Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு “ரணில் விக்கிரமசிங்கவைப்போல் அரசியலமைப்பினை மீறிய தலைவரொருவர் இலங்கை வரலாற்றில் இல்லை” -சட்டத்தரணி சுனில் வட்டகல- “மறுமலர்ச்சிக்காக முழு நாடுமே ஒன்றாக” எனும் தொனிப்பொருளில் நேற்று (21) முற்பகல் கொட்டகலை மலையகம் மக்கள் சபை நிகழ்வு இடம்பெற்றது. “உலகின் எந்தவொரு நாட்டுடனும் போட்டியிட்டு பயணிக்கக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதே திசைகாட்டியின் எதிர்பார்ப்பு” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க- ஜப்பானுக்கு அநுர
X

“பிராந்திய ஒத்துழைப்பின் வளர்ச்சிக்காக இந்தியாவுடனான புரிந்துணர்வு மிக முக்கியமானதாகும்” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்-

-Colombo, February 11, 2024-

(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு)

இந்தியாவிடமிருந்து கிடைத்த அழைப்பின்பேரில் தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் மேற்கொண்ட விஜயம்பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக இந்த ஊடக சந்திப்பு நடாத்தப்படுகின்றது. இந்திய அரசாங்கம் திடீரென இந்த அழைப்பினை விடுக்கவில்லை. கடந்த வருடத்தின் டிசம்பர் மாதத்தில் உத்தியோகபூர்வமாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டாலும் எமது அரசியல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் நேரஅட்டவணையொன்றை தயாரித்துக்கொள்ள சில காலம் கழிந்தது. இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஊடாக நாங்கள் பெப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் பயணத்திற்கு தயார் என அறிவித்தோம். பத்து நாட்களுக்கான அழைப்பே எமக்கு கிடைத்தபோதிலும் எமது பக்கத்தில் அதனை ஐந்து நாட்களுக்கு மட்டுப்படுத்தவேண்டிய நிலையேற்பட்டுள்ளதென அறிவித்தோம். அதனால் இந்த பயணம் எவ்விதத்திலும் திடீரென போடப்பட்ட ஒன்றல்ல. இந்தியா எமது பிராந்தியத்தில் எமக்கு அண்மையில் உள்ள நாடு. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பிராந்திய ஒத்துழைப்பினை கட்டியெழுப்புகையில் இந்த விஜயம் எமக்கு மிகவும் முக்கியமானதாக அமைகின்றது. இரு நாடுகளுக்கிடையில் உறவுகளை கட்டியெழுப்புவதும் எமக்கு மிக முக்கியமானதாகும்.

தேசிய மக்கள் சக்தி இந்த மக்களுடன் பாரிய அரசியல்வெற்றியைப் பெற்றுள்ள தருணத்தில் பிராந்தியத்தின் அயல்நாடான இந்திய அரசுடன் நெருங்கிய நட்புறவினைக் கட்டியெழுப்புவது நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கின்றதாக அமையும். இந்த பயணத்தின்போது சில விசேட சந்திப்புகள் இடம்பெற்றன. முதலில் எமது கட்சியின் தலைவர் தோழர் அநுர திசாநாயக்கவிற்கும் இந்திய மத்திய அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையில் ஐந்தாந் திகதி காலை சந்திப்பொன்று இடம்பெற்றது. அன்றைய தினம் மாலை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவாலுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு இரவு இந்திய வெளியுறச் செயலாளர் திரு. வினய் மோகனுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையும் சுமுகமான உரையாடலும் மேற்கொள்ளப்பட்டது. முதலாவது நாளில் வெளியுறவு அமைச்சர், வெளியுறவுச் செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை சந்தித்தோம்.

