Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு “ரணில் விக்கிரமசிங்கவைப்போல் அரசியலமைப்பினை மீறிய தலைவரொருவர் இலங்கை வரலாற்றில் இல்லை” -சட்டத்தரணி சுனில் வட்டகல- “மறுமலர்ச்சிக்காக முழு நாடுமே ஒன்றாக” எனும் தொனிப்பொருளில் நேற்று (21) முற்பகல் கொட்டகலை மலையகம் மக்கள் சபை நிகழ்வு இடம்பெற்றது. “உலகின் எந்தவொரு நாட்டுடனும் போட்டியிட்டு பயணிக்கக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதே திசைகாட்டியின் எதிர்பார்ப்பு” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க- ஜப்பானுக்கு அநுர
X

“இதுவரை பிரிந்திருந்து ஆட்சியமைத்த யுகத்திற்கு நாம் முடிவுகட்டுவோம்!தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் ஐக்கியத்தை உறுதிப்படுத்துகின்ற அரசாங்கத்தை கட்டியெழுப்புவோம்.”-தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க-

(தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட மாநாடு – 16.03.2024 – கிளிநொச்சி கூட்டுறவு கலாச்சார மண்டபத்தில்)

நிலவுகின்ற பிரச்சினைகள் எதுவும் சுயமாக தோன்றியவை அல்ல. எமது நாட்டில் அரசியல் அதிகாரம் கொண்டுள்ள அரசியற் கட்சிகளால் பிரச்சினைகள் உருவாக்கப்பட்டன. அதனால், தமிழ் மக்களாகிய நீங்களும், பொது மக்கள் என்ற அடிப்படையில் நாம் எல்லோரும் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளில் இருந்து வெளிவருவதற்காக அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வோம். அரசியல் தீர்வினை எட்டாமல் இதிலிருந்து மீளமுடியாது. ஒடுக்கப்பட்ட, துன்பத்தில் ஆழ்த்தப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு, மலையகம், தெற்கு உள்ளிட்ட எல்லா பகுதிகளிலும் வாழ்கின்ற மக்களின் ஒத்துழைப்புடன் நாம் புதிய அரசாங்கத்தை நிர்மாணிக்க வேண்டும்.

இவ்வருடம் கட்டாயமாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். நீங்கள் பல விதங்களில் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்டிருக்கிறீர்கள். தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்த வேட்பாளருக்கு வாக்களித்திருக்கிறீர்கள். தெற்கு அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்திருக்கிறீர்கள். அதைப்போல, தேர்தலை புறக்கணித்திருக்கிறீர்கள். இவ்வாறு பல முடிவுகளை ஜனாதிபதித் தேர்தலின்போது நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.

பொதுவாக வடபகுதி மக்கள் ஜனாதிபதித் தேர்தலை தமது தேர்தலாக கருதுவது இல்லை. கொழும்புத் தலைவரை தேர்ந்தெடுத்தல், சிங்களத் தலைவரை தேர்ந்தெடுத்தல் எனும் அபிப்பிராயமே பெரும்பாலான தமிழ் மக்கள் மத்தியில் இருக்கிறது. அதனால், ஜனாதிபதி தேர்தல் என்பது தெற்கிற்கானது என்றும் வடக்குக்கானது அல்லவென்றும் கருதுகிறார்கள். ஜனாதிபதித் தேர்தல் கொழும்பிற்கானது; கிளிநொச்சிக்கானது அல்லவென்றா நீங்களும் நினைக்கிறீர்கள்? அதனால், இதுவரை பிரிந்திருந்து ஆட்சியமைத்த காலத்திற்கு நாம் முடிவுகட்டுவோம். அதற்காகவே, உங்களை சகோதரத்துவத்துடன் அழைப்பதற்கு நாங்கள் கிளிநொச்சிக்கு வந்தோம். எல்லா மக்களும் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசாங்கத்தை நாம் ஸ்தாபிப்போம். எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலென்பது தெற்கிற்கானது மட்டுமல்ல! இது எல்லா மக்களினதும் எதிர்பார்ப்பையும் எதிர்காலத்தையும் தீ்ர்மானிக்கின்ற தேர்தலாகும்.

