(-2025.08.26 – Colombo-)
பொதுமக்களின் கோடிக்கணக்கான ரூபாய் செல்வத்தை அழிப்பதற்கான வரமாக அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்த இனி இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
அலரி மாளிகையில் நேற்று (26) பிற்பகல் நடைபெற்ற தேசிய பிக்கு தின நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
தங்களுக்கு வழங்கப்படும் அதிகாரத்தை எல்லையற்ற செல்வத்தைக் குவித்த மற்றும் பொதுமக்களின் பணத்தை விருப்பப்படி செலவிடும் நாசகார பாதையை மாற்றியமைப்பதற்கு உறுதியுடன் செயல்படுவேன் என்று இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி, எவ்வளவு தான் கோசம் எழுப்பினாலும் அந்தப் பயணத்தை மாற்ற முடியாது என்றும், தற்போதைய அரசாங்கம் அந்தப் பொறுப்பை நிறைவேற்றாவிட்டால் எந்த அரசாங்கமும் அதனை மேற்கொள்ளாது என்றும் தெரிவித்தார்.
எனவே, மகா சங்கத்தினர் உட்பட அனைவரும் துணிச்சல், நம்பிக்கை மற்றும் விடாமுயற்சி ஆகிய பண்புகளுடன் சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைந்து முன்னேறுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
“காலோ அயன் தே” – “இது உங்களுக்கான நேரம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த நிகழ்வுக்கு நாடு முழுவதிலுமிருந்து சுமார் ஐந்தாயிரம் பிக்குகள் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முழு உரை
இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நமக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் குறித்து நமது மகா சங்கத்தினர் மற்றும் பொது சமூகத்துடன் கலந்துரையாட வேண்டியது அவசியம். அந்த சந்தர்ப்பத்திற்கு என்னை அழைத்ததற்காக தேசிய பிக்கு முன்னணியின் ஏற்பாட்டுக் குழுவுக்கு நன்றி கூறுகிறேன்.
நமது பிக்கு சமூகத்திற்கு நமது நாடு, மக்கள் மற்றும் நமது நாட்டின் ஆட்சி தொடர்பாக ஒரு பிரிக்க முடியாத வரலாற்று பாரம்பரியமும் பொறுப்பும் உள்ளது. நமது மகா சங்கத்தினர் வரலாற்று ரீதியாக நிறைவேற்றிய மகத்தான பணியின் விளைவாக அந்தப் பொறுப்பு உருவாகியுள்ளது. இல்லையெனில், அது நமது மகா சங்கத்தினருக்கான ஆட்சி தொடர்பான அரசியலமைப்பின் விதிகளை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. நீண்ட காலமாக நமது தாய்நாடு, நமது பொது மக்கள் மற்றும் நமது ஆட்சியாளர்கள் தொடர்பாக காட்டப்பட்ட வரலாற்றுத் தலையீட்டின் காரணமாக இது நிகழ்ந்துள்ளது. ஜனாதிபதியாக, அரசியலமைப்பால் எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், உரித்தின் ஊடாக உங்களுக்குப் பொறுப்பும் கடமைகளும் வழங்கப்பட்டுள்ளன.
பௌத்தம் இன்றுவரை இலங்கை சமூகத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறது. மேலும், இன்றுவரை நமது இலக்கியம் மற்றும் எழுத்துத்துறை வளர்ச்சியில் நமது மகா சங்கத்தினர் ஆற்றிய பங்கு மகத்தானது. இலவசக் கல்விச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது மகா சங்கத்தினர் ஆற்றிய பங்கு மகத்தானது.
