-Colombo, December 17, 2023-
தேசிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி மாநாடு கல்முனை
திகதிக்கு முன்னராக சனாதிபதி தேர்தல் நடைபெறும். யூலை இறுதியளவில் தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கும். நாங்கள் இற்றைவரை ஆட்சியாளர்களை மாற்றினோம். அரசாங்கங்களை மாற்றினோம். நாங்கள் கடந்தகாலம்போல் சிந்திக்காமல் புதிதாக சிந்தித்து அரசியலில் மாற்றமொன்றை ஏற்படுத்துவோம். தெற்கில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மதிப்பாய்வுகளில் தேசிய மக்கள் சக்தி மேலாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தெற்கில் உள்ளவர்கள் கேட்கிறார்கள், தென்னிலங்கை தயார். வடக்கு கிழக்கு எப்படி? என. தெற்கில் உள்ள மக்கள் எடுக்கின்ற தீர்மானங்களுக்கு பாரிய பங்களிப்பினை கிழக்கில் உள்ள முஸ்லீம் மக்கள் வழங்கத் தயார் என கல்முனை மேடையில் இருந்துகொண்டு தெற்கில் உள்ளவர்களுக்கு கூறுகிறோம்.
எமது நாடு பாரிய படுகுழிக்குள் விழுந்தது. கடனைச் செலுத்த முடியாத, மக்களால் உண்டுவாழ முடியாத, மீன்பிடிப் படகுகளை கடலுக்கு அனுப்ப முடியாத, வைத்தியசாலையில் மருந்துகள் இல்லாத, பிள்ளைகளுக்கு சரியான கல்வி கிடைக்காத, பிள்ளைகளுக்கு தொழில் கிடைக்காத, சூழல்தொகுதி நாசமாக்கப்பட்ட, யானை – மனிதன் மோதல் காரணமாக நூற்றுக்கணக்கான யானைகள் இறந்த, உலகத்தார் முன்னிலையில் வெட்கித் தலைகுனிகின்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்ட, உலகம் ஏற்றுக்கொள்ளாத நாடாக தற்போது இந்த நாடு மாற்றப்பட்டுள்ளது. இதனை மாற்றியமைக்க வேண்டாமா? நாங்கள் இதனை மாற்றியமைப்போம் எனும் பிரேரணையை முன்வைக்கவே நாங்கள் உங்கள் முன்னிலைக்கு வந்திருக்கிறோம். வடக்கின் தமிழ் மக்களும் கிழக்கின் முஸ்லீம் மக்களும் தெற்கின் சிங்கள மக்களும் அனைவருமே ஒன்று சேர்ந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம். இனவாதமற்ற, தேசிய ஒற்றுமையை பாதுகாக்கின்ற பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் அமைப்போம்.
கடந்த வருடத்தின் யூன் மாதத்தில் இந்நாட்டு மக்களால் விரட்டியக்கப்பட்ட தலைவர்கள், இந்த நாட்டை ஆபத்தில் தள்ளிய தலைவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வரத் துடிக்கிறார்கள். மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஒருவருக்கொருவர் எதிராக போராடுபவர்கள் என்றே எமக்கு புலப்பட்டது. மகிந்த சரியில்லை என நினைக்கும்போது ரணிலை நியமித்தார்கள். ரணில் சரியில்லை என நினைக்கும்போது மகிந்தவை நியமித்தார்கள். எனினும் தற்போது இருசாராரும் ஒன்றாகவே இருக்கிறார்கள். அன்றும் அப்படித்தான் இருந்தார்கள். அவர்கள் ஒருபோதுமே சண்டையிடவில்லை. எனினும் அவர்கள் எம்மை பிளவுபடுத்தினார்கள். சிங்கள, தமிழ் முஸ்லீம் மக்களிடையே முரண்பாட்டினை ஏற்படுத்தினார்கள். ரஊப் ஹக்கீம் பிளவுபடவில்லை. கூகலில் அவர்களின் ஹிஸ்டரியைத் தேடும்போது சந்திரிக்கா அரசாங்கத்தில் குழுக்களின் பிரதித் தவிசாளர், தபால் அமைச்சர், ரணிலின் அரசாங்கத்திலும் தபால் அமைச்சர், மீண்டும் மகிந்தவின் அரசாங்கத்தில் துறைமுகங்கள் அமைச்சர். 2000 சனாதிபதி தேர்தலில் பொன்சேகாவின் மேடையில். தேர்தல் முடிவடைந்ததும் மகிந்தவின் அரசாங்கத்தில். 2015 இல் மைத்திரியின் அரசாங்கத்தில். இந்த மூன்று வருடங்களில்தான் ஒன்றுமே கிடையாது.
