Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“வாலிபத்திற்கு அவசியமான புதிய சமூகத்தைக் கொண்டுவருவதே தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பாகும்.” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட இளைஞர் கூட்டம் – 2024.03.17)

NPP-Youth-Conference

தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் இயக்கம் இந்த நாட்டின் பலம்பொருந்திய இயக்கம் மாத்திரமன்றி இந்த நாட்டை மாற்றியமைக்கத் தயாராகி வருகின்ற இளைஞர் இயக்கமுமாகும். வரப்போகின்ற புதிய அரசியல் மாற்றத்திற்காக இளைஞர் தலைமுறையினரை ஒன்றுசேர்ப்பதற்காக மாத்தறையில் இருந்து ஆரம்பித்த பணி இலங்கையின் பிரமாண்டமான இளைஞர் மலர்ச்சியாக மாறுவதில் ஐயமில்லை. அரசியல் எமது வேலையல்ல: அது தாய்தந்தையருக்கு ஒருசில குடும்பங்களுக்கு சொந்தமான வேலையென்றே நினைத்தார்கள். இளைஞர் தலைமுறையினர் தமது வாழ்க்கையை வெற்றிப் பாதையில் இட்டுச்செல்வது எவ்வாறு என கனவு கண்டுகொண்டு திட்டங்களை ஆக்கிக்கொண்டிருந்தார்கள். தற்போது அவர்களின் கனவுகள் அவர்களின் கண்ணெதிரிலேயே நாசமடைந்துள்ளன. எமது சமூகத்தில் பல இளைஞர் குழுக்கள் இருக்கின்றன. உயர் கல்வி பயின்ற, ஓரளவு சொத்துக்கள் இருக்கின்ற, மொழிகள் பற்றிய திறன்கள் படைத்த, சர்வதேசத்துடன் தாக்குப்பிடிக்கவல்ல அறிவுபடைத்த குழுவினர் இருக்கிறார்கள். அவர்கள் தமது வாழ்க்கையைப் பாதுகாப்பானதாக வைத்துக்கொள்வதற்காக உலகில் முன்னேற்றமடைந்தவையென கருதப்படுகின்ற அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, நியுசிலாந்து முதலியவற்றைத் தமது பயணத்தின் இலக்காக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். மற்றுமொரு குழுவினர் பெற்றோர்களின் சுமை தமது தோள்மீது சுமத்தப்பட்ட, தமது எதிர்காலக் கனவுகள், எதிர்பார்ப்புகள் சிதைந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தமது எதிர்பார்ப்புகளை ஈடேற்றிக்கொள்வதற்காக இஸ்ரேயல், கொரியா, மத்தியகிழக்கிற்கு பாய்ந்துசெல்ல முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். மற்றுமொரு குழுவினர் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிடவேண்டிய நிலையேற்பட்ட. பாடசாலைப் பருவத்திலேயே வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக ஏதெனுமொரு பணியில் ஈடுபட நேரிட்ட குழுவினராவர். அவர்களுக்கு வாழ்க்கை, நோக்கம், இலக்கு கிடையாது. அந்த குழுவில் தற்போது பெருந்தொகையானோர் சேர்ந்து வருகிறார்கள். அந்த குழுவினர் தேசபந்துவின் இலக்காக மாறியுள்ளார்கள். அவர்கள் பாதுகாப்பற்ற, வாழ்க்கை தொடர்பிலான பெறுமதியற்ற அலைந்துதிரிகின்ற இளைஞர் தலைமுறையினராவர். ஜகத் மனுவர்ண “கொடிகஹ யட்ட” திரைப்படத்தில் அந்த இளைஞர் தலைமுறையினரின் வாழ்க்கையையே காட்டினார்.