அதன்பின்னர் குஜராத் மாநில சுற்றுப்பயணத்தில் அதன் முதலமைச்சர் பூபேந்திரபாய் பட்டேல் அவர்களையும், அத்துடன் அம்மாநிலத்தின் கைத்தொழில் அமைச்சர் பல்ராஜ் சிங் ராஜ்புத் அவர்களையும் மாநில நிறைவேற்றுப் பேரவையில் சந்தித்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம். அதன் பின்னர் கேரளா மாநிலக் கைத்தொழில் அமைச்சர் திரு. ராஜீவ் அவர்களை சந்தித்தோம். இங்கு இந்திய மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தில் உள்ளது. இந்திய மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சீதாராம் யெச்சுறி அவர்களையும் சந்தித்து உரையாடினோம். இந்த அனைத்துச் சந்திப்புக்களின்போதும் இருநாடுகளுக்கும் இடையில் பரஸ்பர ஒத்துழைப்பினை எற்படுத்திக்கொள்ளல், பிராந்திய பாதுகாப்பினை உறுதிசெய்து கொள்கையில் ஒரு நாடு என்றவகையில் நாங்கள் எவ்வாறு செயலாற்றுவது? இந்தியத் தரப்பில் எவ்வாறு செயலாற்றுவது மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புடன் பொருளாதார, கலாசார உறவுகளை பலப்படுத்தி மேம்படுத்துதல் பற்றிய கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. இந்திய மாநிலங்களின் அபிவிருத்தி பற்றி அவதானிக்கையில் ஒருசில கைத்தொழில்களையும் தகவல் தொழில்நுடப் நிறுவனங்கள் சிலவற்றினதும் அவதானிப்புக்களையும் மேற்கொண்டோம். ஐ.ரீ. தொழில்நுட்பத்தில் இந்தியா பெற்றுள்ள முன்னேற்றம் பற்றி சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உத்தியோகத்தர்களுடன் கருத்துக்களை பரிமாற்றிக்கொண்டோம்.

அதேவேளையில் எமது இந்திய விஜயம் பற்றி நாட்டில் பலர் பலவிதமான கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள். அதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எவருக்கும் தாம் காண்கின்ற விதத்தில் எமது பயணம் பற்றிய கருத்துக்களை தெரிவிப்பதற்கான உரிமை இருக்கின்றது. எனினும் ஓர் அரசியல் இயக்கமென்றவகையில் நாங்கள் புவி அரசியலை விளங்கிக்கொண்ட ஓர் இயக்கமென்பதை வலியுறுத்துகிறோம். அதன்படி ஒவ்வொருவரும் கூறுகின்ற கதைகளை பொருட்படுத்தமாட்டோம். மக்களுக்கு பொறுப்புடன் ஏதேனும் சேவையை புரிகின்ற நோக்கத்துடன் மேற்படி இந்திய விஜயத்தை பயன்படுத்திக் கொண்டோம்.

சோவியத் சோஷலிஸ பாசறை எண்பதாம் தசாப்தத்தில் சிதைவடைந்த பின்னர் உலக அரசியல் நிலைமை மாற்றமடைந்தது. அதற்கு முன்னர் நிலவிய அமெரிக்காவை முதன்மையாகக்கொண்ட பாசறை மற்றும் சோவியத் தேசத்தை முதன்மையாகக்கொண்ட பாசறையின் இரட்டை அரசியல் பலம் சிதைவடைந்து சிலகாலம் ஒற்றைத்துருவநிலை காணப்பட்டது. மிகவும் குறுகிய காலத்தில் அந்த நிலைமை மாற்றமடைந்து தற்போது பல்துருவ உலக அரசியல் நிலைமை என்றவகையில் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், லத்தீன் அமெரிக்க பிராந்தியம் போன்ற பலவிதமான பல்துருவ பாசறையொன்று உருவாகி வருகின்றது. எண்பதாம் தசாப்தத்தில் இலங்கை மீது இந்தியாவின் நேரடியான தலையீடு நிலவியது. இந்திய இராணுவம்கூட இலங்கையை ஆக்கிரமிக்க வந்ததென்பது நாமறிந்த வரலாறாகும். இந்திய – இலங்கை உடன்படிக்கை மூலமாக இலங்கைக்கு மேற்கொண்ட அழுத்தங்களை நாங்கள் அறிவோம். அத்தகைய தருணத்தில் உயிரைக்கூட தியாகம்செய்து இந்த நாட்டையும் தன்னாதிக்கத்தையும் பாதுகாத்துள்ளோம். அந்த அரசியல் நிலைமை தற்போது முற்றாகவே மாற்றமடைந்துள்ளது. சீனா, அமெரிக்கா, இந்தியா உலக அரசியல் அதிகாரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு பொருளாதாரரீதியாக வங்குரோத்து நிலையுற்ற நாடு என்றவகையில் அரசியல் ரீதியாக வீழ்ச்சியுற்ற நிலைமையில் நாட்டைக் கட்டியெழுப்புகின்ற இலக்குடன் நாங்கள் செயலாற்ற வேண்டியுள்ளது.