சிங்கள பிரதேசங்களில் தேசிய மக்கள் சக்திக்கு இன்றிருக்கின்ற வரவேற்பினை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். மாபெரும் மக்கள் படை எம்முடன் இணைந்திருக்கிறது. நாங்கள் சிங்கள் மக்கள் மத்தியில் மாத்திரம் வெற்றிபெறுவதால் பலனில்லை. தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவில்லாத அரசாங்கம் இருந்து என்ன பயன்? அரசாங்கத்தை கைப்பற்றிய பின்னர் ஒற்றுமையை நிலைநாட்டுவது மாத்திரமல்ல, அதற்கு முன்னரே அரசாங்கத்தை அமைக்கவும் நாம் ஐக்கியப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் இருந்த கருத்துதான் அரசாங்கத்தை அமைத்தப் பின்னர் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகும். ஆனால், தமிழ், சிங்கள, முஸ்லிம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம். தெற்கின் அரசாங்கம், வடக்கின் அரசாங்கம், கிழக்கின் அரசாங்கம் என்பதற்குப் பதிலாக மக்களை ஒன்றிணைத்த நமது நாட்டுக்கான ஒரு புதிய அரசாங்கத்தை நாம் ஸ்தாபிப்போம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் விசாலமானன பாதை திறந்திருக்கிறது. வடக்கின் ஒத்துழைப்பு இல்லாமல் அந்த அரசாங்கத்தை அமைத்துப் பயனில்லை. அதனால், எம்மோடு இணைந்துகொள்ளுங்கள் என்று நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

தெற்கின் சிங்கள மக்கள் நீண்ட காலமாகவே ஆட்சியாளர்களிடம் ஏமாந்தார்கள். அவர்கள் திருட்டு ஆட்சியாளர்களை உருவாக்கினார்கள். மக்களது சொத்துக்களை வீண்விரயமாக்கும் தலைவர்களை உருவாக்கினார்கள். சிங்களத் தலைவர்களை சுற்றியிருந்த ஒரு கும்பலின் நன்மைக்காக அரசாங்கத்தை அமைத்தார்கள். ஆட்சியாளரின் மனைவி, மகன், மகள் ஆட்சிக்கு வருவதற்கான அரசாங்கத்தை உருவாக்கினார்கள். ஜனாதிபதிக்கு மகன் பிறப்பதே அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில்தான். அவ்வாறுதானே தெற்கில் நடக்கிறது? மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதயாகினார் மகன் அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு கனவு காண்கிறார். ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாகினார். மகன் அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு கனவு காண்கிறார். இது தவறான அரசியல் முன்னுதாரணம் ஆகும். தாம் புரிந்த தவறை தெற்கில் உள்ள சிங்கள் மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். அதனால், இலட்சக்கணக்கான மக்கள் தேசிய மக்கள் சக்தியோடு கைகோர்த்திருக்கிறார்கள். அதுப்போல, கிளிநொச்சிவாழ் மக்களும் நாம் அமைக்கப்போகும் புதிய அரசாங்கத்தில் பங்குதாரர்களாக மாறவேண்டும். நாம் எல்லோரும் ஒன்றுசேர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நாம் பிரிந்து தனித்தனியாக நிற்க வேண்டுமா? உங்களுக்கும் எமக்கும் இடையில் இருக்கின்ற வித்தியாசம் என்ன? நீங்கள் தமிழ் மொழியில் கதைக்கிறீர்கள். நான் தமிழ் மொழியில் கதைக்கிறேன். நீங்கள் இந்து மதத்தைப் பின்பற்றுகிறீர்கள். நான் பௌத்த தர்மத்தை கடைப்பிடிக்கிறேன். உங்களுக்கென்று தனித்துவமான கலாச்சார மரபுகள் இருக்கின்றன. சிங்கள மக்களுக்கு அதுபோலத்தான். ஆனால், தமது குழந்தைகள் மீது வைத்திருக்கும் அன்பில் தமிழ், சிங்களம் பாகுபாடு இருக்கிறதா? வயிற்றுப் பசிக்கு வேறுபாடு இருக்கிறதா? எமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளில் வேறுபாடு இருக்கிறதா? தமது பிள்ளைகள் நல்ல தொழிலுக்கு செல்லவேண்டும் என்று சிந்திக்கின்ற பெற்றோர்களின் கனவுகளில் சிங்களம், தமிழ் என்ற பாகுபாடு இருக்கிறதா? நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகும்போத ஏற்படும் வேதனையில் வேறுபாடு இருக்கிறதா? நாம் பிறந்த பின்புலத்திற்கு அமைய, பெற்றோருக்கு அமைய நாம் பேசும் மொழி தமிழாகவோ, சிங்களமாகவோ இருக்கிறது. கடைப்பிடிக்கும் சமயம் இந்துவாகவோ, பௌத்தமாகவோ இருக்கிறது. கலாச்சாரத்திலும் வேறுபாடு இருக்கிறது. ஆனால், இவற்றுக்கு அப்பால் நாம் எல்லோரும் மனிதர்கள். வேறுபட்ட சமூகமாயினும் வேதனை, துக்கம், கண்ணீர் எல்லாம் இருக்கிறது. அதுபோலத்தான் மகிழ்ச்சியின்போதும் புன்முறுவல் பூக்கிறது. எமக்கு ஆசாபாசம் எல்லாம் இருக்கிறது. நாம் ஏன் பிளவுப்பட்டிருக்க வேண்டும். ஏன் சண்டையிட்டுக்கொள்ள வேண்டும்? ஏன் மோதிக்கொள்ள வேண்டும். அந்த யுகத்துக்கு நாம் முற்றுப்புள்ளி வைப்போம்.