19 வது திருத்தத்தில் சனாதிபதியின் சிறகுகள் வெட்டப்பட்டிருந்தன. கோட்டாபயவின் அதிகாரத்தை அதிகரித்துக் கொள்வதற்காக, சிறகுகளை பொருத்திக்கொள்ள, 2020 இல் இருபதாம் திருத்தம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது. எனினும் பையிசர் காசிம், ஹாரிஸ், பெளசிக் என்ன செய்தார்கள்? கோட்டாபய இனவாதி, அவர் வந்தால் எமது பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் எனக்கூறி உங்கள் முன்வந்து வாக்குகளைக் கோரினார்கள். கோட்டாபயவிடமிருந்து தப்பித்துக்கொள்ள, கோட்டாபயவை தோற்கடிப்பதற்காக பையிசர் காசிம், ஹாரிஸ், பெளசிக்கிற்கு வாக்குகளை அளிக்குமாறு கூறினார்கள். நீங்கள் கோட்டாபயவிற்கு எதிராக வாக்குகளை அளித்தீர்கள். அவர்கள் பாராளுமன்றம்சென்று கோட்டாபயவின் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக வாக்குகளை அளித்தார்கள். இது அசிங்கமான அரசியலல்லவா? இந்த அரசியலை நிறுத்தவேண்டுமல்லவா? முஸ்லீம் மக்களுக்காக அமைச்சர் பதிவியை வகிக்கின்ற ஒருவர் அரசாங்கத்தில் இருக்கவேண்டுமென ஒருசிலர் கூறுகிறார்கள். 1994 இல் இருந்து ஒவ்வோர் அரசாங்கத்திலும் முஸ்லீம் காங்கிரஸ் இருந்தது. அரசாங்கத்தில் இருக்கவேண்டியது முக்கியமானதெனில் முஸ்லீம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். எனினும் தீர்க்கவில்லை. மகிந்த ராஜபக்ஷ ஊழல், மோசடியில் ஈடுபட்ட வேளையிலும் ரணில் விக்கிரமசிங்க மத்தியவங்கி கொள்ளையில் ஈடுபட்டவேளையிலும் முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்தது. அவர்களும் இந்த நாட்டை வீழ்த்தியதன் பங்காளிகளே. கல்முனை நகரசபை முதல்வர் உங்கள் பணத்தின் 25 மில்லியன் ரூபாவை தனது சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டார். இவர்கள் அத்தகைய ஆட்சியாளர்களே. பொதுவாக பாராளுமன்றத்திற்கு வருவது குறைவு, பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பொன்று நடைபெற்றால் கட்டாயமாக வருகின்ற அதாவுல்லா, எதிர்க்கட்சியில் எனக்குப் பின்னால் அமர்ந்திருந்து அரசாங்கத்திற்கு சார்பாக வாக்களிக்கிறார். இதென்ன அரசியல்? இதனை மாற்றயமைக்கக்கூடாதா? நாங்கள் முடிவினை எடுப்போம். இந்த தோல்விகண்ட ஆட்சிக்கு முற்றுப்புள்ளிவைக்க நாமனைவரும் ஒன்றிணைவோம். புதிய அரசாங்கமொன்றை அமைத்துவிட்டால் மாத்திரம் போதாது, நாமனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த நாட்டை சரிக்கட்டவும் வேண்டும். நாம் படுகின்ற துன்பதுயரங்களை எமது பிள்ளைகள் அனுபவிக்காத , உலகின் முன்னிலையில் நற்பெயருக்கு இலக்காகின்ற, அனைத்து இனத்தவர்களும் ஒற்றுமையாக வாழ்கின்ற ஒரு நாட்டை உருவாக்குவோம்.
