(-வெற்றி நமதே.. ஊர் எமதே.. மன்னார் வெற்றிப் பேரணி-2025.04.17-)
புத்தளத்திற்கும் மன்னாருக்கும் இடையிலான பாதைக்கு மாற்றுத்திட்டத்துடன் புதிய வகையில் இணைக்க நடவடிக்கை
சட்டவிரோத கடற்றொழில் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை
வடக்கில் 16 ஆயிரம் ஏக்கரில் தெங்கு பயிரிட திட்டம்
சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைத்து மக்களின் கருத்துக்களுடனே மன்னாரில் காற்றாலை திட்டங்கள் முன்னெடுப்பு
– மன்னாரில் ஜனாதிபதி தெரிவிப்பு
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த பின்னர், மாற்று திட்டங்களுடன் மன்னாரையும் புத்தளத்தையும் புதிய வழியில் இணைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இந்த வீதி திறக்கப்படுவதால் புத்தளத்திற்கான தூரம் சுமார் 90 கிலோமீட்டர் குறையும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டு மக்களுக்கு செவிசாய்த்து மக்களுக்காக பாடுபடும் ஒரு அரசாங்கம் என்றும் வலியுறுத்தினார்.
மன்னாரில் இன்று (17) நடைபெற்ற ‘ வெற்றி நமதே – ஊர் எமதே’ மக்கள் பேரணித் தொடரின் மற்றொரு பேரணியில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக இனவாத அரசாங்கங்களுக்குப் பதிலாக தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, நாட்டில் இனி இனவாதத்திற்கு இடமில்லை என்றும், தற்போதைய அரசாங்கம் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைத்து மக்களையும் சகோதரத்துவத்துடன் நடத்தும் மற்றும் அனைவரின் உரிமைகளையும் அங்கீகரிக்கும் அரசாங்கமாகும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
மன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையே படகு சேவையை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான மன்னாரிலுள்ள வளங்களைப் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெற்று சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்து அவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
யுத்த காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு வன பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்ட வடக்கில் உள்ள காணிகளை மக்களிடம் திருப்பிக் கொடுப்பதற்கும், மூடப்பட்ட பாதைகளை மீண்டும் திறப்பதற்கும் தேவையான பின்னணி உருவாக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். பேசாலை பகுதியில் சட்டவிரோத மீன்பிடித்தல் பிரச்சினையைத் தீர்க்க இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் இரு உறுப்பினர்களும் தேசியப்பட்டியல் ஊடாக ஒருவரும் தெரிவானார்கள். இந்த வெற்றிக்கு இப்பகுதி மக்கள் பெரும் பங்காற்றினர். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக பிரித்தாளுகின்ற அரசியலுக்கு முடிவு கட்டியுள்ளோம். இதற்கு முன்னர் வாக்குகளினால் மக்களை பிரித்தனர்.வடக்கு மக்கள் தமிழ் கட்சிகளை தெரிவு செய்தனர். கிழக்கு மக்கள் முஸ்லிம் கட்சிகளை தெரிவு செய்தனர். தெற்கிலுள்ள மக்கள் சிங்கள கட்சிகளை தெரிவு செய்தனர். கடந்த தேர்தலில் அனைத்து மக்களும் தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்தனர். அனைவரும் ஒன்றாக வாழும் நாடே எமக்குத் தேவை. இனவாதத்தினால் நாம் மோசமாக பாதிக்கப்பட்டோம். இனியும் இனவாதத்திற்கு இடமளிக்காது தேசிய ஐக்கியத்திற்கான அரசை உருவாக்கியுள்ளோம்.
இதற்கு முன்னர்அவ்வாறான அரசு உருவானதா? இனவாத அரசுகளே இருந்தன.சிங்களவராக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் தமிழராக இருந்தாலும் அவர்கள் இலங்கையர்கள். பிரித்தாளும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். யுத்தத்தை காரணம் காட்டி இப்பகுதி மக்களின் காணிகள் அரசாங்கத்திற்கு பெறப்பட்டுள்ளன. சில வீதிகள் மூடப்பட்டுள்ளன. சில தனியார் காணிகள் வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு பெறப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினைகளை தீர்க்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
நாட்டை முன்னேற்றுகையில் மன்னார் மாவட்டம் முக்கிய பிரதேசமாகும். மன்னார் மக்கள் கடற்றொழிலில் வாழுகின்றனர். எமது கடலில் சட்டவிரோதமாக படகுகளில் வந்து பாரிய சேதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அண்மையில் இந்திய பிரதமரின் வருகையின் போது இது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் நடத்தினோம்.எமது கடல்வளம் எமது மக்களுக்குரியது. இந்தப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எமது கடலை பாதுகாக்கும் பொறுப்பை மேற்கொள்வோம். இது தொடர்பில் கடற்படைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.