எமது நாட்டின் தன்னாதிக்கம் பாதுகாக்கப்படுகின்ற, ஆள்புல ஒருமைப்பாட்டினை பாதுகாத்துக்கொண்டு நாங்கள் அரசியலில் ஈடுபடவேண்டும். உலக அதிகார அரசியலுக்கு இரையாகாமல் நாட்டை வெற்றியடையச் செய்விக்கின்ற எமது நிலைப்பாட்டில் முன்நோக்கி நகர்கிறோம். எந்தவொரு நாட்டுடனும் பொருளாதார அரசியல் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட நாங்கள் தயங்கமாட்டோம். அமெரிக்காவை முதன்மையாகக்கொண்ட மேற்குலக நாடுகளுடன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட பாசறையுடன், இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா, அவுஸ்திரேலியா, கனடாபோன்ற எந்தவொரு நாட்டுடனும் நாங்கள் இராஜதந்திர, அரசியல் உறவுகளைப் பேணிவருவோம். எமது ஆட்சியின்கீழ் வெளிப்படையாக உலகின் அனைத்து நாடுகளுடனும் அரச நிருவாகத்துடன் சார்புரீதியாக எமது உறவுகளைப் பேணிவருவோம். நாட்டினதும் மக்களினதும் நலனுக்காகவே நாங்கள் அவையனைத்தையும் மேற்கொள்வோம். பொருளாதார மேம்பாட்டுக்காக, ஆள்புல ஒருமைப்பாட்டினைப் பேணிவந்து அதில் எந்தவிதமான பங்கத்தையும் ஏற்படுத்துகின்ற தீர்மானத்தை நாங்கள் வரலாற்றில் எடுத்ததும் கிடையாது. இன்று எடுப்பதும் இல்லை. நாளை எடுக்கப்போவதும் இல்லை. அந்த உத்தரவாதத்தை நாங்கள் இந்நாட்டு மக்களுக்கு அளிக்கிறோம்.

எந்தவொரு தரப்பிற்கும் அடிமைப்படாத மற்றும் அணிசேரா நிலைப்பாட்டில் இருந்துகொண்டு ஒவ்வொரு நாட்டுடனும் நாங்கள் பொருளாதார, அரசியல் உறவுகளை பேணிவருவோம். இந்தியா தொடர்பிலும் நாங்கள் கடைப்பிடிக்கப்போகின்ற கொள்கைபற்றி எவருமே அச்சமடையத் தேவையில்லை: பூச்சாண்டிகளை படைக்கத் தேவையில்லை. சீனாவுடனும் குறிப்பாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் மக்கள் விடுதலை முன்னணி என்றவகையில் தெளிவான, சிக்கலற்ற உறவுகளை பேணிவருவோம். நாங்கள் ஒரு பாசறைக்கு மட்டுப்படுத்தப்பட்டு அரசியல் உறவுகளைப் பேணிவருகின்ற ஓர் அரசியல் இயக்கமல்ல. பொருளாதாரத்தினதும் தேசிய பாதுகாப்பினதும் உத்தரவாதத்தை அடிப்படையாகக்கொண்டு செயலாற்றுவோம். இன்றளவில் பெரும்பாலான அரச நிறுவனங்களை விற்றுத்தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றபோதிலும் எந்தவிதமான டெண்டர் நடைமுறையுமின்றி மேற்கொள்ளப்படுகின்ற விற்றுத் தீர்த்தலை நாங்கள் அங்கீகரிக்கப் போவதில்லை என்பதை இந்தியாவிடம் வலியுறுத்தினோம். இந்தியாவின் அமூல் கம்பெனியுடனான கலந்துரையாடலின்போது அவர்களும் எமக்குத் தெளிவுபடுத்தியது இலங்கை தொடர்பில் எந்தவிதமான டெண்டர் நடைமுறையும் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதையாகும். தெரிவுசெய்த வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு நிறுவனங்களை விற்பனைசெய்தல் சம்பந்தமாக அரசாங்கம் கடைப்பிடிக்கின்ற பெறுகை நடவடிக்கையின்றிய, டெண்டர் கோருதலின்றி தாம் விரும்பிய நிறுவனத்தை தெரிவுசெய்து அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கின்ற தவறான கொள்கையுடன் நாங்கள் இணங்கமாட்டோம் என்பதை தெளிவாகவே அவர்களிடம் எடுத்துக்கூறினோம்.