எங்களது கால மக்கள் மோதிக்கொண்டார்கள். யுத்தம் செய்தார்கள். வடக்கிலும் தெற்கிலும் நமது வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் உயிரிழந்தார்கள். எங்களுக்கு என்ன மிஞ்சியிருக்கிறது? பெற்றோர் பிள்ளைகளை இழந்துள்ளனர். எமக்கிடையில் சந்தேகம், விரோதம் வளர்ந்திருக்கிறது. இன்றும்கூட தெற்கில் உள்ள சிறிய கும்பல் இனவாதபோக்கில் செயற்படுகின்றது. வடக்கிலும் அவ்வாறான கும்பல் இருக்கின்றது. ஆனால் பொதுமக்கள் இனவாதிகளா? நீங்கள் அனுராதபுரத்திற்குச் செல்லும்போது அங்குள்ள சிங்கள மக்கள் உங்களை இனவாத கண்ணோட்டத்தில் பார்ப்பதாக நீங்கள் உணருகிறீர்களா? அல்லது அநுராதபுரத்தில் இருந்து கிளிநொச்சிக்கு வருபவர்களை நீங்கள் சிங்களவர்கள் என்று அவதூறு செய்கிறீர்களா? அப்படியில்லை. சாதாரண மக்கள் மத்தியில் இனவாதம் கிடையாது. நாம் சகோதரத்துடன் வாழ்ந்த மக்கள். கோவில் திருவிழாக்களை ஒன்றாக கொண்டாடிய மக்கள். ஆனால், நடந்திருப்பது என்ன? அரசியல்வாதிகள் எம்மை பிரித்தார்கள். நீண்டகாலமாகவே மக்களை பிளவுப்படுத்தும் அரசியலே இங்கு இருக்கிறது. ஆனால், எமது அயல்நாடான இந்தியாவைப் பாருங்கள். 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடையும்போது அவர்களிடம் நாட்டைக் கட்டியெழுப்புதற்கான ஒரு திட்டம் இருந்தது. வேறுப்பட்ட மொழி, கலாச்சாரம், வழிபாட்டு முறைகளை கொண்ட மக்களை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைத்தார்கள். அப்துல் கலாம் ஜனாதிபதியாகினார். சீக்கியரை பிரதமராக கொண்டுவந்தனர். தற்போது ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி ஜனாதிபதியாக இருக்கிறார். இந்தியர்களின் ஒற்றுமை இந்தியாவுக்கு பெரும் வெற்றிகளை ஈட்டித்தந்தது. ஆனால் நமது நாட்டின் நிலைமை என்ன? 1948 இல் எமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது. 1949 இல் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்து மலையக மக்களின் குடியுரிமையைப் பறித்தார்கள். அதனை எதிர்த்து செல்வநாயகம் அவர்கள் தமிழரசுக் கட்சியை ஸ்தாபித்தார். ஆட்சியாளர்கள் 1956 இல் மொழிப்பிரச்சினையை உருவாக்கினார்கள். 1958 இல் சிங்கள – தமிழ் மோதலை உருவாக்கினர். 1958 இன் இடைக்காலத்தில் ஸ்ரீ எழுத்துக்கு கருப்புச் சாயம் பூசினார்கள். 1965 இல் டட்லியின் வயிற்றில் மசாள் வடை என்று ஊர்வலம் சென்றார்கள். 1976 இல் வட்டுக்கோட்டை மாநாடு நடத்தப்பட்டது. 1977 தேர்தலில் தனி நாட்டை உருவாக்க உதய சூரியனுக்கு வாக்களிக்குமாறு கேட்டனர். 1981 இல் யாழ். நூரகத்திற்கு தீவைக்கப்பட்டது. 1983 இல் கொழும்பில் இரண்டாம் மற்றும் நான்காம் குறுக்குத் தெருக்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 83 கறுப்பு ஜூலையைத் தொடர்ந்து தற்கொலை குண்டுதாரிகள் உருவாகினர். 2009 இல் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. 2015 இல் மலட்டுக்கொத்து என்ற கட்டுக்கதையை கொண்டுவந்தார்கள். 2016 இல் மலட்டுத்தனத்தை ஏற்படுத்தக்கூடிய ஆடைகள் என்ற புரளியை கிளப்பிவிட்டார்கள். 2019 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. சுதந்திரத்தின் பின்னரான நம்முடைய வரலாறு என்ன? நாம் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டதே வரலாறாக உள்ளது. இந்த வரலாற்றுக்கு முடிவுக்கட்ட வேண்டாமா? எமது பிள்ளைகள் மோதிக்கொள்ளக்கூடிய எதிர்காலத்தை நாம் உருவாக்க வேண்டுமா? குழந்தைகளை யுத்தத்திற்குள் தள்ளவேண்டுமா? இதனை தடுத்து நிறுத்தவேண்டும். அதனைத்தான் நாங்கள் முன்வைக்கின்றோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையின் முதற் தடவையாக வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதித்தும் செய்யக்கூடிய ஓர் அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை ஸ்தாபிப்போம்.

