Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

எந்த வடிவத்தில் வந்தாலும் இனவாதம் மீண்டும் தலைதூக்க நாங்கள் இடமளிக்க மாட்டோம்

(-வெற்றி நமதே.. ஊர் எமதே.. யாழ்ப்பாணம் வெற்றிப் பேரணி-2025.04.17-)

President AKD welcomed at the Jaffna public rally

– ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவிப்பு

எந்த வடிவத்தில் இனவாதம் நாட்டில் மீண்டும் தலைதூக்க முயற்சித்தாலும் அதனைத் தோற்கடிக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இனவாதத்தைத் தூண்டும் குழுக்களுக்கு என்ன முத்திரை குத்த முயற்சித்தாலும், வடக்கு மற்றும் தெற்கில் உள்ள மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டில் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.

“வெற்றி நமதே – ஊர் எமதே” மக்கள் பேரணித் தொடரின் மற்றொரு பேரணி யாழ்ப்பாணத்தில் நேற்று (17) நடைபெற்றதுடன் அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

எந்தவொரு மாகாண மக்களின் உரிமைகளையோ அல்லது பாரம்பரியத்தையோ பறிக்க அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது என்று கூறிய ஜனாதிபதி, திஸ்ஸ விகாரையின் பிரச்சினையைத் தீர்க்க, அதில் உள்ள அரசியல் அகற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும், போரின் கசப்பான வரலாறும், நாம் மறந்துவிட வேண்டிய வரலாறும் மீண்டும் நிகழ அனுமதிக்கப்படாது என்றும் தெரிவத்த ஜனாதிபதி, யாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, புதிய நகரத் திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

காணாமல் போனவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனுபவிக்கும் வலியை தாம் நன்கு அறிவதாகக் கூறிய ஜனாதிபதி, அந்த வலியைப் போக்க, அவர்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், உண்மையை வெளியே கொண்டுவர அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்காக நாட்டு மக்கள் இணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நியமித்ததாக மேலும் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இருண்ட கடந்த காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டை எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம் இது என்றும், மீண்டும் கட்டியெழுப்பப்படும் நாட்டிற்கு வருகை தந்து முதலீடு செய்யுமாறு தான் தமிழ் புலம்பெயர்ந்தோருக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

Jaffna public rally crowd

பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை வழங்கியதற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாட்டில் எப்போதும் தேர்தல்களில் மக்களிடையே பிரிவினை ஏற்படுகின்றது. ஆனால் கடந்த பொதுத் தேர்தலில், வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கில் உள்ள சிங்களவர்கள், முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் என அனைத்து மக்களின் விருப்பமும் தேசிய மக்கள் சக்தியாக இருந்தது. கடந்த தேர்தலில் பிளவுபடுவதற்குப் பதிலாக, மக்கள் நாட்டுக்காக ஒன்று திரண்டனர். இவ்வாறு ஒன்றுபட்ட நாம், மீண்டும் ஒருபோதும் பிரிந்து விடக்கூடாது. நாம் ஒருவருக்கொருவர் பயத்துடனும் சந்தேகத்தடனும் வாழும் ஒரு நாட்டை நாம் விரும்பவில்லை.

சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து, இறக்கும் ஒரே தாயகமாக, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சம உரிமைகளைப் பெறும் ஒரு நீதியான நாட்டைக் கட்டியெழுப்புவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விருப்பமாகும், நாங்கள் ஒருவரையொருவர் வெறுத்துள்ளோம். போர் நடத்தியுள்ளோம்.

ஆனால் எங்களிடம் எதுவும் மிச்சமில்லை. எங்களுக்கு எஞ்சியிருந்தது பேரழிவிற்குள்ளான வடக்கு மாகாணமும், தங்கள் குழந்தைகளை இழந்த பெற்றோர்களும் மாத்திரமே. எங்கள் உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் இழந்துவிட்டோம். இது வடக்கிலும் தெற்கிலும் நடந்தது. மீண்டும் அப்படி ஒரு சகாப்தம் நமக்கு வேண்டாம். நாம் இப்போது அதனை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். எமது தலைமுறை போர்களை நடத்தியது. சண்டைபிடித்தோம்.