குஜராத் மாநிலம் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தில் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. குஜராத் மாநில அரசாங்கம், மத்திய அரசாங்கம் மற்றும் தனியார் பிரிவு தொடர்புபட்ட மூன்றிலொன்று வீதம் முதலீடுசெய்த டெண்டர் நடைமுறையின்கீழ் கருத்திட்டங்கள் அமுலாக்கப்படுகின்றன. காற்றுவிசையால் உற்பத்தி செய்யப்படுகின்ற ஒரு அலகு மின்சாரம் டொலர் மூன்றரை சதத்திற்கு கொள்வனவு செய்யப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். இலங்கை அரசாங்கம் இந்திய கம்பெனிகளுடன் காற்றுவிசை மின்சார அலகு ஒன்றினை ஏழரை சதம் டொலருக்கு கொள்வனவுசெய்ய உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டிருந்தது. எமது நாட்டு அமைச்சர்கள் தனிப்பட்ட டீல்களுக்காக செயலாற்றி, உயர்ந்த விலையை விதித்துள்ளார்கள். இந்த முறையிலுடன் நாங்கள் இணங்கப்போவதில்லை என்பதை தெளிவாகக் கூறினோம். டெண்டர் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகின்ற சரியான பெறுகைச் செயற்பாங்கு மூலமாக எந்தவொரு நாட்டுக்கும் திறந்த முதலீடுகளுக்காக சர்வதேச வாய்ப்புவசதிகளை வழங்குவோம் என்பதை தெளிவுபடுத்தினோம். முதலீட்டாளருக்கு நூற்றுக்கு ஐம்பது வீத இலாபமும் நாடு என்றவகையில் எமக்கு நாற்றுக்கு ஐம்பதுவீத இலாபமும் கிடைக்கத்தக்கவகையில் செயலாற்றுவோம். அவர்களின் மூலதனம், தொழில்நுட்பம் பிரயோகிக்கப்படுவதோடு எமது நிலமும் வளங்களும் பிரயோகிக்கப்படுகின்றன. அமூல் கம்பெனியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின்போது ஒருவிதமான சூடான நிலைமை உருவாகியது. அவர்கள் இலங்கை அரசாங்கத்துடனேயே கொடுக்கல் வாங்களில் ஈடுபடுவதாக கூறினார்கள். அரசாங்கம் கடைப்பிடித்த செயற்பாடுகளின் தவறுகளை அவர்களால் பொறுப்பேற்க முடியாதென அவர்கள் கூறினார்கள்.

தோழர் அநுர இற்றைக்கு பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஏற்கெனவே அமூல் கம்பெனிக்குச் சென்றார். பல்லாயிரக்கணக்கான கமக்காரர்கள் ஒன்றுசேர்ந்து கட்டியெழுப்பிக்கொண்ட கூட்டுவு முறையியலைக் கற்றாராய்வதற்காக தோழர் அநுர கலந்துகொண்டார். டாட்டா நிறுவனத்தின் நெனோ கார் உற்பத்தியையும் கற்றாராய்ந்தார். சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட ஏனைய மாநிலங்களில் விவசாயத்தின் முன்னேற்றம் பற்றியும் கற்றாராய்ந்தார். இந்தியாவின் கூட்டுறவு முறைமையின் உற்பத்திக் கைத்தொழிலில் இருந்தே இலங்கைக்கு நெனோ பசளை கொண்டுவரப்பட்டது. அமைச்சர்களும் தீத்தொழில் புரிகின்ற வியாபாரிகளும் இந்த பசளை கொண்டுவருவதில் பாரிய மோசடிகளை செய்தார்கள் என்பதை நாமனைவரும் அறிவோம். எந்தவொரு நாட்டினதும் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடினோம், தனியார் பிரிவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டோம் என்பதற்காக அவையனைத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. எந்தவொரு நாட்டிலிருந்தும் நல்லவற்றை எடுத்துக்கொண்டு தவிர்க்க வேண்டியவற்றை ஒதுக்கிவிடுவோம். அதைப்போலவே எமது நாட்டின் தேசிய பாதுகாப்பினை இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதவகையில் பேணிவருவதே எமது நிலைப்பாடாகும். அதனை மிகவும் வெளிப்படையாக பிராந்திய பாதுகாப்பு சம்பந்தமாக பிரயோகிக்கப்படுகின்ற விதத்தை தெளிவுபடுத்திக் கூறினோம்.