இந்த நாட்டை மிகவும் பாதுகாப்பான ஒரு நாடாக மாற்றவேண்டும். இந்நாட்டின் இளைஞர் தலைமுறையினரை தமது எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புகள் நிறைந்த இளைஞர் தலைமுறையினராக மாற்றவேண்டும். எமது கண்ணெதிரில் அமுலாகிவருகின்ற கவலைக்கிடமானநிலை இந்த நிலைமையை மாற்றியமைக்க முன்னணிக்கு வருமாறு எம்மை நிர்ப்பந்தித்துள்ளது. இதனை நாங்கள் எங்கிருந்து மாற்றியமைப்பது? பயணித்துக் கொண்டிருக்கின்ற அரசியல் பாதையை புதிய திசையை நோக்கி மாற்றியமைப்பதன் மூலமாக மாத்திரமே இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அம்மா அப்பாவின் அரசியலை நாட்டுக்கும் மக்களுக்கும் உங்களுக்கும் மரபுரிமையாக்கிக் கொடுத்துள்ள இந்த கவலைக்கிடமான நிலைமையில் இருந்து விடுவித்துக் கொள்வதுதான் புரிய வேண்டிய முதலாவது போராட்டம். அத்தகைய அரசியல் மாற்றமொன்று எமது நாட்டுக்கு அவசியமாகும். எமது நாட்டின் அரசியல் எவருடைய பெயருக்கு எழுதப்பட்டுள்ளது? மாத்தறை விஜேசேகரவெனில் அவருடைய மகனுக்கு. சிறிசேனவெனில் அவருடைய மகன் மனோஜ் சிறிசேனவிற்கு. மகிந்த ராஜபக்ஷவின் உறவுக்கார மகன்மார்களுக்கு. சில குடும்பங்களின் கைகளில் இந்த அரசியல் சுழன்றுகொண்டிருக்கின்றது. அந்த சிறிய கும்பல் கீழுள்ள வர்க்கத்தின் மிதிக்கப்படுகின்ற இளைஞர்களின் மீட்பளிப்பவர்களாக பெயர்சூட்டிக்கொண்டு இருக்கிறார்கள். சனாதிபதிக்கு ஒரு மகன் பிறந்தால் அந்த மகனின் நெற்றியில் சனாதிபதிநிலை பொறிக்கப்பட்டுள்ளதென அவர்கள் நினைக்கிறார்கள். பிரேமதாசவின் மகன், மகிந்த ராஜபக்ஷவின் மகன், விஜேசேகரவின் மகன் அவர்கள் பிறக்கின்றபோதே சனாதிபதி பதவி, அமைச்சர் பதவி பிரம்மாவால் பொறிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். எமது நாட்டு அரசியல் சில குடும்பங்களின் கைகளில் தேசியரீதியாகவும் பிரதேசரீதியாகவும் பிரிந்து சென்றுள்ளது. எமது ஆற்றல்கள் நிறைந்த அவசியப்பாடு நிலவுகின்ற இளைஞர் தலைமுறையினருக்கு அரசியலின் கதவுகள் மூடிவிடப்பட்டுள்ளன.