ஆனால், தேசிய மக்கள் சக்தி நமது குழந்தைகளின் தலைமுறைக்காகப் போர் செய்யாத, சண்டையிடாத, அனைவரும் ஒற்றுமையாக வாழும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

நம் நாட்டில் இனிமேலும் இனவெறி இல்லை. அரசியல்வாதிகளுக்குத் தேவையானதுதான் இனவெறி. திஸ்ஸ விகாரையை தொடர்பில் ஒரு பிரச்சினை இருப்பது உங்களுக்குத் தெரியும். கடந்த பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில், திஸ்ஸ விகாரை பிரச்சினையைத் தீர்ப்பது இலகுவானது என்று நான் கூறினேன். அந்தப் பிரச்சினையின் பின்னணியில் நடத்தப்படும் வடக்கு மற்றும் தெற்கின் அரசியல் அகற்றப்பட வேண்டும். திஸ்ஸவிகாரையில் உள்ள அரசியல் நீக்கப்பட்டால், அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

விகாரையின் விகாராதிபதி, அந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள், நாக விகாரையின் தேரர் ஆகியோர் ஒன்று சேர்ந்தால், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். அரசியல்வாதிகள் விரும்புவது மீண்டும் இனவாதத்தைத் தான். ஒரு அரசாங்கமாக, எந்தவொரு மாகாண மக்களின் உரிமைகளையோ அல்லது பாரம்பரியத்தையோ பறிக்கும் எந்த நடவடிக்கையையும் நாங்கள் ஒருபோதும் எடுக்க மாட்டோம்.

President AKD Addressing at the Jaffna public rally

இந்த நாட்டில் எங்கெல்லாம் தொல்பொருள் கலைப்பொருள் காணப்பட்டாலும், எங்கெல்லாம் வரலாற்று இடிபாடுகள் காணப்பட்டாலும், அவற்றை சிங்களவர், தமிழர் அல்லது முஸ்லிம் என்று நாம் அடையாளம் காணத் தேவையில்லை. நாம் அதை நாட்டின் பாரம்பரியமாகப் பார்க்க வேண்டும்.

ஆனால் இப்போது, ​​தொல்பொருட்களும் வரலாற்று இடிபாடுகளும் கண்டுபிடிக்கப்படும்போது, ​​அவை சிங்களமா அல்லது தமிழா என்பதை தீர்மானிக்க முயற்சிக்கிறார்கள். அதுதான் இனவெறியரின் இயல்பு. ஆனால் அவற்றைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு வழங்க நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.

இந்த இனவாதக் குழுக்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டன. ஆனால் மீண்டும், அதே இனவெறியை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் மோதல்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், எந்த உருவத்தில் அல்லது எந்த வழியில் இனவாதம் மீண்டும் தலைதூக்க முயன்றாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதைத் தோற்கடிக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நமக்கு தேசிய ஒற்றுமை அவசியம். யாழ்ப்பாணத்தில் பாரம்பரிய அரசியல் தலைவர்கள் இருந்தனர்.

பாரம்பரிய கட்சிகள் இருந்தன. இந்த பெரிய கட்சிகள் இருந்தபோதும், சிறந்த தலைவர்கள் இருந்தபோதும் நீங்கள் எங்களை நம்பினீர்கள். எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டாலும், எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஒருபோதும் உடைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். எங்களை நம்பி நீங்கள் தீர்க்க விரும்பும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

நாங்கள் அவற்றைத் தீர்ப்போம். இனவாதக் குழுக்களால் எத்தகைய முத்திரைகள் சூட்டப்பட்டாலும் சரி, எத்தகைய போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் சரி, உங்கள் உரிமைகளையும் தேசிய ஒற்றுமையையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.