இவ்விதமாக நாங்கள் செயலாற்றி வருவதோடு றோஹித அபேகுணவர்தன, கஞ்சன வீரசேகர போன்ற அரசாங்க அமைச்சர்கள் பலவிதமான கதைகளைக் கூறியுள்ளார்கள். அவர்கள் வாயடைத்துப் போயிருக்கிறார்கள். அவர்கள் நிர்வாணமாக இருப்பதால் மற்றவர்கள் என்னதான் உடையை அணிந்தாலும் அது அவர்களுக்குப் பிரச்சினையாகும். அத்தகைய அமைச்சர்களுக்கு கூறவேண்டியது இவ்வளவுதான். நாட்டு மக்களின் முன்னிலையில் தமது நிர்வாணத்தை மறைத்திட ஏனையோரது உடைகளைப்பற்றிப் பேசுவதில் பலனில்லை. அவர்களின் சின்னஞ்சிறிய முட்டாள்த்தனமான கதைகளால் பாரதூரமான அரசியல் தொடர்புகளுக்கு பாதகம் ஏற்பட மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்பதையும் நாங்கள் தெளிவாக கூறவேண்டியுள்ளது. ஓர் அரசியல் இயக்கமென்றவகையில் உலகின் எந்த நாட்டுடன் உறவுகளைப் பேணிவந்தாலும் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு தொடர்பில் முதன்மைத்தானம் வழங்கி செயலாற்றுவோம் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த நாட்டு மக்களுக்கும் அந்த நம்பிக்கை இருக்கின்றது. நாங்கள் உயிர்த்தியாகத்துடன் இந்த நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்காக செயலாற்றிய ஒர் அரசியல் இயக்கமாவோம். மக்களின் அந்த நம்பிக்கையை சிதைக்கவும் இல்லை. அந்த உத்தரவாதத்தை நாங்கள் மக்களுக்கு கொடுக்கிறோம்.

அணிசேரா கொள்கையின் அடிப்படையில் நாட்டை முன்னேற்றுகின்ற வேலைத்திட்டத்திற்காகவே வெளிநாட்டு விஜயங்களை ஈடுபடுத்திக் கொள்கிறோம்.

தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிபுணத்துவ மருத்துவர் நிஹால் அபேசிங்க

(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.02.11)

அரசியல், பொருளாதார, கலாசார பல்வேறு விடயத்துறைகள் சம்பந்தமாக நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தினோம். தொழில்நுட்ப அறிவின் பரிமாற்றத்திற்காக நாங்கள் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் தொடர்டபாக எனது அடிப்படைக் கவனத்தைச் செலுத்துகிறேன். இந்திய பொருளாதார அபிவிருத்தியில் தனியார் மற்றும் அரச பிரிவுகளின் பரஸ்பர புரிந்துணர்வுடனும் ஒத்துழைப்புடனும் அத்துடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியான வர்த்தகத்தை ஊக்குவிக்கின்ற மதியுரை நிறுவனத்தின் உத்தியோகத்தர்களை சந்தித்தோம். “யுனிக் ஐடென்டிபிகேஷன் ஒஃப் இந்தியா” நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம். அரசாங்கத்திடமிருந்து கிடைக்கின்ற அனைத்துவிதமான உதவிகளும் பற்றிய ஒழுங்குறுத்துதல் மற்றும் எந்தவொரு தருணத்திலும் ஒருவர் இருதடவை குறிப்பிடப்படுமாயின் விசாரணை செய்யக்கூடியவகையில் நாட்டின் அனைத்து சனத்தொகையையும் அடையாளங் காண்பதற்கான இலக்கத்தை இந்த நிறுவனமே வழங்கியுள்ளது. புதிய தொழில்முயற்சிகளை ஆரம்பித்தல் சம்பந்தமாக செயலாற்றிவருகின்ற ஐகிரியேற் நிறுவனம் மேற்கொண்டு வருகின்ற தொழில்முயற்சியாண்மை, புத்துருவாக்கம் மற்றும் படைக்குந்திறனை தேசிய பொருளாதாரத்துடன் இணைத்துக்கொள்ளல் சம்பந்தமாக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் பற்றியும் அவதானிக்க இயலுமாயிற்று. எமது வேலைத்திட்டத்திலும் இது சம்பந்தமான செயற்பாடுகள் இருப்பதால் இந்த உரையாடல் மிகவும் முக்கியமானதாகும். குஜராத் மாநிலத்தில் அமுலாக்கப்படுகின்ற கதிர்கள் மூலமாக உணவினை நீண்டகாலம் பாதுகாத்து வைக்கின்ற தொழில்நுட்ப நிறுவனத்துடன் கலந்துரையாடினோம்.