மக்களை துண்டாடுகின்ற அரசாங்கம் வேண்டாம். ஒரு சமூகத்துக்கு எதிராக இன்னொரு சமூகத்தை ஏவிவிடுகின்ற அரசாங்கம் வேண்டாம். ஐக்கியமான அரசாங்கத்தை கட்டியெழுப்புவோம். நாம் அதனை நிர்மாணிப்போம். துன்பநிலையில் இருந்து நாம் மீண்டெழுவோம். “சமஷ்டி தருகிறோம், 13 பிளஸ் தருகிறோம். எங்களுக்கு வாக்களியுங்கள்.” என்று நாங்கள் கேட்கப்போவதில்லை. நாங்கள் உங்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்ய வரவில்லை. “நாங்கள் பெடரல் தருகிறோம். நீங்கள் எமக்கு வாக்களியுங்கள்.” என்று கேட்டால் அது பிஸ்னஸ். “நாங்கள் 13 பிளஸ் தருகிறோம். நீங்கள் எமக்கு வாக்களியுங்கள்.” என்று கேட்டால் அது கொடுக்கல் வாங்கல். நாங்கள் உங்களை சந்திக்க வந்தது பிஸ்னஸ் செய்வதற்கோ, கொடுக்கல் வாங்கல் செய்வதற்கோ அல்ல. நாங்கள் வந்ததன் நோக்கம் நாம் எல்லோரும் இணைந்து நமக்கான அரசாங்கத்தை உருவாக்கி எமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வோம் என்று அழைப்பு விடுப்பதற்கே ஆகும். அரசியல்வாதிகள் வியாபாரிகளாக இருக்க கூடாது.

எமது அரசாங்கத்தில் வடக்கை பிரதிநிதித்துவம் செய்கின்ற அமைச்சர் நிச்சயமாக இருப்பார். இனவாதிகள் அல்லாத தமிழ் அரசியல் தலைவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். எமது அரசாங்கத்தின் பங்குதாரர்களாக இருங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். அதன்பின்னர் ஒன்றாக இணைந்து பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வோம் என்று கூறியிருக்கின்றோம்.

மொழிப்பிரச்சினைக்கு எமது ஆட்சியில் நிச்சயம் தீர்வினை வழங்குவோம் என்று உறுதியளிக்கிறோம். நீங்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள். உங்களது தாய்மொழி தமிழ். அரசுடன் தமிழ் மொழியில் பரிவர்த்தனையில் ஈடுபடுவதற்கான உரிமையை நாங்கள் உறுதிப்படுத்துவோம். நீங்கள் ஜனாதிபதிக்கு தமிழ் மொழியில் கடிதம் எழுதினால் பதில் உங்களுக்கு தமிழ் மொழியில் கிடைக்க வேண்டும். மொழியின் உரிமையை நாம் ஒன்றுசேர்ந்து உறுதிப்படுத்துவோம். அதுமட்டுமல்ல, எல்லா பிரஜைகளினதும் கலாச்சார அடையாளங்களுக்கு மதிப்பளிக்கின்ற, கலாச்சார தனித்துவத்தைப் பாதுகாக்கின்ற, அவற்றை மேம்படுத்தக்கூடிய நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம்.

