நாட்டில் வருடாந்தம் 300,000 வேலை தேடும் இளைஞர், யுவதிகள் உருவாகின்றார்கள். ஆனால் இதுவரை ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களின் தோல்வியினால் முறையான திட்டங்களை நடைமுறைப்படுத்தாத காரணத்தினால் இன்று இளைஞர் சமூகம் மற்றும் தொழிலாளர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுகின்றார்கள். அழிவுகரமான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக முழு நாடும் அனுபவிக்கும் இன்னல்களுக்கு முடிவு கட்டி வெற்றிப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
மக்களை ஒடுக்கி நாட்டை விற்கும் அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிராக குருநாகலில் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சக்தி எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அழிவின் காரணமாக கடந்த 08 மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக அறு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் பேர் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டதாகவும் ஆனால் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றுள்ளதாகவும் அவர் இங்கு வெளிப்படுத்தினார்.
சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் சென்ற சுமார் நாற்பதாயிரம் பேர் தற்போது பாதுகாப்பின்மையால் பாதுகாப்பான வீடுகளில் வாழ்ந்து வருவதாகவும், வெளிநாடு சென்ற தாய்மார்கள், சகோதரிகள் ஓமானில் விபச்சாரிகளாக ஏலம் விடப்பட்டதாகவும், இந்நிலையை முடிவுக்குக் கொண்டு வர தேசிய மக்கள் சக்தியின் மக்கள் நல அரசாங்கத்தை அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் உண்மை நிலையை மறைத்து பல்வேறு புள்ளிவிபரங்கள் முன்வைக்கப்படுவதாகவும், உணவுப் பணவீக்கம் 95 சதவீதமாக இருந்தாலும், சாமானியர்களின் வருமானமோ, மாதாந்திர சம்பளமோ அதிகரிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. மற்றும் குடிமக்கள் பெரும் உணவுப் பற்றாக்குறைக்கு ஆளாகியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.