மன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையில் படகுச் சேவை இருந்தது. அதனை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் ராமேஸ்வரத்திற்கான படகு சேவையை ஆரம்பிப்போம். மன்னாரில் பாரிய காற்றலை மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய பிரதேசமாகும். மக்களின் கருத்துக்களை செவிமடுக்காது காற்றாலை திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவற்றை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு காற்றாளை செயற்பட தயாராக இருக்கிறோம். அனைத்துத் திட்டங்களும் மக்களின் ஒப்புதலுடன் பாதிப்புகளை குறைத்து மேற்கொள்வோம். சுற்றாடலுக்கு பாதிப்பான திட்டங்களுக்கு அனுமதி வழங்க மாட்டோம்.
புத்தளத்திற்கும் மன்னாருக்கும் இடையிலான பாதை நீண்டகாலமாக மூடப்பட்டுள்ளது. இந்தப் பாதையை திறந்தால் புத்தளத்திற்கான பயணத்தூரம் 90 கிலோமீட்டர் வரை குறையும். புத்தளத்திற்கான பாதை தொடர்பிலான சுற்றாடல் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளோம்.தற்பொழுது நிர்மாணிக்கப்படும் பாதைக்கு மாற்றுவழியுடன் புதிய விதத்தில் புத்தளம் மற்றும் மன்னாரை இணைக்க இருக்கிறோம். மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே இந்த அரசாங்கம் உள்ளது.மக்களின் பிரச்சினைகளை செவிமடுக்கும் அரசாங்கத்தை மக்கள் தான் ஒன்றிணைந்த உருவாக்கினார்கள்.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்தி வருகிறோம். 5 வருடங்களின் பின்னர் டொலர் கையிருப்பு பாரியளவில் அதிகரித்துள்ளது. 6 மாதங்களாக ரூபாவின் பெறுமதி அசையாமல் இருக்கிறது. எரிபொருள்,மின்சார விலைகளை குறைத்துள்ளோம்.மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வருகிறோம். அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தினோம். அஸ்வெசும கொடுப்பனவை அதிகரித்துள்ளதோடு கொடுப்பனவு பெறுவோரின் தொகையை 4 இலட்சத்தினால் அதிகரித்துள்ளோம். பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் பெறுவதற்கு 16 இலட்சம் மாணவர்களுக்கு 6 ஆயிரம் ரூபா வீதம் வழங்கினோம். புதிதாக 30 ஆயிரம் பேரை அரச சேவைக்கு இணைக்க இருக்கிறோம். அமைச்சர்களின் பின்னால் சென்று தொழில் கேட்கத் தேவையில்லை.பரீட்சைில் அதிக புள்ளி பெறுபவர்களுக்கு தொழில் கிடைக்கும். அரச சேவையில் தமிழ்மொழியில் பணியாற்றுவோரின் குறைபாடு உள்ளது. பொலிஸிலும் தமிழ் போசுவோரின் குறைபாடு உள்ளது. உங்கள் பிள்ளைகளையும் அரச சேவையிலும் பொலிஸ் சேவையிலும் இணையுங்கள்.
எமது நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமாக நிலைநாட்டப்பட வேண்டும். முன்னர் பணம் செல்வாக்கிருந்தோருக்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்படவில்லை. அவ்வாறான ஒரு நாடு தேவையில்லையா? இன்று பேதமின்றி அனைவருக்கும் சமனாக சட்டம் நிறைவேற்றப்படுகிறது. அதனால் தான் பொலிஸ்மா அதிபருக்கு பொலிசுக்குப் பயந்து தலைமறைவாக நேரிட்டது.