ஆனால் இன்று நடந்திருப்பதென்ன? வடக்கில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் கோவிலோ, விகாரையோ, தேவாலயமோ தென்பட்டால் மோதிக்கொள்கிறோம். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முந்தைய எமது வரலாற்றில் அங்கு ஒரு கோவில் இருந்திருக்க கூடும். விகாரை இருந்திருக்க கூடும். அது எமது வரலாறு. அந்த வரலாற்றுக்காக நாம் ஏன் மோதிக்கொள்ள வேண்டும். நாம் அதனை ஆய்வு செய்து பாதுகாத்து எதிர்கால பரம்பரம்பரைக்கு ஒப்படைப்போம். வரலாற்றில் கோவில் இருந்ததற்காக, விகாரை இருந்ததற்காக நிகழ்காலத்தில் நாங்கள் அடித்துக்கொள்ள வேண்டுமா? இங்கு என்ன நடக்கிறது? வரலாற்றுச் சின்னம் ஒன்று தென்படுமாயின் அது இந்நாட்டின் எல்லா மக்களினதும் சொத்தாகும். அதற்குத்தான் தொல்பொருள் சின்னம் என்கின்றோம். அதற்கு மதபாகுபாடு, இனபாகுபாடு கிடையாது. அது எங்களுடைய வரலாறு. ஆனால், இன்று என்ன நடந்துகொண்டிருக்கிறது? அதை மையப்படுத்தி இன்று சண்டைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு அமர்ந்திருக்கும் உங்களுக்கு அதுதொடர்பில் முரண்பாடு இருக்கிறதா? ஆனால், அது வடக்கிலும் தெற்கிலும் இருக்கக் கூடிய அரசியல்வாதிகளுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. வரலாற்றுச் சின்னம் நிகழ்காலத்தில் வாழுகின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் எம் எல்லோரினதும் வரலாற்று பெறுமதியாகும். அவ்வாறில்லாமல் வரலாற்றைத் தேடித்தேடி நாம் மோதிக்கொள்ள வேண்டுமா? அந்தக் கலாச்சார அடையாளங்களின் தனித்துவத்தை பாதுகாக்க வேண்டும். அதுமட்டுமல்ல, பொலிஸில், இராணுவத்தில் உங்களது பிள்ளைகள் பங்கேற்பதற்கான வாய்ப்பினை நாங்கள் விரிவுப்படுத்துவோம்.

நாம் தற்போது மிகப்பெரிய பிரச்சினைக்கு முகம்கொடுத்திருக்கிறோம். வடக்கு கடற்பரப்பில் எமது கடல் வளத்தை இந்திய மீனவர்கள் கவர்ந்து செல்கிறார்கள். இந்தியாவில் அண்மையில் மாநிலத் தேர்தலொன்று நடைபெறவிருப்பதால் மீனவர் பிரச்சினையை வளரவிட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வடக்கு கடல் தமிழர்களுக்கானதென்றும், வடக்கு கடல் சிங்களவர்களுடையதென்றும் ஒரு காலத்தில் யுத்தம் செய்தோம். ஆனால், இன்று வடக்கு கடற்பரப்பு யாருடையது? இந்தியாவினுடையது.

உங்களுக்குத் தெரியும் மன்னார் பிரதேசத்தில் காற்றாலை மின்சக்தியை உருவாக்க முடியும். அது எமது நாட்டு எதிர்காலத்தின் பெறுமதியான வளம். நல்ல காற்று வீசுகின்றது. அந்தக் காற்றின் சக்தியின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். ஒரு காலத்தில் மன்னாரில் நிலத்திற்காக யுத்தம் நிலவியது. ஆனால், இன்று அந்தப் பகுதியின் காற்றாலை மின்னுற்பத்திக்கு சொந்தக்காரர்களாக யார் இருக்கிறார்? அது இந்தியாவின் அதானிக்கு உரிமையாகிவிட்டது. இங்கு என்ன நடந்திருக்கிறது.