இங்கே இருக்கின்ற எவருமே அரசியலை நெற்றியில் பொறித்துக்கொண்டு வந்தவர்கள் அல்ல. பிரம்மா நெற்றியில் பொறித்ததால் அரசியல் பொறுப்பினை ஏற்றுக்கொண்டவர்களுமல்ல. நாங்கள் ஏன் இந்த அரசியலில் பிரவேசிக்கிறோம்? எமது கண்ணெதிரில் நீதியற்ற நியாயமற்ற சமூகமொன்று இருக்கிறது. எமது இளைஞர் தலைமுறையின் வாழ்க்கை அழிந்து வருகின்றது. இந்த சமூக மாற்றத்திற்காக இடையீடுசெய்வதற்காக, தலைமைத்துவம் வழங்குவதற்காக, ஒன்றுசேர்ப்பதற்காகவே நாங்கள் அனைவரும் இந்த அரசியலை தெரிவுசெய்திருக்கிறோம். இதனை மாற்றியமைப்பதற்கான நோக்கமொன்று இருக்கின்றது. அதற்கான தெம்புநிறைந்த அவசியப்பாடு நிலவுகின்றது. எத்தகைய அரசியல் இந்த நாட்டுக்குத் தேவை? இளைஞர்களை வரிசையாக நிறுத்திவைத்து உயரமானவரா, குள்ளமானவரா என பார்த்து “உயரமானவரெனில் சிக்கியூரிட்டி. குள்ளமானவரெனில் தொழிலாளர்” என தொழில்களை பிரித்துக்கொடுக்கின்ற அரசியலா நாட்டுக்குத் தேவை! இதுவா இளைஞர் தலைமுறையினருக்கு உரித்தாக்கிக் கொடுத்துள்ள அரசியல். தேர்தல் காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தொழில் தருவதாகக்கூறி எவ்வளவுதான் போஃம் கடதாசி நிரப்பினார்கள்? நிபுண ரணவக்க எவ்வளவு அப்ளிகெஷன் நிரப்பினார்கள்? அவர்கள் மேலே இருந்துகொண்டு எமக்கு தொழிலாளர் பதவிகளைத் தருகிறார்கள். அவர்களுக்கு மூளை இருந்தாலும் இல்லாவிட்டாலும் சனாதிபதிநிலை, அமைச்சர்பதவி நெற்றியில் பொறிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றியமைத்திட வேண்டுமாயின் புதிய அரசியல் மாற்றத்தை கைப்பற்றியே ஆகவேண்டும்.

NPP-Youth-Conference

நான் பள்ளிப் பருவத்திலேயே அரசியலில் பிரவேசித்தேன். என்னை உள்ளிட்ட பெரும்பாலானவர்களின் ஒட்டுமொத்த இளமைப் பருவமுமே இந்த புதிய மாற்றத்திற்காக அயராது உழைத்தது: மல்லுக்கட்டியது. பல்வேறு தோல்விகளின் மத்தியில் கண்ணெதிரில் மரணங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கையில் கைவிட்டுவிடாமல் அரசியல் மாற்றமொன்றுக்காக இந்த அரசியலைத் தெரிவுசெய்து இந்த பயணப்பாதையில் வந்தோம். பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு, இகழ்ச்சிகளை தாங்கிக்கொண்டு வந்த எங்களுக்கு தற்போது கண்ணுக்கெட்டிய தூரத்திற்கு வெற்றி வந்துள்ளது. எங்களால் இந்த வெற்றியை அடையமுடியும். இந்த வருடத்தின் ஒற்றோபர் இறுதியளவில் புதிய அரசாங்கமொன்று: புதிய ஆட்சியொன்று. இந்த அரசாங்கத்திற்கு பிரதான பணியொன்று கையளிக்கப்படுகின்றது. இந்த சமூகத்தை முழுமையான மாற்றத்திற்கு இலக்காக்கிட வேண்டும். மக்களின் முனைப்பான இடையீடு மூலமாக மாத்திரமே அதனை சாதிக்கலாம். அரசாங்கமொன்றை அமைத்து எதிர்பார்ப்புகளை அடைவதற்கு அவசியமான வேலைகளைச்செய்ய வேண்டும். “எக்ஸ்” பரம்பரையைச் சேர்ந்த நாங்கள் பாதுகாப்பான தொழில், சேமிப்புடனான வங்கிக் கணக்கொன்று, ஒழுங்கமைந்த சமூகக் கட்டமைப்பு நிலவுகின்ற சமூகத்தில் எதையாவது பெற்றுக்கொண்டு வசிக்கின்ற ஒருவராக மாறுவார்கள். “இசெட்” பரம்பரையைச் சேர்ந்த நீங்கள் வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் அரசாங்கத் தொழிலொன்றுக்காக நேர்முகப்பரீட்சைக்கு போகிறீர்கள். நீங்கள் உதிர்கிறீர்கள், வேறொருவர் தெரிவுசெய்யப்படுகிறார். எங்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அது அப்படித்தான் என பொறுத்துக் கொள்வார்கள். “இசெட்” பரம்பரையைச் சேரந்தவர்கள் அது எவ்வாறு இடம்பெற்றது என வினவுவார்கள். போராட்டத்திற்குச் சென்று “வைத்தியசாலைக்கு எவ்வாறு மருந்து வாங்கினீர்கள்” எனக் கேட்டார்கள். அந்த வெளிப்படைத்தன்மை அவசியமாகும். இந்த தொழிலுக்காக இவர்கள் எவ்வாறு தெரிவுசெய்யப்பட்டார்கள்? ஒப்பந்தக்காரரை எவ்வாறு தெரிவுசெய்தீர்கள்? நீங்கள் எழுதிய பேப்பருக்கு கிடைத்த புள்ளிகளின் எண்ணிக்கை யாது? இன்று கேள்வி கேட்கிறார்கள். “இசெட்” பரம்பரை வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்கிறது. அது உங்கள் பரம்பரையின் பண்பு. நாங்கள் உருவாக்குவது நிகழ்கால வாலிபம் எதிர்பார்க்கின்ற வெளிப்படைத்தன்மையைப் பாதுகாக்கின்ற தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தையாகும்.

