டின் வரலாற்றில் 20 வருடங்களுக்கொருதடவை இரத்தம் சிந்தப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களின் அதிகாரத்தைப் பாவித்து நடாத்திவந்த இந்த நாட்டியத்தை அரசியல் நெறிமுறைகளற்ற அரசியல் புனிதத்தன்மையற்ற தவறான பிறப்பினைக்கொண்ட ஆட்சியாளன் இப்போதாவது நிலவுகின்ற நிலைமையை விளங்கிக்கொள்ள வேண்டும். மக்களின் அங்கீகாரமற்ற இராணுவத்தை ஈடுபடுத்தி இந்த கீழ்த்தரமான அரசியலை மேற்கொண்டுவர தீத்தொழில் புரிகின்ற மூலதனத்தினால் நெறிப்படுத்துகின்ற ஆட்சியாளர்கள் முயற்சி செய்வார்களாயின் அது சாதிக்க முடியாத விடயமாகும். ரனில் விக்கிரமசிங்கவின் பிரபுக்கள் வர்க்க அரசியல் இனிமேலும் செல்லுபடியாக மாட்டாது. அதைப்போலவே சனநாயகப் பாதையிலிருந்து மீறிச்செயற்பட எவ்விதத்திலும் இடமளிக்க வேண்டாமென போராட்டக்காரர்களையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். போராட்டத்தின் வெற்றி சனநாயக பாதையிலேயே நிலவுகின்றது. தேர்தல் ஊடாக மக்கள் பிரதிநிதிகளை நியமித்துக் கொள்வதன் மூலமாக மாத்திரமே தீர்வினைக் காண முடியும். ரனில் விக்கிரமசிங்க ஒரு சனநாயகவாதியெனில், லிபரல்வாதியெனில் உடனடியாக தேர்தலுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்
கேள்வி:- சமூக வலைத்தளங்களில் கோட்டாபயவின் ஆட்சி நியாயப்படுத்தபட்டு வருகின்றது. அது சம்பந்தமாக என்ன கூறகிறீர்கள்?
பதில்:- ரனில் விக்கிரமசிங்கவா கோட்டாபயவா நல்லவர் என நினைத்துவிட இயலாது. அவர்கள் ஒரே குலையின் தேங்காய்கள். ஒரே பையில் உள்ள உப்பு. கோட்டாபயவினால் ஆட்சிசெய்ய முடியாது என்பதால் கைவிட்டுச்செல்லவேண்டிய நிலயேற்பட்டது. மக்கள் விரும்பாத ஆட்சியாளர் ஒருவரை விரட்டியடித்ததும் விரும்புகின்ற ஆட்சியாளர் ஒருவரை தெரிவுசெய்ய வாய்ப்பு வழங்கவேண்டும். அதற்குப் பதிலாக மக்கள் விரும்பாத ஆட்சியாளர் அரசியலமைப்பினை பாவித்து அதிகாரத்திற்கு வந்துள்ளார். தவறான, கொள்ளைக்கார, அடக்குமுறைசார்ந்த அரசியல் கலாசாரம்கொண்ட ஒருநாட்டில் எவர் வந்தாலும் வித்தியாசமில்லை. அந்த அரசியல் கலாசாரத்தைத்தான் கோட்டாபய – ரனில் இருவரும் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். எனவே ரனிலைப் பார்க்கிலும் கோட்டா நல்லவர் எனக்கூற எவருமே பதற்றப்பட வேண்டியதில்லை.
கேள்வி:- புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- நியமிக்கப்பட்ட பிரதமரைப் பார்த்ததும் அமைச்சரவைக்கு என்ன நேரிடுமென்பது தெரிகின்றது. இந்த வயோதிபர்காளல் எமது நாட்டு இளைஞர்களின் எதிர்காலம்தீர்மானிக்கப்படுவது கவலைக்குரிய விடயமாகும். நிலவிய வகையைச்சேர்ந்த அமைச்சரவையொன்றையே அமைத்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலைமையே ரனில் விக்கிரமசிங்கவிற்கு ஏற்படும்.
கேள்வி:- அமைச்சரவையிலிருந்து சாதகமான மாற்றமொன்றை எதிர்பார்க்க முடியாது என்றா நீங்கள் கூறுகிறீர்கள்? பதில்:- எந்தவொரு விடயத்தையும் எதிர்பார்க்க முடியாது. பல பொய்யான வாக்குறுதிகளை அளித்தே அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள். சனாதிபதியாக்குவதற்காக வாக்களித்த அனைவருக்கும் கவனிப்பு காட்டவேண்டும். ஏற்கெனவே ஒரு பகுதியினருக்கு பணத்தினால் கவனிப்பு காட்டப்படடுள்ளது. இவர்களுக்கு அமைச்சர், பிரதி அமைச்சர், இராஜாங்க அமைச்சர் பதவிகளைக் கொடுக்காவிட்டால் அதிகாரத்தில் இருக்கமுடியாது. அதனால் அவர்களுக்கு கவனிப்பு கிடைக்கும். பாராளுமன்றத்தில் இருக்கின்ற திருட்டுக் கும்பலுக்கு அதிகாரத்தில் இருக்க இடமளிப்பதற்குப் பதிலாக இன்று இரவுகூட பாராளுமன்றத்தைக் கலைத்து தமது பிரதிநிதிகளை நியமித்துக்கொள்ள மக்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். பொருளாதார பிரச்சினைகள், அதன்மீது தோன்றிய சமூகப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள் ஆகிய அனைத்தையுமே புதிய மக்கள் ஆணை மூலமாகவே தீர்த்துக்கொள்ளவேண்டும். அந்த மக்கள் ஆணையை இயலுமானவரை சீக்கிரமாக பெற்றுக்கொள்ள அணிதிரளுமாறு நாங்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.