2002 தொட்டு ஆட்சிகள் தவறுகளைப் புரிந்துள்ளதாக ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் கூறினார். நாங்கள் கடந்தகாலத்தை மறந்து புதிய பாதையில் பிரவேசிப்போமென நிமல் சிறிபால கூறினார். அவர்கள் இறந்தகாலத்தை மறந்துவிடுமாறு அடிக்கடி கூறிவருகிறார்கள். அவர்கள் பாரதூரமான தவறுகளைப் புரிந்துள்ளார்கள். பொது ஆதனங்களை திருடியுள்ளார்கள். எவர் மறந்தாலும் தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் மறக்கமாட்டோம். பொதுச் சொத்துக்களைத் திருடியவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்குவோம். எமக்கு சரியான அதிகாரம் இருக்குமாயின் பாராளுமன்றத்தில் இருக்கின்ற பெரும்பாலானவர்கள் உள்ளேதான் இருப்பார்களென கல்முனையில் மாத்திரமல்ல பாராளுமன்றத்திலும் நான் கூறினேன். அதனைச் செய்யவேண்டும். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் மாத்திரமே அதனைச்செய்யும். மகிந்த திருடன் என பாராளுமன்றத்தில் இந்தப் பக்கத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள், கிரிக்கெற் போர்ட்டின் திருடன் என, நாமல் திருடியுள்ளார் என. மறுபக்கத்தில் கூறுகிறார்கள் சஜித் பிரேமதாச கலாசார நிதியத்தை சுருட்டிக்கொண்டார் என, வீடமைப்பு அதிகாரசபையை நாசமாக்கினார் என, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களை பாரியாரின் செலூனுக்கு வேலைக்காக அனுப்பினார், அரசாங்கம் சம்பளம் செலுத்துகிறது வேலை செலூனில் என. இந்த இரு தரப்பிலும் தவறு புரிந்த அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துகின்ற ஓர் அரசாங்கத்தை நாங்கள் அமைக்கவேண்டும். அந்த அரசாங்கத்தை நாங்கள் அமைப்போம். சட்டத்தின் ஆட்சி முறைப்படி அனைவருக்கும் அமுலாக்கப்படுகின்ற ஓர் அரசாங்கம் எமக்குத் தேவை. அரசாங்கத்தின் சட்டம் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை கிடையாது. பொலீசுக்குச் சென்றால் நீதி கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கிறதா? பொலீஸில் அரசியல் தலையீடு நிலவுகின்றது. சாதாரண மனிதர் ஒருவருக்கு அமுலாக்கப்படுகின்ற சட்டம் அமைச்சரின் கையாளுக்கு அமுலாவதில்லை. உலகின் முன்னேற்றமடைந்த ஒவ்வொரு நாட்டிலும் சட்டம் நியாயமாக அமுலாக்கப்படுகின்றது.