ராஜ்ய சபையில், நல்லையா என்ற உறுப்பினர் இவ்வாறு கூறினார்: ” பிக்குகள் இல்லையென்றால், இந்த சட்டமூலம் விவாதிக்கப்பட்டிருக்காது.” அதுதான் உரித்து, நமது நாடு ஒரு காலனித்துவ நாடாக மாறியபோது, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் உட்பட அந்த சமயத்தில் இருந்த மகா சங்கத்தினர், நமது நாட்டின் சுதந்திரத்திற்காகவும் மக்களின் சுதந்திரத்திற்காகவும் ஒரு பாரிய போராட்டம் நடத்தினர். அதுதான் நமது மகா சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தாய்நாட்டின் சுதந்திரத்தின் உரித்து.
இது தொடர்பாக ஆளுநர் மைட்லேண்ட் இங்கிலாந்துக்கு ஒரு அறிக்கையை அனுப்புகிறார். அந்த அறிக்கையில் “பிக்குமார்களின் செல்வாக்கு மிக அதிகம். பல சந்தர்ப்பங்களில், அது பிரபுக்களின் செல்வாக்கை விட அதிகமாக உள்ளது.” அதுதான் நமது மகா சங்கத்தின் வரலாற்று மரபு.
நமது தாய்நாட்டின் சுதந்திரத்திற்கும் மக்களின் உரிமைகளுக்கும் பிக்குகள் ஆற்றிய வரலாற்றுப் பங்கின் உரித்து உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த உரித்தில் ஒரு முக்கியமான மைல்கல் கடந்த ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் நிகழ்ந்ததாக நான் நினைக்கிறேன். நமது நாடு ஒரு பேரழிவு தரும் முடிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நேரத்தில், நமது நாட்டையும் மக்களையும் அந்த சூழ்நிலையிலிருந்து விடுவிப்பதற்கான போராட்டத்தில் நமது மகா சங்கத்தினர் அந்த வரலாற்று உரித்தை மீண்டும் உறுதிப்படுத்தினர். இந்த மாற்றத்தில் பிக்குகள் சிறப்புப் பங்காற்றினர். மிகவும் கடினமான அத்தியாயத்திலிருந்து வெற்றிக்கு நீங்கள் ஆற்றிய பங்கு மிகப் பெரியது.
நமக்கு இப்போது வழங்கப்பட்டுள்ள பொறுப்பு என்ன? நமக்கு முன் எவ்வாறான நாடு உள்ளது? ஒருபுறம், பொறுப்புள்ள அரசு நிறுவனங்களும், அரச அதிகார பொறிமுறையும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. பிரதிப் பொலிஸ்மா அதிபரின் மனைவி புதையல்களைத் தோண்டப் போகிறார். இராணுவத்தின் உயர் அதிகாரிகள் புதையல்களைத் தோண்டச் சென்றுள்ளனர். சிறைச்சாலையின் உயர் அதிகாரிகள் எந்தவொரு பொறுப்புக்கூறலும் அல்லது அனுமதியும் இல்லாமல் கைதிகளை விடுவித்து வருகின்றனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் பாதாள உலகத் தலைவர்களுக்கான கடவுச் சீட்டுக்களை தயாரிக்கிறது. இராணுவ முகாம்களில் இருந்து T-56 ஆயுதங்கள் வெளியில் செல்கின்றன. தமது பொறுப்பு பணத்திற்காக மாற்றியமைக்கின்றனர்.
இதேபோல், பொருளாதாரக் கட்டமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. மாத்தறைப் பகுதியில் சில கட்டிடங்கள் எந்த தேவையும் இன்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சரும் தாம் பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் பிரதேசத்திற்கு ஏற்ப ஒவ்வொரு பகுதியிலும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அந்தக் கட்டிடங்கள் உற்பத்தி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படவில்லை. அதன்படி, பொருளாதாரம் பேரழிவு நிலையை எட்டியுள்ளது.
நமது தேயிலை பயிற்செய்கை மற்றும் றப்பர் பயிற்செய்கை துயரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. நமது தென்னை மரத்திலிருந்து 89 தேங்காய்களைப் பெற முடியும். ஆனால் தற்போது தென்னை மரங்களிலிருந்து 30-40 காய்களை மட்டுமே பெற முடியும். முழு பொருளாதாரக் கட்டமைப்பும் சரிந்துவிட்டது.