முதலாவதாக, பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட மக்களுக்குச் சொந்தமான நிலங்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். இனிமேலும் பாதுகாப்பு காரணங்கள் என்ற போர்வையில் மக்களின் நிலங்களை வைத்திருக்க அரசாங்கத்திற்கு உரிமை இல்லை. விடுவிக்கப்படக்கூடிய அனைத்து நிலங்களும் விடுவிக்கப்படும். நீங்கள் நிலங்களில் குடியேறுங்கள். பயிரிடுங்கள்.

யுத்தம் வரும் என்று எதிர்பார்த்து நாங்கள் செயற்படவில்லை, யுத்தம் வராமல் தடுக்க தேசிய மக்கள் சக்தி செயற்படுகிறது. அதுதான் ஒரு அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்தப் பகுதியில் ஏராளமான வீதிகள் மூடப்பட்டிருந்தன. நாங்கள் அந்த வீதிகளை படிப்படியாக மீண்டும் திறந்து வருகிறோம். நீங்கள் சுதந்திரமாக செயல்படுங்கள். கொழும்பிலும் வீதிகள் மூடப்பட்டிருந்தன.

Crowd at the Jffna Public Rally

ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் உள்ள வீதி, அலரி மாளிகைக்கு முன்னால் உள்ள வீதியும் மூடப்பட்டிருந்தன. நாங்கள் அந்த வீதிகளைத் திறந்தோம். ஜனாதிபதி, பிரதமர் மாளிகைகளுக்கு முன்னால் வீதிகளைத் திறக்க முடியும் என்றால், யாழ்ப்பாணத்தில் வீதிகளை மூடுவதற்கு எந்த உரிமையும் இல்லை.

இந்த யாழ்ப்பாணத்தை நாங்கள் மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவோம். போரின் கசப்பான வரலாறு, நாம் மறக்க வேண்டிய வரலாறு, மீண்டும் நிகழ இடமளிக்க மாட்டோம். காணாமல் போனவர்கள் பற்றிய ஒரு பிரச்சினை இருப்பதாக எனக்குத் தெரியும். நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். உங்கள் பிள்ளையை அரசாங்கத்திடம், பொலிஸ் நிலையத்திலோ அல்லது இராணுவ முகாமிலோ ஒப்படைக்கப்பட்டால், அவருக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அது ஒரு பொறுப்பான அரசாங்கத்தின் கடமையாகும்.

காணாமல் போன பிள்ளைகளின் பெற்றோரின் வலியை நான் அறிவேன். பொதுவாக ஒருவர் இறந்தால், நாம் அந்த உடலைக் காண்கிறோம். மதச் சடங்குகள் செய்யப்படுகின்றன. எமது கையாலே இறுதிச்சடங்குகளை நிறைவேற்றுகிறோம். நாம் காலப்போக்கில் இயல்பு நிலைக்குத் திரும்புகிறோம். ஆனால் ஒரு பிள்ளை காணாமல் போகும் போது அவ்வாறு இல்லை. மிகுந்த வலி இருக்கிறது. என் உறவினர் ஒருவரும் காணாமல் போனார். அதனால் அந்த வலி எனக்குத் தெரியும். அந்த வலி தீரவேண்டுமாயின், பிள்ளைகளைப் பற்றிய உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். அது யாரையும் பழிவாங்குவதற்காக அல்ல. அது அமைதிக்கு அவசியம். நாங்கள் அதை ஒரு அரசாங்கமாக நிறைவேற்றுவோம்.

நாம் வரலாற்றில் வாழ்வதிலிருந்தும் அதன் வலியிலிருந்தும் நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். நாம் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க வேண்டும். அதனால்தான் நீங்கள் எங்களை நம்பினீர்கள். நீங்கள் பழையதை விரும்பினால், பழைய கட்சிகளைத் தெரிவு செய்திருப்பீர்கள். நீங்கள் எங்களை புதிய விடயத்திற்காகத் தேர்ந்தெடுத்தீர்கள். அந்தப் புதிய விடயங்களை நாங்கள் பயமின்றிச் செய்வதை உறுதிசெய்கிறோம். அது செய்யப்பட வேண்டும். இது எமது நாடு. இதுதான் நாம் அனைவரும் வாழும் நாடு.

