(-பொலொன்னருவா – 2025.04.20-)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் அனைத்து ஆவணங்களையும் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும், இந்தக் மிலேச்சத் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
2019 ஏப்ரல் முதல் 2024 செப்டம்பர் வரையிலான கடந்த ஐந்தரை ஆண்டுகளில் நடத்தப்பட்ட விசாரணைகள் உண்மையான சூத்திரதாரிகளை மறைப்பதற்காகவே நடத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த ஆறு மாதங்களில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு மிகத் தெளிவான, படிப்படியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் அனைத்து பாகங்களும் பொதுமக்களுக்கோ அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கோ வழங்கப்படவில்லை என்றும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருக்காவிட்டால் அந்த ஆவணங்கள் தொடர்ந்தும் மறைக்கப்பட்டிருக்கும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
பொலன்னறுவையில் இன்று (20) இடம்பெற்ற “ வெற்றி நமதே. கிராமம் எமதே” பேரணித் தொடரின் மற்றுமொரு பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:
பாராளுமன்றத்தை சுத்தப்படுத்தித் தருமாறு மக்கள் கோரினார்கள். முழுமையாக சுத்தப்படுத்தினோம்.உள்ளுராட்சி சபைகளின் அதிகாரம் எமக்கு அவசியம். தேசிய மக்கள் சக்தி தவிர தெரிவு செய்வதற்கு வேறு தலைமையோ கட்சியோ உள்ளதா? மக்கள் பல்வேறு கட்சிகளுடன் பிணைப்பை வைத்திருந்தனர். அவற்றில் இருந்து ஒதுங்கி மக்கள் எமக்கு ஆணையை வழங்கினார்கள். அந்த மக்கள் ஆணையை சிறிதேனும் மக்களுக்கு எதிராக பயன்படுத்த மாட்டோம்.
2022-23 காலப்பகுதியில் நாடு நெருக்கடி நிலையை எதிர்கொண்டது. 77 வருடங்கள் ஆட்சியாளர்களால் நாசமாக்கப்பட்ட நாட்டை தேசிய மக்கள் சக்தி மீளமைக்கும். 30 வருட யுத்தம்,இனவாதத்தினால் மக்களிடையே சந்தேகம் ஏற்பட்டது. தேர்தல்களில் மக்களை பிரித்தாளும் நிலை காணப்பட்டது.வாக்குகளுக்காக இனவாதத்தை பிரயோகித்தனர். ஆனால் சகல பிரதேச மக்களும் இணைந்து தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்தனர். மக்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்தனர். இது இலங்கை அரசியல் வரலாற்றில் விசேடமான நிலை அல்லவா.
இருக்கும் சட்டங்கள் போதாவிட்டால் புதிய சட்டங்களை உருவாக்கியாவது இனவாதத்தை ஒழிப்போம்.தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவோம். 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தில் அதிகாரத்திற்காக பாரிய அனர்த்தம் இடம்பெற்றது.2019 ஏப்ரல் முதல் 2024 செப்படம்பர் வரை சுமார் ஒன்றரை வருடங்கள் உண்மையான சூத்திரதாரிகளை மறைக்கவே விசாரணைகளை நடத்தினர். 2019 வரை இருந்த அரசாங்கங்களோ அதன் பின்னர் அரசாங்கங்களோ எவ்வகையிலும் உண்மையான சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. எவருக்கும் சந்தேக நபர்களை வெளிப்படுத்தும் நோக்கமிருக்கவில்லை.6 வருடங்கள் கடந்து விட்டன. நாம் கட்டம் கட்டமாக சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தத் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.உயிர்த்த ஞாயிறு தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் சில பகுதிகள் மறைக்கப்பட்டன. நாட்டிற்கோ சி.ஐ.டிக்கோ முழுமையான அறிக்கை முன்வைக்கப்படவில்லை.சில பகுதிகள் மறைக்கப்பட்டே அறிக்கை வெளியிடப்பட்டது. உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் சகல ஆவணங்களையும் இன்று சி.ஜ.டிக்கு அனுப்பினேன். முழுமையாக ஆராய்ந்து விசாரணை நடத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளேன். அதில் பல பரிந்துரைகள் உள்ளன .அவற்றை செயற்படுத்துமாறும் கேட்டுள்ளேன்.இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகங்கள் உள்ளன.வவுனதீவு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கொல்லப்பட்ட இடத்தில் ஜெக்கட் ஒன்றை இட்டது யார். அது தொடர்பில் சந்தேகம் உள்ளது. அதனை ஆராய வேண்டும். சில தொலைபேசிகளின் இமி இலங்கங்களை பயன்படுத்தினார்கள் என்பதில் சந்தேகம் உள்ளது. அனைத்து சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் விசாரணைகளை முன்னேடுப்போம். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதை வெளிப்படுத்தும் பொறுப்பை ஏற்று செயற்பட்டு வருகிறோம்.