சட்டத்தின் ஆட்சி சரிந்துவிட்டது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு சட்டமும், ஏழைகளுக்கு மற்றொரு சட்டமும் செயற்படுத்தப்படுகிறது. அவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்கக்கூடிய ஒரு கலாச்சாரம் உருவாக்கப்பட்டிருந்தது. அடுத்த தலைமுறைக்கு அதிகாரத்தை எவ்வாறு தயார்படுத்துவது என்ற நிகழ்ச்சி நிரலில் அவர்கள் சிக்கியுள்ளனர். எல்லையற்று செல்வத்தைக் குவிக்க அவர்கள் தங்களிடம் இருந்த அதிகாரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர்.
இந்த அழிவுகரமான பயணத்தை மாற்றியமைக்க நாங்கள் உறுதியுடன் செயல்படுகிறோம். எவ்வளவு கோசம் எழுப்பினாலும் இந்தப் பயணம் தலைகீழாக மாறாது. நானோ அல்லது எனது அரசாங்கமோ இதைச் செய்யாவிட்டால், வேறு எந்த அரசாங்கமும் இதைச் செய்யாது.
முதலில், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக இருக்க வேண்டும். நாம் அத்தகைய ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவோம். செல்வம், அதிகாரம், வரலாறு ஆகிய எதுவும் பொருட்டாகாது. நம் நாட்டில் யாராவது ஒரு குற்றத்தில் ஈடுபட்டிருந்தால், யாராவது ஊழலில் ஈடுபட்டிருந்தால், யாராவது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியிருந்தால், அவர்களை நீதியின் முன் நிறுத்த நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம். இது பழிவாங்கல் அல்ல. இது வேட்டையாடுதல் அல்ல. இப்படித்தான் பொதுமக்களிடம் நம்பிக்கையை வளர்க்க முடியும். சட்டத்தின் பொதுவான எண்ணக்கரு என்னவென்றால், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதாகும். அதை நாங்கள் நிலைநாட்டுவோம். பொதுமக்களுக்கு நீதி,நியாயம் தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்துவோம். தங்களுக்கு வழங்கப்படும் அதிகாரம், பொதுமக்களின் செல்வத்தை விருப்பப்படி அழிக்கும் சக்தியாக எண்ணம் கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்துவோம்.
எமக்கு சட்டவிதிகளின் ஊடாக கிடைத்துள்ள பல விடயங்கள் ஏற்கனவே கைவிடப்பட்டுள்ளன. ஆட்சியாளர் சாதாரண பிரஜையின் முன் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். ஆட்சியாளர் சாதாரண பிரஜைக்கு முன்னால் முடிந்தளவு செல்வத்தை வீணடித்துவிட்டு, பின்னர் நாட்டைக் கட்டியெழுப்ப இணையுமாறு சாதாரண பிரஜைக்கு அழைப்பு விடுக்க முடியாது. மக்களின் சொத்துக்களை கோடிக்கணக்கில் அழிக்க கிடைக்கும் ஆணையாக அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு இனி இடமளிக்கப்பட மாட்டாது.
முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வீடு வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டாலும், வீட்டின் அளவு, புதுப்பிக்கும் பணம் பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை.