பதில் பொலீஸ் மா அதிபருக்கு உயர்நீதிமன்றம் ரூபா ஐந்து இலட்சம் அபராதம் விதித்தது. முன்னாள் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது. முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, முன்னாள் சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பொருளாதாரத்தை சீரழித்ததாக நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்க கட்சி முதற்கோலாசான் பிரசன்ன ரணதுங்க நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன மகேந்திரனுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் றஹீம் தங்கம் கொண்டுவருகையில் சுங்கத்தில் அகப்படுகிறார். காட்டுச்சட்டம் தலைவிரித்தாடுகின்ற நாடாக எமது நாடு மாறிவிட்டது. இது குற்றச்செயல் புரிபவர்களால் ஆளப்படுகின்ற நாடாகும். மத்திய வங்கியை பதம்பார்க்க பங்களிப்புச் செய்ததாக ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பிரதான குற்றச்சாட்டு நிலவுகின்றது. அர்ஜுன் மகேந்திரன் வாக்குமூலம் அளிக்கையில் “நிதி அமைச்சர் கூறியவாறு வேலைசெய்தேன்” எனக் கூறினார். அது சனாதிபதி ஆணைக்குழுவில் குறிப்பு பதியப்பட்டு இருக்கின்றது. உளவுத்துறை பிரதானிக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய குற்றச்சாட்டு இருக்கின்றது. நாட்டின் உயர் அடுக்குகளில் இருப்பவர்கள்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்டவர்களால் ஆளப்படுவதற்காக மக்கள் வெட்கப்பட வேண்டும். உங்களால் உலக நாடுகளுக்குச் சென்று எமது நாட்டுத் தலைவர்கள் பற்றிக்கூற முடியுமா? கூகலில் துலாவிப்பார்த்தால் நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட சனாதிபதிமார்கள், நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுனர்கள் எமது நாட்டை ஆள்கிறார்கள். பக்காத் திருடர்களே எமது நாட்டை ஆட்சிசெய்துள்ளார்கள். ஆட்சியாளர்கள் அப்படிப்பட்டவர்களெனில் நீங்கள் எப்படிப்பவர்களாக இருப்பீர்கள் என அவர்கள் நினைக்கிறார்கள். கல்முனை நகரசபைத் தலைவரை கூகல்பண்ணிப் பார்த்தால் அவரும் அப்படித்தான். காசுக்காக அமைச்சர் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்குமிங்கும் தாவுகிறார்கள். நசீர் அஹமட்டுக்கு என்றால் நீதிமன்றம் சரியான தீர்ப்பினை வழங்கியது. அந்த தீர்ப்பிற்கு நாங்கள் மதிப்பளிக்கவேண்டும். இந்த தீர்ப்பு இதற்கு முன்னரே வழங்கப்பட்டிருப்பின் பந்துல, விஜேதாச, ஹரீன், மனுஷ பாராளுமன்றத்தில் இல்லை. சட்டம் சரிவர அமுலாக்கப்பட்டால் இன்றும் பாராளுமன்றத்தில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் வெளியிலேயே. சட்டம் இல்லாத நாட்டை ஒருபோதுமே முன்னேற்ற முடியாது.
இனம் என்ன? அதிகாரம் இருக்கிறதா? வறியவரா – பணக்காரனா? என்ற பேதமின்றி அனைவருக்கும் நீதி கிடைக்கின்ற நாட்டை நாங்கள் உருவாக்கிட வேண்டும். நாங்களும் நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்த தேசிய மக்கள் சக்தி உருவாக்குகின்ற நாடு அப்படிப்பட்ட ஒன்றாகும். இந்த பிரதேசத்தில் மீனவர்கள் இருக்கிறார்கள், ஏறக்குறைய 500 பன்னாட் கலங்கள் இருக்கின்றன, 800 – 900 சிறிய படகுகள் உள்ளன. இவர்களின் பிரதான வாழ்வாதாரம் மீன்படித் தொழிலாகும். கடலரிப்பு ஏற்படுகின்றது, படகுகளை நிறுத்திவைப்பதற்கான மீன்பிடித் துறைமுகம் கிடையாது. எனினும் மத்தலவில் விமான நிலையமொன்று இருக்கின்றது. ஈடேற்றப்படுவதோ மக்களின் தேவைகள் அல்ல. அவருக்கு கொமிஸ் வரும் விதத்தில்தான் வேலை செய்கிறார்கள். பொருளாதாரத்தை சரிக்கட்ட