கடந்த 6 மாத காலத்தில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் சவாலை எதிர்கொண்டோம்.பொருளாதாரத்தை ஒரளவு ஸ்தீரப்படுத்தியுள்ளோம்.300 ரூபாவாக டொலரின் பெறுமதி பேணப்படுகிறது. பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி வருகிறோம். எரிபொருள் மற்றும் மின்சார விலைகளை குறைத்துள்ளோம். அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்து வருகிறோம். கட்டுநாயக்க விமான நிலையத் திட்டம் உட்பட 11 திட்டங்களை மீள ஆரம்பிக்க ஜப்பான் முன்வந்துள்ளது.76 புதிய மற்றும் பழைய திட்டங்களை மீள ஆரம்பிக்க சீனா உடன்பாடு கண்டுள்ளது.
காற்றாலை மற்றும் சூரிய சக்தி திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சம்பூரில் 120 மெகா வோர்ட் சூரிய சக்தி திட்டம் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சியம்பலாண்டுவில் 100 மெகா வோர்ட் மின்திட்டம் மற்றும் மன்னாரில் 50 மெகாவோர்ட் புதிய மின் திட்டம் ஆரம்பிக்கப்படும்.
நீர்ப்பாசன துறைக்கு மாத்திரம் 78 ஆயிரம் மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மூலதனச் செலவுகளுக்கு பாரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டை கட்டியெழுப்ப நிதி ஒதுக்கப்படுகிறது. டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டும்.கோரும் அனைத்து நிதியையும் வழங்க முடியும். ஆனால் அரச இயந்திரம் வீழ்ச்சியடைந்துள்ளது. பலமான அரச சேவை உருவாக்கப்பட வேண்டும்.அரச துறைக்கு ஒன்றரை வருடத்தில் 30 ஆயிரம் பேரை இணைக்க இருக்கிறோம்.
அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.ஓய்வூதியம் பெறுவோரின் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. வறுமைய ஒழிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மாணவர்களுக்கு சுமையாக உள்ள கல்வி முறையை மாற்ற இருக்கிறோம்.2026 முதல் புதிய பாடவிதாணம் அறிமுகம் செய்யப்படும்.மாணவர்கள் செல்ல வேண்டிய பாதை 10 ஆம் வகுப்பில் தீர்மானிக்கப்படும். 13 வருட பாடசாலை கல்வி கட்டாயமானது. எந்த மாணவரும் வெறும் கையுடன் வெளியேற மாட்டார்கள்.
பசளை மானியத்தை அதிகரித்துள்ளோம். உப பயிற்செய்கைக்காகவும் 15 ஆயிரம் ரூபா பசளை மானியம் வழங்க முடிவு செய்துள்ளோம். வழங்கப்படும் பசளை மானியத்தினால் பசளை மாத்திரமே கொள்வனவு செய்ய வேண்டும். பசளைபெற வவுச்சர் வழங்கப்படும். அறுவடையை நியாயமான விலைக்கு வாங்குவோம். இம்முறை எவருக்கும் நெல்விலை தொடர்பான பிரச்சினை எழுந்திருக்காது.இனி ஒருபோதும் அவ்வாறான பிரச்சினை எழாது. 3 மெற்றிக் தொன் களஞ்சியம் செய்யக் கூடிய களஞ்சியங்கள் அமைக்கப்பட்டன.குறைந்த விலைக்கு செல்லும் அனைத்து நெல்லையும் அரசாங்கம் வாங்கும். 500 கோடி ஒதுக்கினோம். ஆனால் நெல் வரவில்லை. விவாசாயிக்கு நியாயமான விலை நெல்லுக்கு வழங்க வேண்டும்.
விவசாயிகளின் காணி உறுதி தொடர்பான பிரச்சினை உள்ளது. விவசாயிகளுக்கு காணி உறுதி வழங்க தயார். ஆனால் அவற்றை விற்க முடியாது.
கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதன் ஊடாக வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும். இந்த வருடத்தில் முதற்கட்டமாக பஸ்கொள்வனவிற்காக 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டம் அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்படுகிறது. பதிவு செய்யப்படாமல் வீதியில் வாகனம் செலுத்திய முன்னாள் அமைச்சர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். இலஞ்ச ஊழல் திணைக்களம்,சட்டமா அதிபர் திணைக்களம் என்பன பலப்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் ஐந்து சதத்தைக் கூட திருடாத வீண் விரயம் செய்யாத அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வருக்கு எதிராக ஒரு வழங்கும் அடுத்த மகனுக்கு எதிராக இரு வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. பாட்டிக்கு எதிராகவும் வழக்கு பதிவாகும்.சி.ஐ.டி ஊடாக பல விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. சட்டவிரோதமாக உழைத்த சொத்துக்களை மீளப் பெற பலமான சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் இதற்காகத்தான் எமக்கு ஆணை வழங்கினார்கள். பயந்தவர்கள் தான் அதிகமாக பேசுகிறார்கள்.முடிந்தால் தன்னை கைது செய்யுமாறு சவால் விடுகிறார்கள். எமக்கு யாரையும் பலிவாங்கத் தேவையில்லை.தற்பொழுது தான் திறைசேரியின் நிதி மக்களுக்கு சென்றடைகிறது. மக்களின் வரிப்பணம் நாட்டு நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது.
ஜனாதிபதி, அமைச்சர்கள், பாராளுமன்றம்,பிரதேச சபை.நகர சபைகள் அனைத்தும் இணைந்து பல வருடங்கள் போராடி நாட்டை கட்டியெழுப்புவோம் என்றும் தெரிவித்தார்.