எனவே, ஆட்சியாளர்கள் அந்தச் சட்டத்தின் வரம்புகள் மனசாட்சி இல்லாமல் 30,000 சதுர அடி வீடுகளைப் பயன்படுத்த செயல்பட்டு வந்தார்கள். செப்டெம்பர் முதல் வாரத்தில் இந்த அளவுகளை நாங்கள் நீக்குவோம். மற்றவர்களை நிமிர்ந்து நிற்கச் சொல்ல நாம் சகதியில் நாட்டிய தடியைப் போல,வலைந்து போக நாம் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் எடுக்கும் முடிவை செயல்படுத்துவோம். பொதுமக்களின் செல்வத்தைத் திருடும் வீணடிக்கும் அரசியலை முடிவுக்குக் கொண்டுவருவோம். திறைசேரிக்கு வரும் பணம் திறைசேரியை வருவதற்கு முன்னர் பல்வேறு இடங்களில் தடைப்பட்டிருந்தன. சில பணம் அமைச்சர்களுக்கு திருப்பி விடப்பட்டது. இதுபோன்ற விடயம் எதிர்காலத்தில் நடக்க இடமளிக்கப்பட மாட்டாது. சட்டவிரோதமாகச் சம்பாதித்த பொதுமக்களின் எந்தவொரு செல்வத்தையும் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அவை திரும்பப் பெறப்படும். தொலைதூர கிராமங்களின் பிள்ளைகள் முறையான கல்வி இல்லாமல் தவிக்கின்றனர். தொலைதூர கிராமங்களின் மக்கள் சரியான சுகாதார வசதி இல்லாமல் தவிக்கின்றனர். எந்தவொரு பிரஜையும் பொது மக்களின் பணத்தை சட்டவிரோதமாக எடுத்திருந்தால், அது திரும்பப் பெறப்படும். எதிர்காலத்தில், எந்தவொரு அரச அதிகாரியோ அல்லது அரசியல்வாதியோ இதுபோன்ற விடயத்தைச் செய்வது குறித்து இருமுறை சிந்திக்கும் வகையில் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்.
கடந்த 75 ஆண்டுகளாக, வரவசெலவுத்திட்ட ஆவணம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் பெற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் அதை விட அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. இலங்கையில் முதல் முறையாக, நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிடைத்துள்ளது. எதிர்பார்த்ததை விட செலவினங்களைக் குறைக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. திறைசேரிக்கு வரும் செல்வத்தை வேறு இடங்களுக்குத் திருப்பிவிட நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. திறைசேரிக்கு ரூபாய்கள் அவசியம் போன்று, நாட்டிற்கு டொலர்கள் அவசியம்.
டொலர் கையிருப்பை கட்டியெழுப்புவதற்கு, சுற்றுலாத் துறை, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் பணம் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகியவை டொலர் கையிருப்புக்களில் தாக்கம் செலுத்துகின்றன. இந்த மூன்று துறைகளிலும் குறிப்பிடத்தக்க வருமானத்தை இந்த ஆண்டு பெற்றுக்கொள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு முடிந்துள்ளது. வலுவான டொலர் கையிருப்பை உருவாக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தடைப்பட்டிருந்த பொருளாதாரத்தை மீண்டும் செயற்பட வைத்து, முன்னோக்கி கொண்டு செல்ல அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுமார் 130 கோடி டொலர் மதிப்புள்ள வாகன கடன் பத்திரங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பாடசாலை கட்டமைப்புகளை மீள்சீர் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இரண்டு பிள்ளைகள் மற்றும் நான்கு ஆசிரியர்கள். அந்தப் பிள்ளைகளுக்கோ ஆசிரியர்களுக்கோ பயனில்லை. இந்த நாட்டில் உள்ள சுமார் 18% பாடசாலைகளில் 50க்கும் குறைவான பிள்ளைகளே உள்ளனர். 10,000க்கு ஓரளவு மேற்பட்ட பாடசாலைகளில், சுமார் 1,400 பாடசாலைகளில் 50க்கும் குறைவான பிள்ளைகள் உள்ளனர். சுமார் ஐயாயிரம் பாடசாலைகளில் 200க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர். இவை பாடசாலைகள் அல்ல. ஒரு பழைய அறிக்கையின்படி, 30,000 பிள்ளைகள் சாதாரண தரத்தை எழுதாமல் பாடசாலையை விட்டு வெளியேறுகிறார்கள். நாங்கள் ஒரு திட்டத்தை வகுத்து வருகிறோம். சாதாரண தரத்தை எழுதாமல் எந்த ஒரு பிள்ளையும் பாடசாலையை விட்டு வெளியேற முடியாது. அப்படி ஒரு பிள்ளை இருந்தால், அரச அதிகாரிகள் சென்று இதற்கு என்ன காரணம் என்று பார்க்க வேண்டும்.