புன்னக்கரை நீர்த்தேக்கத்தில் மாபெரும் சூரியசக்தி மூலம் மின்சக்தியை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், அதில் ஒரு அலகினை 52 ரூபாவுக்கு பெற்றுக்கொள்வதற்கு அவுஸ்திரேலிய நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்படுகிறது. ஆனால், நாங்கள் சண்டையிட்டுக்கொள்கிறோம். எமது செல்வங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை நோக்கிச் செல்கின்றன. அதனால், நீங்கள் பிறந்து வாழ்ந்த உங்கள் நிலத்தின் உரிமையை உங்களுக்கு உறுதி செய்ய வேண்டும். அதனை நாங்கள் செய்துகாட்டுவோம்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் பெற்றல் செட்களை பகிர்ந்துகொள்ள தெற்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சண்டைபிடித்துக்கொண்டார்கள். யுத்தத்தின் பின்னர் விசாலமான காணிகளை அரசியல்வாதிகளின் அடியாட்களுக்கு கொடுத்தார்கள். இன்று வடக்கில் உள்ள விசாலமான கடற்கரையின் பெரும்பகுதி தெற்கில் உள்ள அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக இருக்கிறது. தெற்கில் இருக்கக்கூடிய நிலங்களும் அவர்களுக்குத்தான் சொந்தமாக இருக்கிறது. உங்களது நிலத்தின் உரிமையை நாங்கள் உங்களுக்கு உறுதிப்படுத்துகிறோம்.

எனக்குத் தெரியும், 1984 ஆம் ஆண்டில் இங்கு குடியேறிய தமிழ் மக்கள் இருக்கிறார்கள். இன்றும் அவர்கள் வாழுகின்ற குடியிருப்புக்கு உறுதிப்பத்திரம் கிடையாது. உங்களது இடத்திற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். அதேப்போல, தேசிய ரீதியில் நீங்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு நாம் ஒன்றிணைந்து அரசாங்கத்தினை அமைப்பதன் ஊடாக தீர்வினைப் பெற்றுக்கொள்வோம். அரசியலமைப்புச் சட்டத்தில் எவ்வகையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது பற்றி ஆராய்வோம். அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான மாற்றத்தை ஏற்படுத்துவோம். அதுமட்டும் போதுமா? உங்களுக்கு முறையாக மூன்று உணவுவேளை கிடைக்கிறதா? உங்களது பிள்ளைகளுக்கு தொழில்வாய்ப்புகள் கிடைக்கிறதா? பிள்ளைகளுக்கு கல்வி கிடைக்கிறதா? எதுவுமே கிடைப்பதில்லை. அவை அரசியல் பிரச்சினை ஆகும். அவற்றினை நாம் தீர்க்க வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் முதலாவது அரசாங்கம் குறைந்த காலத்தில் எல்லா மக்களினதும் மூன்றுவேளை உணவினை உறுதி செய்வோம். இன்று பலர் ஒருவேளை சாப்பிட்டால் இன்னொருவேளை சாப்பிடுவதில்லை. குழந்தைகளுக்கு போசாக்கான உணவு இல்லை. அனேகமான தாய்மார் அரைவயிற்றுடன் நித்திரை கொள்கிறார்கள். எந்தவொரு உயிரினத்தினதும் அடிப்படை தேவை உணவு. அவ்வாறான உணவினை வழங்க முடியாத அரசாங்கம் எதற்காக? சரியான உணவினை பெற்றுக்கொள்ளாமல் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? அதனால் முதலாவதாக மக்களின் உணவுப்பிரச்சினைக்கு நாங்கள் தீர்வினை வழங்குவோம். “அரசாங்கத்தை பெற்றுக்கொண்டு 2048 இல் நாட்டை கட்டியெழுப்புவோம், அப்பொழுது உங்களுக்கு உண்ண உணவு தருவோம்.” என்று ரணில் விக்ரமசிங்க கூறியதுபோல எங்களால் கூறமுடியாது.