அது மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையை படிப்படியாக மேம்படுத்த வேண்டும். பழைய ஆட்சியாளர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை பாரியளவில் சீர்குலைந்தனர். எரிபொருள், மருந்தை இறக்குமதி செய்ய முடியாத, கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத ஒரு நாட்டை அவர்கள் உருவாக்கினர். ஆனால் நாம் இப்போது படிப்படியாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி வருகிறோம்.

இதற்காக அனைத்து நாடுகளிடமிருந்தும் நாங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம். இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதே எங்கள் குறிக்கோள். வளரும் பொருளாதாரத்தின் நன்மைகளை இந்த நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கும் நாங்கள் தற்போது செயற்பட்டு வருகிறோம்.

President AKD waving at Jaffna public rally

நான் அண்மையில் இந்த யாழ்ப்பாண மாவட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

அங்கு எங்களுக்கு பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அந்த ஒவ்வொரு திட்டத்திற்கும் நாங்கள் பணம் ஒதுக்கினோம். காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை சிறந்த திட்டத்திற்காக யாழ்ப்பாணத்திற்கு வழங்க நான் தயாராக இருப்பதாக அதன்போது தெரிவித்தேன்.

இதுபோன்ற இடங்களை மக்களுக்காக செயற்படும் இடங்களாக மாற்ற வேண்டும். நம் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இடங்களாக அவை இருக்க வேண்டும். அதற்காக நாங்கள் அவர்களை விடுவிக்கிறோம்.

மேலும், நாங்கள் இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பத்து இலட்சத்து 5,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது, இது இந்த மாகாணத்தில் வீதிப் புணரமைப்புக்காக அண்மைய காலங்களில் செய்யப்பட்ட அதிகபட்ச ஒதுக்கீடாகும். அது மட்டுமல்ல, வரலாற்றில் இருண்ட நிகழ்வுகளில் ஒன்று யாழ்ப்பாண நூலகத்துடன் தொடர்புடையது. ஒரு நூலகத்தின் அழிவு எங்கள் இதயங்களை பாதித்தது.

நூலகத்தை எரிப்பது இனவெறியின் உச்சம். இந்த ஆண்டு நூலக வசதிகளை மேம்படுத்துவதற்காக 10 கோடி ரூபாவை ஒதுக்கினோம்.

அதுமட்டுமல்ல, இந்த நகர சபைக்கு ஒரு பாரிய கட்டிடம் இருக்கிறது. ஆனால் எந்தப்பயனும் இல்லை. அது ஒரு பாரிய கட்டிடம். எங்கள் கிராமங்களில் வீடுகள் மிகச் சிறியவை. எங்கள் நகர சபை மிகப் பெரியது. அதன் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்காக அதைப் புதுப்பிக்க பத்து இலட்சத்து 400 ரூபாவை ஒதுக்கியுள்ளோம். இவற்றைக் புணரமைத்து மக்களுக்கான இடங்களாக மாற்ற வேண்டும்.

மேலும், வடக்கு மாகாண மக்கள் நிலத்துடன் தொடர்புபடும் மக்கள். நாம் உர மானியத்தை 15,000 த்திலிருந்து 25,000 ஆக அதிகரித்தோம். மரக்கறி மற்றும் பழங்களைப் பயிரிடுவதற்காக உர மானியங்களை வழங்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். வட மாகாணத்தில் 16,000 ஏக்கரில் தென்னை பயிரிடலாம். ஒரு புதிய தேங்காய் முக்கோணத்தை உருவாக்கலாம்.

அதற்கு அரசாங்கம் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்காக நாங்கள் 500 மில்லியன் ஒதுக்கினோம். தென்னை வளர்க்கும் விவசாயிகளுக்கு அரசாங்கம் தென்னங் கன்றுகளை வழங்குகிறது. தென்னை உரம் வழங்கப்படும். தென்னை அகழிகளை வெட்டி நிலத்தை தயார் செய்ய பணம் தருகிறேன். பயிர்செய்யத் தயாராகுங்கள். வடக்கு, தெற்கு அல்லது கிழக்கு என்ற பேதமின்றி இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நாங்கள் பாடுபடுவோம்

இந்த வட மாகாணத்தில் சுற்றுலாவுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அருகம்பே அல்லது தெற்கிற்கு வருவது போல் வடக்குக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை. உள்நாட்டு விமான சேவைகளை மேலும் வலுப்படுத்தி, கொழும்புக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு பயணிக்கும் வேலைத்திட்டம் உருவாக்கப்படும்.