நமது வறுமை கல்வியறிவின்மையுடன் பின்னிப் பிணைந்துள்ளது. நமது தடுப்புக் காவலில் உள்ள கைதிகளில் 70% க்கும் அதிகமானோர் எட்டாம் வகுப்புக்கு முன்பே பாடசாலையை விட்டு வெளியேறியவர்கள். கல்விக்கும் குற்றத்திற்கும் இடையே தொடர்பு உள்ளது. கல்விக்கும் போதைப்பொருளுக்கும் இடையே தொடர்பு உள்ளது. சமூகத்தை மாற்றுவதில் கல்வி மிக முக்கியமான விடயம். இருப்பினும், நமது தற்போதைய கல்வி முறை அந்த பணியை நிறைவேற்றத் தவறிவிட்டது. எனவே, கல்வியில் ஒரு பெரிய மாற்றம் குறித்து கலந்துரையாடுவோம். விவாதிப்போம். ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், நமது தேரர்கள் அவற்றைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கவும். அதன் மூலம், நமது பிள்ளைகளுக்கு உலகிற்கு ஏற்ற கல்வி முறையை உருவாக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
நமது சுகாதார கட்டமைப்புக்கு ஒரு புதிய பாதை தேவை. ஆண்டுக்கு 40 மில்லியன் மக்கள் அரச மருத்துவமனைகளின் வெளிநோயாளர் பிரிவில் இருந்து மருந்து பெறுகிறார்கள். 40 மில்லியன் மக்கள் தனியார் துறையிலிருந்து மருந்து பெறுகிறார்கள். அதன்படி, ஆண்டுக்கு 80 மில்லியன் மக்கள் அரச அல்லது தனியார் துறை மருத்துவமனைகளில் இருந்து மருந்து பெறுகிறார்கள்.
மக்கள் தொகை சுமார் 22 மில்லியன். இருப்பினும், 80 மில்லியன் பேர் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அதாவது, கிட்டத்தட்ட ஒருவர் குறைந்தது நான்கு முறையாவது மருத்துவமனைக்குச் செல்லும் ஒரு கலாசாரம் உள்ளது. அது ஒரு தவறான சுகாதார அமைப்பு. அதனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு முதன்மை ஆரம்ப மருத்துவர் வீதம் செயலாற்ற நாம் முயற்சிக்கிறோம். மருத்துவரே நோயாளியை பொருத்தமான இடத்திற்கு பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறின்றி, அந்த முடிவை நோயாளி எடுக்கக்கூடாது.
மேலும், இந்த நாட்டில் விளையாட்டுத் துறையில் ஒரு பெரிய மாற்றம் செய்யப்பட வேண்டும். விளையாட்டு, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவையே சிறந்த குணங்கள் நிறைந்த பிரஜைகளை உருவாக்குகின்றன. இன்று இந்த நாட்டில் நடக்கும் குற்றச் சம்பவங்களுக்குப் பின்னால், இந்த சமூகத்தின் வீழ்ச்சி என்ற பெரும் துயரத்தின் விளைவுகள் உள்ளன.
இன்று, நடைபெறும் சம்பவங்களைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த சம்பவங்களில் பெரும்பாலானவை நமது சமூகத்தின் வீழ்ச்சியின் துயரத்தின் விளைவுகள் என்பதை நமது தேரர்கள் அறிவார்கள். அண்மையில் நான் இலங்கையில் மாகாணங்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மாஅதிபர்களை அழைத்திருந்தேன். தற்போது இலங்கையில் அதிகம் பதிவாகும் குற்றங்கள் பாலியல் குற்றங்கள் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். அவற்றில், அதிகம் பதிவாகும் குற்றமாக சிறுவர் பாலியல் குற்றங்களாகும்.