பெருங்கடலில் இருக்கின்ற மீன் அறுவடையைப் பெறவேண்டும். அதற்காக மீனவர்களுக்கு வசதிகளை வழங்குதல் வேண்டும். தற்போது அரைவாசிக்கு மேற்பட்ட பன்னாட் கலங்கள் கடலுக்குச் செல்வதில்லை. எண்ணெய் அடித்துக்கொண்டு, இரண்டுமூன்று வாரங்களுக்கான பொருட்களை எடுத்துக்கொண்டு, கடலுக்குச்சென்று மீன்பிடித்துக்கொண்டு வந்தால் நட்டம். கடன். அதனால் படகுகள் கடலுக்குச் செல்வதில்லை. படகுகளைக் கடலுக்கு அனுப்புவதாயின் டீசல் மானியம், நல்ல இறங்குதுறை, பனிக்கட்டிக் களஞ்சியம் அமைத்துக்கொடுக்கப்படல் வேண்டும். வலைகள் முதலிய சாதனங்கள் நியாயமான விலைக்கு வழங்கப்படல் வேண்டும். இப்போது மக்கள் கடலுக்குச்சென்று மீன் அறுவடையை கரைக்கு கொண்டுவருவார்கள். நாட்டின் விளைச்சல் அதிகரிக்கும். நாடு வளம்பெறும். இந்த ஆட்சியாளர்கள் சனவரி மாதம் முதலாந் திகதியில் இருந்து மீண்டும் டீசலுக்கு வற் விதித்துள்ளார்கள். கடலுக்குச்சென்ற கலங்களையும் கரைக்கு கொண்டுவர நேரிடும். நாட்டை உருப்படியாக்க உற்பத்திகளை மேம்படுத்தவேண்டும். அதில் இடையீடுசெய்ய நாங்கள் தயார்.
அம்பாறை மாவட்டத்தில்தான் அதிகமாக நெல் செய்கைபண்ணப்படுகின்றது. செழிப்பான வயல்வெளிகள் இருக்கின்றன. வசதிகள் கிடையாது. சிறந்த விதையினங்கள், நல்ல உரம், களை கொல்லிகள் கிடையாது. குறைந்த விலைக்கே நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது. கமக்காரர் அநாதரவாகிவிட்டான். நாடும் அநாதரவாகிவிட்டது. பல்லாயிரக்கணக்கான வயல்நிலங்கள் இருக்கின்றன. புதிய விதையினங்களைப்போட்டு, புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டுவந்து, சிறந்த பசளைகளை இட்டு, விளைச்சலை அதிகரித்து, முன்னேற்றமடைந்த தொழில்நுட்பத்துடனான ஆலைகளை அமைத்து அரிசியை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியும். வயல்கள் பாழடைந்தால் நாடே பாழடைந்துவிடும். வயல் விளைச்சலை அதிகரிக்கும் இடத்திற்கு எமது நாட்டை மாற்றியமைத்திட வேண்டும். எமது இளைஞர் தலைமுறையினருக்கு புதிய தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். இன்றைய உலகில் முதன்மைத் தொழில்த்துறையாக ஐ.ரீ. தொழில்த்துறையே மாறியுள்ளது. அறிவுபடைத்த எமது இளைஞர் தலைமுறையினருக்கு உலகின் முன்னேற்றமடைந்த உழைப்பினைக் கையகப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்திடவேண்டும். ஐ.ரீ. தொழில்நுட்பத்தை விருத்திசெய்ய வேண்டும். இன்று எமது இளைஞர்களுக்கு அவர்களின் வாழ்க்கை இழக்கச்செய்விக்கப்பட்டுள்ளது. விவாகம் செய்துகொள்கின்ற இளைஞர்களுக்கு கூடி வாழ்வதற்கான வாய்ப்பு இழக்கச்செய்விக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களும் அவர்களின் விவாகம்செய்த பிள்ளைகளும் ஒருநாள்கூட விலகி இருக்கமாட்டார்கள். எனினும் எங்கள் பிள்ளைகள் விவாகம்செய்து ஒருமாதம்கூட ஒன்றாக வாழ வாய்ப்பில்லை. கணவன் வெளிநாட்டில், மனைவி இலங்கையில். அத்தகைய வாழ்க்கை எமக்கு வேண்டுமா? அமைச்சர்களின் பிள்ளைகள் தொழில் புரிவதைக் கண்டிருக்கிறீர்களா? பாடசாலையில் போதிப்பது, தொழிற்சாலையில் வேலைசெய்வது அவ்வாறான தொழில்களை அவர்கள் புரிவதில்லை. அவர்களின் பிள்ளைகள் அரசாங்கத்துடன் பிஸ்னஸ். அரசாங்கத்தின் கொந்துராத்து வேலைகளை அவர்கள் செய்கிறார்கள். எங்கள் பிள்ளைகள் பிள்ளைகள் இல்லையா? எமது பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் அவசியமில்லையா? எமது பிள்ளைகளுக்கும் சிறந்த எதிர்காலத்தை அமைத்துக்கொடுப்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை நாங்கள் அமைத்திடுவோம்.