யாழ்ப்பாணம் ஒரு புதிய சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டும். பழைய யாழ்ப்பாணத்தைப் பிரதிபலிக்கும் புதிய அபிவிருத்தித் திட்டத்துடன் அடுத்த ஆண்டு யாழ்ப்பாண நகரத்தை மறுவடிவமைக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம். யாழ்ப்பாணம் ஒரு வரலாற்று நகரமாக பிரதிபலிக்கப்பட வேண்டும்.

Jaffna public rally with crowd

அவர்களின் கலாசாரம், வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் மீண்டும் கட்டியெழுப்ப தற்போது நகர அபிவிருத்தி அதிகாரசபை திட்டங்களைத் தயாரித்து வருகிறது. அடுத்த ஆண்டு அதற்கான பணத்தை ஒதுக்குவோம்.

யாழ்ப்பாண மக்களின் குடிநீர் மற்றும் கழிவகற்றல் பிரச்சினைகளைத் தீர்க்கவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். நாங்கள் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு என்ற பேதமின்றி அனைத்து மாகாண மக்கள் மீதும் கவனம் செலுத்துவதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் நம்பிக்கை கொண்ட ஒரு அரசாங்கம்

மேலும் 1983 ஆம் ஆண்டு முதல் ஏராளமான தமிழர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்பது நமக்குத் தெரியும். இன்று அவர்கள் உலகில் பாரிய தொழிலதிபர்களாகவும் செல்வந்தர்களாகவும் மாறிவிட்டனர். உங்கள் உறவினர்கள் வசிக்கும் பூமியை கட்டியெழுப்பவும், அவர்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடிந்தவரை முதலீடு செய்யவும், புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரையும் இலங்கைக்கு மீண்டும் திரும்பி வருமாறு நான் அழைக்கிறேன்.

இந்த நாடு இப்போது பாதுகாப்பானது. இனவாதம் இல்லாத நாடாக மாறியுள்ளது. அனைவரின் உரிமைகளையும் நியாயமாக அங்கீகரிக்கும் நாடு. அனைத்து கலாசாரங்களையும் மதிக்கும் நாடு. எனவே, இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உங்கள் முதலீடுகளைப் பயன்படுத்துமாறு நான் உங்களை அழைக்கிறேன்.

இது ஒரு புதிய அத்தியாயம், பழைய இருண்ட கடந்த காலத்தை நிறைவுசெய்து புதிய எதிர்காலத்திற்குச் செல்லும் ஒரு அத்தியாயம். இது மிகவும் முக்கியமான அரசியல் மாற்றமாகும். இது எங்கள் தாய்மார்களும் தந்தைமார்களும் நீண்ட காலமாக பிரார்த்தித்த ஒன்று. அவர்கள் பல்வேறு வழிகளில் இத்தகைய அரசாங்கமொன்றை எதிர்பார்த்தனர்.

இப்போது அந்த அரசாங்கம் அமைக்கப்பட்டுவிட்டது. , பொதுமக்களின் பணத்தில் ஒரு சதத்தையேனும் திருடாத அரசாங்கம் இன்று அமைக்கப்பட்டுள்ளது. பழைய அரசியல் இந்த நாட்டை ஏழ்மையாக்கியது. மக்கள் ஏழைகளாக்கப்பட்டனர். ஆனால் ஆட்சியாளர்கள் செல்வந்தர்களானார்கள். அந்தக் கலாசாரத்தை நாம் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம். இப்போது, ​​அனைவரையும் ஒன்றிணைந்து பிரதேச சபைகளையும், நகர சபைகளையும் வலுப்படுத்தி, அந்தத் திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லுமாறு நான் அழைக்கிறேன்.