ஏன்? இந்த சமூகம் சிறப்பாக மாற்றப்படவில்லை. கல்வி, சுகாதாரம், விளையாட்டு மற்றும் பொருளாதாரம் போன்றவையை ஒருங்கிணைப்பதன் மூலம் மாத்திரமே ஒரு நல்ல பிரஜையை உருவாக்க முடியும். நமது மகா சங்கத்தினர் கிராமங்களுக்குச் சென்று, ஒரு நல்ல சமூகத்தைப் பற்றி, அவர்களின் கடமைகளைப் பற்றி, சமூகத்தின் மீது அவருக்கு உள்ள பொறுப்பு பற்றி உபதேசித்து, ஒரு புதிய சமூக மாற்றத்திற்காக நாட்டை விழிப்படையச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நாங்கள் நம்புகிறோம்.
நமது மகா சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு வரலாற்று பாரம்பரியமும், ஆட்சியாளர்களாகிய நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு வகிபாகமும் உள்ளது. ஒரு மனிதனாக நான் நிறைவேற்ற வேண்டிய கடமையைப் போலவே, ஜனாதிபதியாக எனக்கு ஒரு வகிபாகமும் உள்ளது. ஒரு மனிதனாக நிறைவேற்ற வேண்டிய கடமையும் எனக்கு உள்ளது. நான் அதை அடையாளம் கண்டுள்ளேன். எனவே, ஆட்சியாளர், மகா சங்கத்தினர், மத குருக்கள் மற்றும் பொது சமூகம் அனைவரும் ஒன்றாக முயற்சி செய்தால், இந்த சமூகத்தை மிக விரைவாக புதிய மாற்றத்திற்கு உட்படுத்த முடியும்.
இதுதான் சந்தர்ப்பம் என்று நான் நினைக்கிறேன். ஆனால், இந்தப் புதிய மாற்றத்துக்குப் பயப்படும் ஒரு குழு இருக்கு. அவர்கள் இந்தப் புதிய மாற்றத்துக்குத் தயாராக இல்லை. சட்டம் அனைவருக்கும் சமம் என்று கூறும்போது அவர்கள் ஏன் குழப்பம் அடைகிறார்கள்?
அவர்களின் மனசாட்சிக்குத் தெரியும், அவர்கள் குற்றவாளிகள் என்று. மோசடிக்காரர்கள் என்று. அதனால், சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று சொல்ற கருத்தை நாம் ஆசிர்வதிக்கணும். கெட்டதுக்கு ஈடாக கெட்டதைக் கொடுப்பது கடினம் இல்லை.
கடந்த காலத்தில் அவ்வாறுதான் நடந்தது. ஆனால் இப்போது நாம் கெட்டதற்குப் பதிலாக நல்லதைக் கொடுக்க வேண்டியுள்ளது. நமக்கு முன்னால் உள்ள அனைத்தும் கெட்டவை. இந்தக் கெட்டதற்குப் பதிலாக நல்லதைக் கொடுப்பதே நமது பயிற்சி. அதற்கு, நமக்கு தைரியம், நம்பிக்கை, விட்டுக்கொடுக்காத குணம் இவை அனைத்தும் அவசியம். அது நம்மிடம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
நமது முதல் படி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது, ஆனால் இரண்டாவது படி அதை விட இன்னும் கடினமான முயற்சியாகும். நமது நாட்டை சிறந்த நாடாக மாற்றவும், இந்த வறண்ட, ஈரம் அற்ற சமூகத்திற்கு ஈரம் மற்றும் வாழ்க்கையையும் மீண்டும் வழங்கவும், மகா சங்கத்தினர் உட்பட நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று கேட்டுக்கொள்கிறேன்