இந்த ஆட்சியாளர்கள் எப்போதுமே அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இனவாதத்தை விதைக்கிறார்கள். இரு அணிகளும் இனவாதத்தை விதைத்தே அதிகாரத்தைப் பெறுகின்றன. அண்மையில் இனவாதத்தை விதைத்திட முயற்சி செய்தார்கள். எனினும் இப்போது இனவாதத்தின் தீச்சுடர் பற்றியெரிவதில்லை. குருந்தி விகாரையை மையமாகக்கொண்டு இனவாதத்தை தூண்டிவிட எத்தனித்தார்கள். திருகோணமலையில் இனவாதத்தை தூண்டிவிட முயற்சி செய்தார்கள். பொன்னம்பலத்தின் வீட்டைச் சுற்றிவளைத்து இனவாதத்தை தூண்டிவிட முயற்சி செய்தார்கள். இனிமேலும் இந்நாட்டு மக்கள் இனவாதத்திற்கு இரையாக மாட்டார்கள். எமது நாட்டை தீக்கிரையாக்கிய, மோதல்களை உருவாக்கிய, உயிர்த்தஞாயிறு தாக்குதலை உருவாக்கிய இந்த ஆட்சியாளர்களின் இனவாத அரசியலை தோற்கடித்திட வேண்டும்.
இந்த நாடு ஒரு இனக்குழுவின் நாடு மாத்திரமல்ல. நாங்கள் பிறப்பது, இறப்பது, உரமாவது இந்த நாட்டிலேயே. இது எமது நாடு. நாம் அனைவரும் ஒற்றுமை நிறைந்த ஒரு தேசத்தை உருவாக்கிடுவோம். கிழக்கிலங்கை மக்களும் தென்னிலங்கை மக்களும் இந்த நாட்டை உருப்படியாக்க எழுச்சிபெற வேண்டும். இந்த ஆட்சியார்களை விரட்டியடித்திட வடக்கின் தெற்கின் கிழக்கின் மக்கள் அனைவரும் ஒருவர்போல் கைகோர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நாட்டைக் கட்டியழுப்ப புதிய தேசிய எழுச்சியொன்று எமக்குத் தேவை. நாங்கள் எழுச்சிபெற வேண்டியது ஒருவருக்கொருவர் எதிராக அல்ல. சாதிபேதம், இனபேதம், மதபேதமற்றதாக இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக்கொண்ட எழுச்சியொன்று தேவை. நாங்கள் ஒன்றுசேரும்போது அவர்கள் கூறுகிறார்கள் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்தால் மதங்களைக் கடைப்பிடிக்க இடமளிக்க மாட்டார்களென்று. மதம் என்றால் என்ன? மதம் என்பது அதனைப் பின்பற்றுகின்ற மக்களின் நம்பிக்கையாகும். முஸ்லீம் மக்கள் அல்குர்ஆனையும், நபிகள் நாயகம் அவர்களின் உபதேசங்களையும், சிங்கள பௌத்தர்கள் திரிபீடகத்தையும் புத்தபெருமானையும், கத்தேலிக்கர்கள் விவிலியத்தையும் இயேசு கிறிஸ்துவையும். தமிழ் மக்கள் பகவத் கீதையையும் சிவபெருமானையும் நம்புகிறார்கள். எமது அனைத்து மக்கட் சமூகத்திற்கும் தமது நம்பிக்கைக்கிணங்க தாம் விரும்புகின்ற மதத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் உச்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய ஓர் அரசாங்கமே தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம். நாங்கள் எமது அரசியலுடன் மதத்தை தொடர்புபடுத்திக் கொள்ளமாட்டோம். மதம் என்பது மக்களின் நம்பிக்கையாகும். அரசியல் என்பது மக்கள் எவ்வாறு ஆளப்படுவது என்பதாகும்.