லஞ்ச ஊழல் திணைக்களத்தினால் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.முன்னாள் முதலமைச்சர்கள் விளக்கமறியலில் உள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளின் புதல்வர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்படுகிறது. வரலாற்றில் முதன்முறையாக பொதுமக்களின் பணத்தை திருடாத வீண்விரயம் செய்யாத அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தை பாதுகாத்து பலப்படுத்த வேண்டும். நாம் திருடுவதில்லை. திருடியவர்களை தண்டிப்போம். முன்னர் இருந்தவர்கள் ஜனாதிபதியாக தெரிவான திகதியில் இருந்து அமைச்சராக தெரிவான தினத்தில் இருந்து திருடுவதற்குத் தான் திட்டம் தீட்டினார்கள். வடமத்திய முதலமைச்சர் 26 இலட்சம் ரூபாவை மோசடி செய்த காரணத்தால் அவருக்கு எதிராக 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தவறுகள் குறித்தும் விசாரணைகளையும் நடத்தி தண்டனை வழங்குவோம். கொலை,திருட்டு,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என அனைத்தையும் விசாரணை செய்வோம். தவறு செய்த அமைச்சர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் மக்களுக்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த நிலையை மாற்றியுள்ளோம்.
உள்ளுராட்சி சபைகளுக்கு குறைவான வருமானமே கிடைக்கிறது. முசலி பிரதேச சபை குறைந்த வருமானம் பெறும் சபையாகும். மன்னார் நகர சபைக்கு குறைந்த வருமானமே கிடைக்கிறது.ஆனால் அதிக பணிகள் உள்ளன. வீதிகளை நிர்மாணிக்க வேண்டும்.வடிகாண்களை சீரமைக்க வேண்டும்.பொதுமயானங்களை சீர்செய்ய வேண்டும். முன்பள்ளிகளை அமைக்க வேண்டும். ஆனால் எமது அரசாங்கத்திடம் நிதி உள்ளது. வடக்கு மாகாண வீதிகள் சீரமைக்க இந்த வருடம் 5 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளோம். மேலும் வடக்கில் 16 ஆயிரம் ஏக்கரில் தென்னங்கன்றுகளை நட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதற்கான சகல வசதிகளையும் வழங்குவோம். அந்த நிதியை யாருக்கு ஒதுக்க வேண்டும். உள்ளுராட்சி சபையிடம் நிதி இல்லாத போது மத்திய அரசு அதற்கான நிதியை வழங்கப்படும். உள்ளுராட்சி சபைகளிடம் இருந்து வரும் பரிந்துரைகளை ஆராய்ந்து நிதி ஒதுக்குவோம்.நிதியை ஒதுக்க முன்னர் யார் அந்த பரிந்துரைகளை அனுப்புகின்றனர் என்று ஆராய்வோம்.
மன்னார் நகர சபை தேசிய மக்கள் சக்தியின் கீழ் இருக்கும் உள்ளுராட்சி சபையெனின் அந்த பரிந்துரையை கண்ணை மூடிக்கொண்டு அனுமதிப்போம். ஆனால் ஏனைய கட்சியின் கீழ் உள்ள உள்ளுராட்சி சபைகள் எனின் ஆயிரம் தடவை ஆராய்வோம்.வீதிக்கு கொங்கிரீட் இட நிதி கோருவார்கள். வீதிக்கு கொஞ்சம் தான் பணம் செல்லும். அதிக தொகையை சுருட்டிக் கொள்வார்கள். மத்திய அரசாங்கம் திருடாமல் பணத்தை சேகரித்து வைத்த பணத்தை திருடுவதற்காக மன்னாருக்கு அனுப்ப வேண்டுமா? மத்திய அரசு திருடாவிடின் உள்ளுராட்சி சபையும் அவ்வாறே இருக்க வேண்டும். நகர சபை,மற்றும் பிரதேச சபைகளை தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக் கொடுங்கள்.இல்லாவிடின் மத்திய அரசு திருடாத நிலையில் உள்ளுராட்சி சபை திருடும் நிலை ஏற்படும். தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரும் வாக்களியுங்கள்.எதிர்வரும் மே 6 ஆம் பலமான மக்கள் ஆணையை பெற்றுத் தாருங்கள். இங்கு என்ன நிலைமை என்ன என்று கேட்டேன். ‘ நல்லம்’ என்றார்கள். பொதுத்தேர்தலை விட சிறந்த பெறுபேறு இந்த தேர்தலில் கிடைக்கும். நாடு முன்னேற்றப் பாதைக்கு வந்துள்ளது. பழைய தோல்வியடைந்த பாதையில் இனியும் சென்று பயனில்லை.
அமைச்சர் ராமலிங்கம் சந்ரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜகதீஸ்வரன் ஆகியோரும் இங்கு உரையாற்றியதோடு உள்ளுராட்சி சபை வேட்பாளர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.