இந்த “இசெட்” பரம்பரை படைக்குந்திறனை எதிர்பார்க்கின்றது. ஒரே இடத்தில் சிறைப்பட்ட, ஒரே இடத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட பரம்பரையல்ல. உங்களுக்குள் கட்டியெழுப்பப்படுகின்ற படைக்குந்திறனை வேகமாக வெளிப்படுத்தவேண்டிய தேவை உங்களுக்கு உண்டு. எங்கள் பரம்பரையினர் எமக்கு அமைத்துக்கொடுத்த பாதையில் பயணிக்கிறார்கள். இந்த பரம்பரையினர் பல துணைப் பாதைகளில் பயணிக்கிறார்கள். பொருளாதாரரீதியாக சமூகரீதியாக மேல்மட்டத்திற்கு வந்த பலர் இருக்கிறார்கள். அது வேறு விசாலமான பாதைககள் மூலமாகவே. எனினும் எங்கள் சமூகம் உங்கள் படைக்குந்திறனை உறிஞ்சிக்கொள்ளக்கூடிய சமூகமா? எமது தலைவர்கள் கிறிஸ்துவிற்கு முற்பட்டகால மனோபாவத்துடன் பழைய சமூக எண்ணக்கருக்களுடன் செயலாற்றுகின்றவர்கள். அவர்கள் மேடைகளில் ஏறும்போது ஐந்து விரல்களிலும் நவரத்தினங்கள் பதித்த ஐந்து மோதிரங்கள். ஒவ்வோர் ஆலயத்திலிருந்தும் கொடுத்த கயிறுகளை முடிச்சுப்போட்ட கைகள். பசில் ராஜபக்ஷ வழக்குகளிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆலயங்களுக்குச் செல்கிறார். ஒரு வழக்கிற்கு ஒன்றுவீதம் தாயத்துகளை முடிச்சிப்போட்டுக் கொள்கிறார். இந்த தோல்விகண்ட பழங்குடித்தலைவர்கள் உங்களின் படைக்குந்திறனை அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்த பிள்ளைகளின் படைக்குந்திறனை விருத்திசெய்வதற்கு அவசியமான சமூக பொருளாதார வடிவங்களை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் கட்டியெழுப்பும்.