அடுத்ததாக மருத்துவம், அனேகமாக வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்கள் இந்நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லை. மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை அமைச்சர் திருடியிருக்கிறார். சிந்தித்துப் பாருங்கள். உணவுக்கும் குடிபானத்துக்கும் விசத்தை சேர்க்க மாட்டோம் என்ற கலாச்சாரம் எமது நாட்டில் இருந்தது. ஆனால், என்ன நடந்திருக்கிறது? மருந்து விசம் கலக்கப்பட்டிருக்கிறது. அப்படியான அமைச்சர்களால் கட்டியெழுப்பப்பட்ட நாடு இது. நாங்கள் கொழும்பு நீதியரசருக்கு நன்றி கூறினோம். ஏனெனில், நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்படும் வரை பிணை வழங்கப்படமாட்டாது என்று கெஹெலியவுக்கு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவரைப்போலவே, இன்னும் நிறைய பேர் பாராளுமன்றத்திற்குள் இருக்கிறார்கள். அவர்கள் திருடுவதற்கு 2048 வரை பார்த்துக்கொண்டிருப்பதில்லை. இன்றும் கொள்ளையடிக்கிறார்கள். வீண்விரயம் செய்வதற்கு அவர்கள் 2048 வரை பார்த்துக்கொண்டிருப்பதில்லை. இன்றும் வீண்விரயம் செய்கிறார்கள். கடந்த தினங்களில் யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கண்காட்சி இடம்பெற்றது. அதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த தென்னகோன் ஹெலிகொப்டரில் வந்தார். பாதுகாப்பு ஆலோசகர் அவர் இன்னொரு ஹெலிகொப்டரில் வந்தார். அடுத்து சவேந்திர சில்வா தனியொரு ஹெலிகொப்டரில் வந்தார். பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்னவும் ஹெலிகொப்டரில் வந்தார். ஆனால், மக்கள் 2048 வரையில் மருந்துகளை பெற்றுக்கொள்ள காத்திருக்க வேண்டும். என்ன ஆட்சியாளர்கள் இவர்கள்? ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு சுற்றுலாவுக்கென்று வரவுசெலவில் நிதியை ஒதுக்கிக் கொள்கிறார். வருடம் முடிவதற்கு முன்பே அவருக்கு ஒதுக்கிக்கொண்ட பணத்தை சுற்றுலா சென்றே முடித்துவிட்டார். அதனால், அண்மையில் பாராளுமன்றத்தில் சுற்றுலா செல்வதற்காகவேண்டி அவருக்கு மேலும் 2000 இலட்சம் ரூபா ஒதுக்கிக்கொடுக்கப்பட்டது. மக்களுக்கு உணவில்லை. வைத்தியசாலைகளில் மருந்தில்லை. அவற்றைப் பெற்றுக்கொள்ள 2048 வரை இருக்கச்சொல்கிறார். ஆனால், ரணில் விக்ரமசிங்க சுற்றுலா செல்வதற்கான பணம் தீர்ந்ததென்று மேலும் 2000 இலட்சம் ரூபாவை ஒதுக்கிக்கொள்கிறார்கள். ஆனால், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் உங்களது மருந்து தேவையை பூர்த்தி செய்யும்.

மூன்றாவதாக குழந்தைகளினுடைய கல்வி. பிள்ளைகளுக்கு பாடபுத்தகங்களை பெற்றுக்கொள் முடிவதில்லை. கல்வியில் ஈடுபடுவதற்கு போசாக்கான உணவு இல்லை. அணிந்துகொள்வற்கு நல்ல சப்பாத்து இல்லை. இப்படித்தான் பிள்ளைகள் இருக்க வேண்டுமா? பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறார்கள். அதற்காக கஸ்டப்படுகிறார்கள். சிறந்த கல்வியே பெற்றோர்களின் பிரார்த்தனையும் ஆகும். நாங்கள் முதற்கட்டமாக உணவு, மருத்தும், கல்வி ஆகிய மூன்றையும் பிரஜைகளுக்கு உறுதிப்படுத்துவோம். அதன் பின்னர் மேலும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தேவைப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் வளமான விவசாய நிலங்கள் இருக்கின்றன. இங்குள்ள மக்கள் கடுமையான உழைப்பாளர்கள். யுத்தம் நிறைவடைந்து குறுகிய காலப்பகுதிக்குள் நான் கிளிநொச்சிக்கு வந்தேன். எமது கணேசப்பிள்ளை தோழரின் வீட்டில் சிறிய தென்னை மரங்கள் இருந்தன. அம்மரங்களில் நல்ல பிரதிபலன் இன்று கிடைக்கிறது. அதுப்போலத்தான் இங்கு பலரின் விவசாய நிலங்களும் இருக்கின்றன. அவர்களுக்கு சரியான, விதை, உரம், கிருமிநாசினி மற்றும் முறையான வடிகாலமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தால் இந்த கிளிநொச்சி மாவட்ட விவசாய நிலங்களில் இருந்து முழு இலங்கை மக்களுக்கும் உணவினை வழங்க முடியும். ஆனால், என்ன நடந்திருக்கிறது? சரியான நீர்வழங்கல் திட்டம் இல்லை. கோடைக்காலத்தில் நிலம் வெடிக்கும் அளவுக்கு வரட்சி. மழைக்காலத்தில் மண் கழுவிச்செல்லும் நிலைமை. இதனை சரியாக முகாமைத்துவம் செய்யவேண்டும். சரியாக முகாமைத்துவம் செய்தால் உங்களது தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும். பாழடைந்திருக்கின்ற கிளிநொச்சி மாவட்ட விவசாய நிலங்களை இங்குள்ள தாய், தந்தையரின் கரங்களினால் வளம் மிக்கதாக மாற்றியமைக்க முடியும். அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம். அதற்கான வேலைத்திட்டத்தினை உருவாக்குவோம். ஆனால், இங்குள்ள பிரச்சினை என்ன? கஸ்டப்பட்டு அறுவடை செய்தாலும் அதனை விற்கமுடிவதில்லை. ஒரு கிலோ பொலநறுவை, அம்பாறை நெல்லை விட கிளிநொச்சியில் ஒரு கிலோ நெல்லின் விலை குறைவு. கிளிநொச்சி விவசாயிகள் பாடுபடாமல் வேறுவழியிலா அதைப் பெறுகிறார்கள்? நியாயம் கிடைக்க வேண்டும். பொலநறுவை, அம்பாறையில் நெல் வாங்குவதை விட இங்கு இலாபம் என்று எனக்கு பல ஆலை உரிமையாளர்கள் கூறியிருக்கிறார்கள். நாட்டின் ஏனைய பகுதிகளை விட கிளிநொச்சியின் நெல் விலை குறைவு. ஏனைய பகுதிகளை விட இப்பகுதியில் மரக்கறிகளின் விலையும் குறைவு. அவற்றுக்கு சரியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