அவர்கள் மற்றுமொரு அபிப்பிராயத்தையும் ஏற்படுத்துகிறார்கள், என்.பி.பி. அரசாங்கமொன்று வந்தால் தொழில்முயற்சிகளை அரசாங்கம் சுவீகரித்துக்கொள்ளுமாம். எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச டுவிட்டர் செய்தியொன்று மூலமாக என்.பி.பி. அரசாங்கமொன்று வந்தால் ஆதனங்களை சுவீகரித்துக்கொள்ளுமென கூறினார். சஜித் கூறியதால் எவருமே ஏற்றுக்கொள்வதில்லை. இந்த வருடத்தின் சனவரி தொடக்கம் நவெம்பர் வரை எமது நாட்டில் 1183 தொழில்முயற்சிகள் வங்கிகளால் சுவீகரிக்கப்பட்டு ஏலவிற்பனை செய்யப்பட்டுள்ளன. மிகவும் சிரமமப்பட்டு கட்டியெழுப்பிய பிஸ்னஸ். உயிர்த்தஞாயிறு தாக்குதல் வந்தது, கொவிட் வந்தது, மக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன, பொருளாதாரம் சீரழிந்தது, தொழில்முயற்சிகள் மூடப்பட்டன. சிறப்பாக இயங்கிய தொழில் முயற்சிகளை சீரழித்தவர்கள் யார்? இந்த ஆட்சியாளர்கள் தான். இப்போது என்ன நடந்துள்ளது. நாங்கள் அரசாங்கமொன்றை அமைப்பது பிரசையின் தொழில்முயற்சிகளை சுவீகரித்துக்கொள்வதற்காக அல்ல. அவர்களின் தொழில் முயற்சிகளை முன்னேற்றுவதற்காகவே. நீங்கள் சப்பாத்துக் கைத்தொழிலைப் புரிந்தால், அதற்கான தொழில்நுட்பத்தை வழங்கி, வங்கிக் கடன் வழங்கி, அந்த தொழிற்றுறைக்கு உலகின் சந்தையைத் தேடிக்கொடுத்து முன்னேற்றகரமான தொழிற்றுறையாக மாற்றுவதே எமது திட்டம். நீங்கள் சாகுபடிசெய்கின்ற நெல்வயல்கள் கல்முனை மக்களுக்கு சோறு போடுவதற்காக மாத்திரமல்ல, உலக மக்களுக்கே உணவளிக்கும் நிலைக்கு மாற்றிடவேண்டும். நாங்கள் உருவாக்கும் பொருளாதாரம் அதுவே. புதிய தொழில்முயற்சிகளை உருவாக்குகின்ற அவற்றை முன்னேற்ற ஒத்துழைப்பு வழங்குவதுதான் எமது பொருளாதாரக் கொள்கை. சுங்கத்திற்கு கட்டுப்படவோ அல்லது வருமான வரிக்கோப்புகளை மறைத்துவைக்கவோ அவசியமேற்படாத நியாயமான வரியொன்று, நியாயமான சட்டமொன்று, சாதகமான தொழில்முயற்சியை நாங்கள் உருவாக்கிடுவோம். வீழ்ந்த கைத்தொழில்களை மீட்டெடுக்கின்ற, தொழில் முயற்சிகளை முன்னேற்றுகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் அமைப்போம். தொழில்முயற்சிகளுக்கு உலக சந்தையில் உரிய இடத்தைக் கைப்பற்றிக்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.