NPP-Youth-Conference

சுயாதீனத்தன்மை “இசெட்” பரம்பரையின் பண்பாகும். எமது இளமைப் பருவத்தில் ஆசிரியர்கள் பெற்றோர்களால் அமைக்கப்பட்ட சட்டகத்திற்குள்ளே அவர்களால் உருவாக்கப்பட்ட பாதையில் பயணிக்கவேண்டி இருந்தது. கடப்பாடுகளைக்கொண்ட பிரஜைகளாக வாழவேண்டி இருந்தது. புதிய தலைமுறையினர் மரபுரீதியான தொழில்களை விரும்புவதில்லை. இனிமேலும் எசமானுக்கு கட்டுப்பட்டு ஒரே மாதிரியான தொழிலைப்புரிய விரும்புவதில்லை. நீங்கள் சுயாதீனத்தன்மையை வேண்டிநிற்கிறீரகள். எமது பொருளாதார மாதிரி சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரை இலக்காகக்கொண்டே வகுக்கப்பட்டுள்ளது. அவர்களே எமது பொருளாதாரத்தின் எஞ்சினாக அமைந்துள்ளார்கள். ஐ.ரீ. இல் உலகச் சந்தையில் ஒரு பங்கினைக் கைப்பற்றிக்கொள்வது எமது பொருளாதார நோக்காக மாறியுள்ளது. சுற்றுலாக் கைத்தொழிலை ஹோட்டல் தொழிற்றுறையில் இருந்து சுற்றுலாத்துறை தொழில்முயற்சியாக மாற்ற அவசியமான நோக்கினை நாங்கள் வகுத்திருக்கிறோம். சுயாதிபத்தியம்கொண்ட சுயாதீனமான தொழிலில் ஈடுபடுவதற்கான உரிமையை உறுதிசெய்திருக்கிறோம். நீங்கள் வேகமாக வளர்கின்ற ஒரு பரம்பரையாகும். நீங்கள் வேகமாக வளர்ச்சியடைந்தாலும் நாட்டின் பொருளாதாரம் ஆமைவேகத்தில் உங்களுக்குப் பின்னால் வருகின்றது. அவர்கள் என்ன கூறுகிறார்கள்? உங்களுக்கு கொடுக்க பொருத்தமான தொழில்கள் கிடையாது என்கிறார்கள். உங்களின் அறிவுக்கு ஏற்றவகையிலான பொருளாதாரமொன்றை கட்டியெழுப்ப அவர்கள் தவறியுள்ளமையே இங்குள்ள பிரச்சினையாகும். பொருளாதாரம் ஒரே இடத்தில் உக்கிப் போகின்றது. நீங்கள் உங்களுக்கும் நாட்டுக்கும் பயனற்ற ஒருவராக மாறுவீர்கள். நீங்கள் வேகமாக வளர்ச்சியடைவதற்கு இணையான வேகத்தில் சமூக பொருளாதார மாற்றத்தை அடையாவிட்டால் உங்களுக்கு இந்த சமூகம் பொருத்தமற்ற சமூகமாக மாறிவிடும். உங்கள் வளர்ச்சிக்கு இணையான வேகமான பொருளாதாரமென்றை நாங்கள் உருவாக்குவோம்.

இந்த சமூகத்தில் நிலவுகின்ற மற்றுமொரு விசேட பண்பு மிகவும் விரைவாக மாற்றியமைத்துக் கொள்கின்ற தன்மையாகும். வேகமாக மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய சமூகமொன்றுக்கு வேகமாக மாறக்கூடிய சமூகமொன்று அவசியமாகும். சமூகமொன்று வேகமாக மாற்றமடையாவிட்டால் உங்களின் சாத்தியவளங்கள், உங்களின் உண்மைநிலை, உங்களின் உள்ளார்ந்த திறனுக்கேற்ப சமூகம் அவசியமான மாற்றத்தைக் கொண்டுவந்து கொடுக்காவிட்டால் நீங்கள் “எக்ஸ்” பரம்பரையாக மாறிவிடுவீர்கள். உங்கள் பரம்பரையிடம் விட்டுக்கொடுப்பு இருக்கின்றது. எனினும் பொருளாதரமும் தலைவரும் கல்லை விழுங்கியவர்கள் போல் இருந்தால் அரசாங்கங்களால் பலனில்லை. அதைப்போலவே நீங்கள் ஏனைய பரம்பரைகளைவிட உளச் சுகாதாரம் பற்றி சிந்திக்கின்றவர்கள். உங்களுக்கு இரசனை, மகிழ்ச்சி, அன்பு, உளத் திருப்தி அவசியமாகின்றது. 2010 – 2024 காலத்தில் பிறந்த “அல்பா” பரம்பரையினர் அதைவிட வித்தியாசமானவர்கள். 2024 தொடக்கம் 2039 வரை பிறக்கின்ற “பீட்டா” பரம்பரையினர் அதைவிட வித்தியாசமானவர்கள். நாங்கள் தற்போது அரசியல் புரிவது “இசெட்” பரம்பரையைச் சேர்ந்த பிள்ளைகளுடனாகும். எதிர்காலம் “அல்பா” பரம்பரைக்குச் சொந்தமானதாகும். எனினும் தலைவர்கள் பழங்குடிமரபினரான தலைவர்களாகி நவீனத்துவத்தைக் காண்பதில் தோல்விகண்ட தலைவர்களெனில் நவீன பரம்பரையின் பிள்ளைகளுக்கு எதிர்காலம் பற்றிச் சிந்திக்க முடியாது.