யுத்தத்தின் பின்னரும் எமது மக்களின் வாழ்க்கை நல்லதொரு நிலைமைக்கு திரும்பவில்லை. இவ்வாறான பல பிரச்சினைகளுக்கு நீங்கள் முகம்கொடுத்துள்ளீர்கள். அதனால் நீங்கள் இரு வகையான பிரச்சினைக்கு முகம்கொடுக்கிறீர்கள். முதலாவது, தமிழ் மக்கள் என்ற வகையில் முகம்கொடுக்கின்ற பிரச்சினை. இரண்டாவது, பொதுவாக எல்லா மக்களும் முகம் கொடுக்கும் பிரச்சினையில் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்கள். இந்த பிரச்சினையில் இருந்து நாம் விடுபட வேண்டாமா?

அரசாங்கத்தை கைப்பற்றிய உடனடியாகவே இவற்றையெல்லாம் சரிசெய்யமுடியும் என்று நான் கூறவில்லை. ஆனால், இந்த நாட்டை மாற்றுவதற்கு எம்மால் செயற்பட முடியும். நல்ல திசைக்கு கொண்டு செல்ல முடியும். பிரிந்திருக்கின்ற மக்களை ஒன்று சேர்க்க முடியும். மொழியில், பண்பாட்டு கலாச்சாரங்களில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். உணவு, சுகாதாரம், கல்வி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பாதையை உருவாக்க முடியும். அதனை செய்வதற்கு அரசியல் அதிகாரத்தை நாம் கைப்பற்ற வேண்டும். அதனால், அரசாங்கத்தை கைப்பற்றிக்கொள்வதென்பது முடிவு கிடையாது. அதுதான் இந்நாட்டை கட்டியெழுப்புதற்கான தொடக்கப்புள்ளி ஆகும். குறிப்பாக, ஜனாதிபதித் தேர்தலில் வடக்கில் வாழ்கின்ற உங்களின் ஆதரவை எங்களுக்குத் தாருங்கள். இனவாதம், அடிப்படைவாதம் இல்லாத நடுநிலையான தமிழ்த் தலைவர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுடன் நாங்கள் கலந்துரையாடுகின்றோம். நாங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் யாழ்ப்பாணம் செல்லவிருக்கிறோம். அங்குள்ள அரசியல் தலைவர்களுடன் நாங்கள் கலந்துரையாட தயாராக இருக்கிறோம். பிரிந்திருந்த காலத்திற்கு முடிவு கட்டுவோம். மோதிக்கொண்ட காலத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம். பிற இனத்தவரை சந்தேகத்துடனும், குரோத்ததுடனும் பார்த்த காலத்தை நிறைவுக்கு கொண்டுவருவோம். அதை வரலாற்றின் ஒரு பகுதியாக மாற்றுவோம். நாம் எல்லோரும் ஒன்றிணைந்து எதிர்காலத்திற்காக ஐக்கியப்பட்ட ஒரு அரசாங்கத்தை கட்டியெழுப்புவோம். அதற்காக உங்களது ஆதரவினை எமக்குத் தாருங்கள்.

NPP-Kilinochchi-District-Conference
NPP-Kilinochchi-District-Conference
NPP-Kilinochchi-District-Conference
NPP-Kilinochchi-District-Conference
NPP-Kilinochchi-District-Conference