அதைப்போலவே உலகிற்கு சமாதானம் அவசியம். இன்று பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் பிள்ளைகள் படுகின்ற வேதனை தொடர்பில் குரலொன்று தேவையில்லையா? தேசிய மக்கள் சக்தி என்பது அதோ அந்த குரலை எழுப்புகின்ற இயக்கமாகும். உலகில் அநீதியும் அநியாயமும் எங்கெல்லாம் நிலவுகின்றதோ அவற்றுக்கு எதிராக குரலெழுப்பிட நாங்கள் தயார். அத்தகைய அரசாங்கமொன்றை நாங்கள் அமைத்திடுவோம். இந்த நாட்டை மாற்றியமைக்கின்ற பாதையொன்று எமக்கு அவசியமாகும். தோழர் ஆதம்பாவா நீண்டகாலமாக இந்த கல்முனை பிரதேசத்தில் எம்மோடு செயலாற்றி வருகிறார். ரமேஸ், நளின் தோழர்கள் மிகுந்த பலம்பொருந்தியவர்களாக எம்முடன் உழைத்து வருகிறார்கள். அவர்கள் இந்த இடத்திற்கு வந்திருப்பது தமக்காக தனிப்பட்டவகையில் எதையாவது பெற்றுக்கொள்வதற்காக அல்ல. அரசாங்கத்திற்கு வருகின்ற ஒவ்வொரு சதமும் மீண்டும் மக்களைச் சென்றடைகின்ற அரசாங்கமொன்றை அமைத்திட வேண்டும். எம்முடன் இணைந்துகொள்ளுமாறு நான் இளைஞர் தலைமுறையினருக்கு அழைப்பு விடுக்கிறேன். வருங்காலத்தில் வரப்போகின்ற இயக்கம் தேசிய மக்கள் சக்தியாகும். ஆகஸ்ற் மாதத்தில் சனாதிபதி தேர்தல் பிரடனஞ் செய்யப்படும். எமக்கு எட்டு மாதங்களே இருக்கின்றன. ஒவ்வொரு வீட்டுக்கும் நாங்கள் போவோம். அனைவரையும் சந்திப்போம். நாட்டை ஆரத்தழுவியுள்ள அழிவு பற்றிப் பேசுவோம். இதனை மாற்றியமைத்திட என்.பி.பி. உடன் இணைந்துகொள்ளுமாறு அழைத்திடுவோம். இதற்கு முன்னர் எவருக்கு வாக்களித்திருந்தாலும் அந்த அனைவருக்கும் அழைப்பு விடுப்போம். இந்த நாட்டை மாற்றியமைக்கின்ற புதிய பயணத்தை நாங்கள் மேற்கொள்வோம். நாட்டைக் கட்டியெழுப்புகின்ற புதிய பயணத்தை தொடங்குவோம். வடக்கு தெற்கு கிழக்கில் உள்ள நாமனைவரும் ஒரு தாய் மக்கள்போல் சகோதரத்துவத்துடன் வாழும் நாட்டை நாங்கள் உருவாக்கிடுவோம். உலகில் ஒரு நாட்டுக்குச்சென்று நான் இலங்கையன் என பெருமிதமாக கூறக்கூடிய ஒரு நாட்டை உருவாக்கிக் கொடுப்போம். அதற்காக அனைவரும் ஒன்றுசேர்வோமென அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். இந்த நாட்டுக்கு விளைவித்துள்ள அழிவினை ஒற்றோபர் முடிவடைவதற்கு முன்னர் முடிவுறுத்துவோம்.