குஜராத் இன்ரநெஷனல் டிறேட் எனப்படுகின்ற நிறுவனத்திற்கும் நாங்கள் சென்றோம். நிதிசார் சேவைகளை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குகின்ற வலயங்கள் தொடர்பாக செயலாற்றிவருகின்ற இந்த நிறுவனம் முன்னேற்றமடைந்த வழிமுறைகள் ஊடாக முதலீடுகளை மேம்படுத்துதல் பற்றி அவதானித்தோம். zவிக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர்’ எனும் விண்வெளிப் பயணம் பற்றி செயலாற்றுகின்ற நிறுவனத்தில் மேற்கொள்ளப்பபடுகின்ற நடவடிக்கைகள் பற்றியும் அவதானித்தோம். தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால வேலைத்திட்டத்தை தயாரிக்கவும் நடவடிக்கைகளை ஏற்பாடுசெய்யவும் இந்த விஜயம் பெரிதும் உறுதுணையாக அமைந்தது. இந்திய உயர்ஸ்தானிகள் அலுவலகம் மற்றும் அந்நாட்டு மத்திய அரசாங்கம் எமக்கு அளித்த இந்த வாய்ப்பு தொடர்பில் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அணிசேரா கொள்கையின் அடிப்படையில் செயலாற்றி தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ்நாட்டை முன்னேற்ற இவ்வாறான வாய்ப்புகளையும் வருங்காலத்தில் பயன்படுத்திக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கான பதிலளிக்கையில் – பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்

இந்த விஜயத்திற்காக தேசிய மக்கள் சக்தி இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்ததா?

நாங்கள் அவ்விதமாக வேண்டுகோள் விடுக்கவில்லை. இந்திய அரசாங்கம்தான் எமக்கு அழைப்பு விடுத்தது. இந்திய அரசாங்கமே அனைத்தையும் திட்டமிட்டது.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இந்திய முதலீடுகன் பற்றியும் பேசினீர்களா?

அது பற்றிக் கலந்துரையாடினோம். நான் முதலில் தெளிவுபடுத்தியவாறு அதானி கம்பெனி அல்லது ஏனைய கம்பெனிகள் சம்பந்தமாக பெறுகைச் செயற்பாங்கோ அல்லது டெண்டர் செயற்பாங்கு கடைப்பிடிக்கப்படாமல் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விதத்துடன் நாங்கள் இணங்குவதில்லை என்பதை தெளி்வாகக் குறிப்பிட்டோம். எமது ஆட்சியின்கீழ் திறந்த டெண்டர் கோரல்களின்கீழ் முதலீடுகளுக்கு வாய்ப்பளிப்போம் என்பதை நாங்கள் அறிவித்தோம். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டார்கள்.

அரசாங்கத்தின் அமைச்சர்களைவிட உங்களுடன் ஒரு காலத்தில் அரசியல் புரிந்தவர்கள் முன்வைக்கின்ற விமர்சனங்கள் அதிகமல்லவா?

அரசியல் கயமை காரணமாக முன்வைக்கின்ற விமர்சனங்களை நாங்கள் அதே நிறையில் நிராகரிக்கிறோம்: கவனஞ் செலுத்துவதும் கிடையாது. அரசியல் மயானத்திற்குள் போனவர்கள் அத்தகைய அவலக்குரல் எழுப்புகிறார்கள். வீரவங்சவும் அதைப்போல அவலக்குரல் எழுப்புவதை நான் கண்டேன். அரசியல் மயானத்திலிருந்து எழுப்புகின்ற அவலக்குரலை இந்த நாட்டின் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாங்கள் எப்படியும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாங்கள் எமது நிலைப்பாட்டில் இருந்துகொண்டு செயலாற்றுவோம். எமது நாட்டின் வலுச்சக்தி சம்பந்தமாக அரசாங்கம் தவறான முறையியல்களை கடைப்பிடிக்கையில் நாங்கள் மிகவும் தெளிவாக அதற்கு எதிராக செயற்பட்டோம். அது தொடர்பில் எமது எந்தவிதமான மாற்றுக்கருத்தும் கிடையாது. எமது தோழர் ரஞ்சன் ஜயலால் தொழிற்சங்கங்கள் ஊடாக அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அரசியல் அகதிநிலைக்கு உள்ளாகி மரணப்படுக்கையில் இருந்துகொண்டு எழுப்புகின்ற அரசியல் அவலக்குரலில் பலனில்லை.