புதிய வாலிபம் வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்கின்றது. விட்டுக்கொடுப்பு அவசியமாகும், உங்களின் வேகமான வளர்ச்சிக்கு ஒத்துவரக்கூடிய வேகமான சமூக மாற்றமொன்று அவசியமாகும். உங்களின் படைக்குந்திறனை விடுவிப்பதற்கான சமூகமொன்று அவசியமாகும். அதோ அந்த புதிய சமூகத்தை எடுத்துவருவதுதான் தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பாகும். “எக்ஸ்” பரம்பரையைச்சேர்ந்த நாங்கள் ‘இசெட்” பரம்பரையைச் சேர்ந்த உங்களிடம் இந்த சுக்கானை ஒப்படைத்துவிட்டு வீட்டில், கதிரையில் அமர்ந்து “இசெட்” பரம்பரையைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டை எவ்வாறு ஆளப்போகிறார்கள் என்பதை பார்க்க ஆசைப்படுகிறோம். “இசெட்” பரம்பரையின் கைக்கு இந்த பெட்டனை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது, அவர்கள் வெறுமனே பெட்டனைக் கைவிட மாட்டார்கள். அதனால் புராதன பழங்குடி பரம்பரையிடமிருந்து இந்த பெட்டனை எங்கள் கைக்கு எடுத்து “இசெட்” பரம்பரையின் கையில் இந்த பெட்டனை மாற்றி இந்த நாட்டை வேகமாக எவ்வாறு முன்நோக்கி கொண்டுபோகப் போகிறார்கள் என்பது நாங்கள் பார்க்க ஆசைப்படுகின்ற அழகான காட்சியாகும். அந்த யுகத்திற்கு ஒத்துவராத, அந்த யுகத்தடன் பொருந்தாத, அந்த யுகத்துடன் முட்டிமோத முடியாத அரசியலாக மாறுவதில் பலன் உண்டா? “எக்ஸ்” பரம்பரையைச் சேரந்த எங்களின் பொறுப்பு “இசெட்” பரம்பரையின் கைக்கு இந்த சுக்கானை ஒப்படைப்பதாகும். முதலில் பழங்குடிப் பரம்பரையிடமிருந்து “எக்ஸ்” பரம்பரையைச்சேர்ந்த எமது கைகளுக்கு அதிகாரத்தை எடுப்போம். மிகவும் குறுகிய காலப்பகுதிக்குள் இந்த நாட்டு ஆட்சி ஆதிகாரத்தின் சுக்கானை “இசெட்” பரம்பரையின் கைக்கு கொடுப்போம். அதற்காக நாமனைவரும் ஒன்றுசேர்வோமாக.

NPP-Youth-Conference
NPP-Youth-Conference
NPP-Youth-Conference
NPP-Youth-Conference
NPP-Youth-Conference
NPP-Youth-Conference
NPP-Youth-Conference
NPP-Youth-Conference