நாட்டின் சனாதிபதிக்கோ அல்லது எதிர்க்கட்சித் தலைவருக்கோ அழைப்பு இல்லாத ஒரு காலகட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த அழைப்பு சம்பந்தமாக வாழ்த்து தெரிவி்க்கிறோம். இந்தியா எவ்வாறான நோக்கத்துடன் உங்களுக்கு இவ்வாறான அழைப்பினை விடுத்தது?

நிகழ்கால சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்கள் ஆணை கிடையாது. இந்த நாட்டு மக்களின் மனங்களில் வேரூன்றியுள்ள தலைவர் தோழர் அநுர திசாநாயக்க என்பதையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கின்ற அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தி என்பதையும் இந்தியா மாத்திரமன்றி எந்தவோர் உலக நாடும் எற்றுக்கொள்கின்றது. இலங்கைக்குள்ளே மக்களும் உலகமும் ஏற்றுக்கொள்கின்ற அரசியல் இயக்கம் திசைகாட்டியே. இதனால் விசேடமாக இந்தியா விடுத்த அழைப்பு தொடர்பில் நாங்கள் தன்னடக்கத்துடன் மகிழ்ச்சி அடைகிறோம். மக்களின் நல்லாசி கிடைக்காத தலைவர்களுக்கு அவ்வாறான அழைப்பு கிடையாது.

விஜயத்திற்கான அழைப்பு மக்கள் விடுதலை முன்னணி என்றவகையிலா கிடைத்தது? தேசிய மக்கள் சக்திக்கா?

தேசிய மக்கள் சக்திக்கே அழைப்பு கிடைத்தது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர், நிபுணத்துவ மருத்துவர் திரு. நிஹால் அபேசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர திசாநாயக்கவை உள்ளிட்ட நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர்கள்.

மக்கள் விடுதலை முன்னணி எனப்படுவதும் தேசிய மக்கள் சக்தி எனப்படுவதும் இரண்டா?

மக்கள் விடுதலை முன்னணி ஓர் அரசியல் கட்சியாகும். தேசிய மக்கள் சக்தி என்பது மக்கள் விடுதலை முன்னணியையும் உள்ளடக்கிய அரசியல் இயக்கங்கள் மற்றும் பல்வேறு சிவில் அமைப்புக்களின் சேர்க்கையால் உருவாகிய விரி்வான மக்கள் சக்தியாகும்.

மக்கள் விடுதலை முன்னணியிடம் இருப்பது சோஷலிஸ வேலைத்திட்டமாகும். தேசிய மக்கள் சக்தியிடம் இருப்பது லிபரல்வாத வேலைத்திட்டமாகும். இவையிரண்டுமே ஒன்றாகவா பயணிக்கின்றது?

லிபரல்வாத, சோஷலிஸ என நீங்கள் கருதியது என்ன? பதற்றப்படத் தேவையில்லை. மிகவும் தெளிவாகின்றது. உலக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு அமைவாக இலங்கையின் ஓர் அரசியல் இயக்கமென்றவகையில் நாங்களும் மாற்றமடைந்துள்ளோம். எமது கொள்கைகள் மிகவும் தெளிவாக சோஷலிஸ கோட்பாடுகளை அடிப்படையாகக்கொண்ட புதிய உலக நிலைமைக்கு ஒத்துவரத்தக்க பொருளாதார, அரசியல் கொள்கையாகும். தேசிய மக்கள் சக்தியின் இந்த கொள்கை நாட்டுமக்கள் ஏற்றுக்கொள்கின்ற கொள்கையாக மாறியுள்ளது.

நீங்கள் அமூல் கம்பெனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவேளையில் உங்களின் பிரதிநிதிகள் இந்நாட்டில் அமூல் கம்பெனிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். ஒன்றுக்கொன்று முரணான இந்த செயற்பாடு என்ன?

எனது தெளிவுபடுத்தலில் தெளிவாகவே பதில் இருந்தது. மீண்டும் தெளிவுபடுத்துவதாயின் பெறுகைச் செயற்பாங்கு மற்றும் டெண்டர் கோராமல் அரசாங்கம் முன்னெடுத்துவருகின்ற செயற்பாடுகளை எதிர்ப்பது எந்தவொரு நிறுவனம் சம்பந்தமாகவும் எமது பொதுவான நிலைப்பாடாகும்.

மிகஅதிகமாக கலந்துரையாடலுக்கு இலக்காகிய விடயங்கள் என்ன?

பிராந்தியத்தின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினை மீதே அதிகமாக கவனம் செலுத்தப்பட்டது. தெற்காசியாவின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையே அவர்களின் முதன்மைத் தலைப்பாக அமைந்தது. உலக புவி அரசியல் போட்டியில் பிராந்தியத்திற்கு ஒருசில அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன. அது சம்பந்தமாக நாங்கள் ஒரு நாடு என்றவகையில் எமது நாட்டின் தன்னாதிக்கத்தை பாதுகாத்துக் கொள்வதைப்போலவே பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இடம்பெறக்கூடியவகையிலான எந்தவொரு வழிமுறையையும் பின்பற்றுவதில்லையென்பதை தெளிவுபடுத்திக் கூறினோம். எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக செயலாற்றுகையில் கட்டாயமாக பிராந்தியத்தின் பாதுகாப்பு சம்பந்தமாக கவனஞ் செலுத்துவோம். இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சீனாவுடன் கொடுக்கல்வாங்கலில் ஈடுபடவேண்டாமெனக் கூறவும் இல்லை. எமக்கு அது ஏற்புடையதும் அல்ல. பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லை என்பதைதெளிவாகக் கூறினோம்.

இந்த வருடத்தில் சனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் நடாத்துவதாக சனாதிபதி கூறியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை அமைக்க இந்தியாவின் ஒத்துழைப்பு கிடைப்பதாக கூறப்பட்டதா?

அத்தகைய உரையாடல் இடம்பெறவில்லை. இலங்கை மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்படுகின்ற அரசாங்கத்துடன் அவர்கள் கொடுக்கல்வாங்கலில் ஈடுபடுவார்களேயொழிய அரசியல் கட்சியென்றவகையில் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள அவர்களின் ஒத்துழைப்பு எமக்குத் தேவையில்லை. அத்தகைய ஒன்றை அவர்கள் கூறவும் இல்லை. எனினும் தேர்தல்களை நடத்தாமை பற்றிப் பேசினார்கள். உள்ளுரதிகாரசபை தேர்தலை நடாத்தாமை, மாகாணசபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமை தவறானதென நாங்கள் மிகவும் தெளிவாகக் கூறினோம். அது மாத்திரமல்ல, இந்நாட்களில் கூட்டுறவுச்சங்க தேர்தல்களும் பிற்போடப்பட்டுள்ளன. அது தொடர்பில் நாங்கள் இணங்குவதில்லை என தெளிவுபடுத்திக் கூறினோம். சனாதிபதி தேர்தல் கட்டாயமாக நடாத்தப்படல் வேண்டுமென நாங்கள் சுட்டிக்காட்டினோம். ஒரு கட்சி என்றவகையில் நாங்கள் தயார் எனவும் கட்டாயமாக அதில் வெற்றிபெறுவோம் என்பதையும் அவர்களுக்கு எடுத்தியம்பினோம்.

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டால் சீனா எத்தகைய நிலைப்பாட்டினை எடுக்கும்?

இந்தியாவுடன் பேச்சுவாரத்தைகளை மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவல்ல. அத்துடன் சீனாவுடன் குறிப்பாக கமியுனிஸ்ட் கட்சியுடன் நாங்கள் நீண்டகாலமாக தொடர்புகளை பேணிவந்துள்ளோம். எனினும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்பனை செய்வதற்கு எதிராக நாங்கள் செயலாற்றினோம். ஒவ்வொரு நாடும் தொடர்பிலான எமது நிலைப்பாடு அதுவாகும். சீனா அல்லது இந்தியாவுடன் உறவுகளைப் பேணிவந்தோம் என்பதற்காக நாங்கள் எமது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றியமைக்கின்ற கட்சியல்ல.