Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

நாட்டின் வெற்றிகள் உள்ளூராட்சி சபைகளின் ஊடாக கிராமத்திற்கு கொண்டு வரப்படும்

(-Colombo, April 1, 2025-)

President AKD Addressing At Buttala Public Rally

– புத்தல பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை

நாட்டின் வெற்றிகள் உள்ளூராட்சி சபைகளின் ஊடாக கிராமத்திற்கு கொண்டு வரப்படும் என்றும், அதற்காக அச்சம், சந்தேகமின்றி நிதி ஒதுக்கக்கூடிய பிரதேச பொறிமுறை அவசியம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைகளை நிறுவ வேண்டும் என்பதோடு, பிரதேச அரசியல் அதிகார தரப்பின் முன்மொழிவுகள் ஜூலை-ஒகஸ்ட் மாதத்திற்குள் மத்திய அரசாங்கத்திடம் வழங்க வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி, அதன்படி

கிராமத்திற்கு தேவையான நிதி நவம்பர் மாதமளவில் வழங்கத் தயாரெனவும் கூறினார்.

“வெற்றி நமதே- ஊர் எமதே” வெற்றிப் பேரணித் தொடரின் நேற்று (31) புத்தல பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Buttala Public Rally Crowd

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டிலும் தேசிய மக்கள் சக்தியினால் வெற்றிபெற முடிந்தது. எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 10 உள்ளூராட்சி மன்றங்களையும் வெற்றிகொள்வோம் என்பதில் சந்தேகமில்லை. எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் இந்த நாட்டு மக்களுக்கு தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்வதை தவிர ஏனைய தெரிவுகள் இருக்காது. எனவே, இந்நாட்டின் எதிர்காலத்தையும், மக்களின் எதிர்காலத்தையும் பொறுப்பேற்றுகொள்ள இருக்கின்ற ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தியாகும்.

இந்த நாட்டில் முன்பிருந்த ஆட்சியாளர்களிடமிருந்து அதிகாரத்தை மாற்ற நீண்ட காலமாக மக்கள் பல வழிகளில் முயன்றனர். ஆனால் அவதூறு, பொய் தகவல், வன்முறை கும்பல் போன்ற பலவற்றைச் செய்து நீண்டகாலம் அதிகாரத்தை தங்கள் கைகளில் வைத்துக் கொண்டார்கள். இதன் இறுதி விளைவாக நாடு வங்குரோத்தடைந்தது. அவர்களால் முடிந்த எல்லாவிதமான அழிவுகளையும் நாட்டுக்கு செய்தார்கள். அதற்கு மறு திசையில் அவர்கள் வளர்ந்தனர்.

மேலும் அவர்கள் வீடுகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மதுபான விற்பனை நிலைய அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொண்ட விதம் தெரியவருகிறது. வீடுகளை எரிந்து விட்டதாக கூறி பணம் பெற்றமை தொடர்பிலும் எதிர்காலத்தில் தெரியவரும். தனமல்வில மக்கள் வன்முறை கும்பல்களுக்கு அஞ்சாமல் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக தலையீடு செய்தனர். அவ்வாறு பெரும்பணியாற்றி அமைத்துக்கொண்ட அரசாங்கமே இன்று இருக்கிறது. இந்த அரசாங்கம் கவிழப்போவதில்லை. கவிழ்க்கவும் எவரும் இல்லை. நாம் இந்த நாட்டை கட்டியெழுப்பிய பின்பே திரும்பிப் பார்ப்போம்.

மிகக் குறுகிய காலத்தில் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பல பணிகளைச் செய்துள்ளோம். பொருளாதார ரீதியாக ஸ்திரமற்ற ஒரு நாட்டை முன்னேற்றிச் செல்ல முடியாது. இந்த 6 மாதங்களுக்குள் நாட்டை பொருளாதார ரீதியாக ஸ்திரப்படுத்தியுள்ளோம். நீண்ட காலத்திற்கு வட்டி விகிதத்தை தனி இலக்கமாக பேணிச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்திரமற்ற பொருளாதாரம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த 76 வெளிநாட்டுத் திட்டங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Buttala Rally Crowd

நாட்டின் வங்கித் துறையில் நம்பிக்கை ஏற்பட வேண்டும். நாடு ஸ்திரப்படுத்தப்பட்டிருப்பதால் இன்று மீண்டும் முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருகின்றனர். கொழும்பு நகரில் மாத்திரம் பாரிய திட்டங்களுக்காக 15 காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முதலீட்டாளர்கள் நாட்டின் மீது நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். முதலீட்டாளர்கள் தங்கள் திட்டங்களை கமிஷன் வழங்காமல் ஆரம்பிப்பதற்கான சூழலை உருவாக்கியுள்ளோம். குறைந்த விலையில் மின்சாரம் வாங்குகிறோமே தவிர, முன்னைய அரசாங்கங்களைப் போல அதிக விலைக்கு கொடுத்து மின்சாரம் கொள்வனவு செய்வதில்லை.

வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றில் பெருமளவான நிதி வீதிகள், கால்வாய்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பணம் இருந்தாலும், வேலை செய்யும் அளவுக்கு அரச அதிகாரிகள் இல்லை. அரச துறையின் உயர் பொறிமுறை வலுவாக இருந்தபோதிலும், வினைத்திறனான அரச சேவைக்காக 30,000 புதிய அரச ஊழியர்களை உள்வாங்க தீர்மானம் எடுத்துள்ளோம். அரச தொழில் பெற அரசியல்வாதியை பின் தொடரும் காலம் முடிந்துவிட்டது. இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால், எமக்கு வலுவான அரச சேவையும் அவசியம்.

அரச ஊழியர்களுக்கு அதிகபட்ச சம்பளம் அதிகரிக்கப்படுள்ள அதேநேரம், எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்கிறோம். தற்போது வழங்கப்படும் 10 இலட்சம் காப்புறுதி 2 1/5 இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. வாகன அனுமதி இல்லை. எரிபொருள் ஒதுக்கீடு அரைவாசியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு அரசியல் தலைவர்கள் என்ற வகையில் நாம் முன்னுதாரணமாக செயற்பட்டுள்ளோம். கடந்த காலங்களில் எம்.பி.க்கள் எம்.பி சம்பளத்துடன் ஓய்வூதியமும் பெற்று வந்தனர்.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம், 4 இலட்சம் குடும்பங்களுக்கு புதிதாக அஸ்வெசும வழங்கப்படும். அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது, ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறான நன்மைகள் எதுவும் கிடைக்காத 8 இலட்சம் பேர் இந்நாட்டில் உள்ளனர். இவ்வருடத்தில் அவர்களுக்கு ஐயாயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் 2500 ரூபாவிற்கு வழங்கப்படவுள்ளது. மேலும், இந்த ஏப்ரல் மாதம் முதல் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்க தீர்மானித்துள்ளோம். மக்களை பாதுகாக்கவே அரசாங்கம் இருக்க வேண்டும். இதற்கு முன்பு இவ்வாறான அரசாங்கங்கள் இருந்ததா?

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர நிவாரணம் 25,000 ஆக அதிகரிக்கப்பட்டது. எதிர்காலத்தில் வயல்களில் மாற்றுப் பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு இம்முறை சிறு போகத்தில் உர நிவாரணமாக 15,000 ரூபா வழங்கப்படும். நெல்லுக்கு உரிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொனராகலை மாவட்டத்திலுள்ள அனைத்து வயல்களிலும் இம்முறை சிறு போகத்தில் பயிர்ச் செய்கை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நமது நாட்டை இங்கிருந்து முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமானால், பிள்ளைகளுக்கு புதிய பொருளாதார தேவைகளை வழங்க வேண்டும். இந்த நாட்டை கட்டியெழுப்ப, அன்னிய செலாவணியை ஈட்டுவது அவசியம். நாடு தற்போது சுற்றுலாத் தொழில், ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து டொலர்களைப் பெற்றுக்கொள்கிறது. மேலும் நாட்டுக்கு தேவையான டொலர் தொகையை ஈட்டுவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்.

President AKD On Stage At Buttala Public Rally

டொலர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதை தவிர்க்க நம்மால் முடிந்த அனைத்தையும் உற்பத்தி செய்ய வேண்டும். நெல் விளையக்கூடிய ஒவ்வொரு காணியிலும் நெல் பயிரிடுமாறு மக்களை கேட்டுக்கொள்கிறோம். தென்னைச் செய்கையை மேம்படுத்துவதற்கு உர நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் பல ஏக்கர்களில் தென்னைச் செய்கைக்காக 5000 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சீனி இறக்குமதிக்கு பெருமளவில் டொலர்களை செலவிடுகிறோம். பெலவத்தை சீனி நிறுவனம் மட்டும் VAT வரி உள்ளடங்களாக 394 கோடி ரூபாவை கடனாக செலுத்த வேண்டியுள்ளது. இன்றைய நிலையில் பெலவத்தை சீனி தொழிற்சாலை சரிவடையச் செய்யப்பட்டுள்ளது. எனவே, சீனி உற்பத்தி செய்யும் போது, ​​உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் நாட்டிலிருந்து ஒரு கிலோ சீனியை 190 ரூபாவிற்கு கொண்டு வர முடியும். எனேவ நுகர்வோரை பற்றி சிந்தித்து உற்பத்தி செய்வதை விட இறக்குமதி செய்வது இலாபமானது. இப்படி தொழிற்சாலைகளை நடத்த முடியுமா? இவ்வாறு சரிவடைந்த நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்ப கால அவகாசம் வழங்குங்கள்.

ஊழியர் பிரச்சினை நியாயமான முறையில் தீர்க்கப்படுவதோடு சீனி உற்பத்தி நிறுவனத்தை இலாபமீட்டும் நிலைக்குத் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிறுவனங்களுக்காக நாம் மேலும் கடன்பட வேண்டுமா? இந்த நிறுவனங்களின் சொத்துக்கள் குறைவு ஆனால் கடன் அதிகம். இந்த நிறுவனங்களை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதன் மூலம் இந்த பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். திருட்டு, மோசடி, ஊழல் என்பதே பிரச்சினைகளுக்கு காரணமாக காணப்பட்டது.

சுற்றுலாத் துறையில் இருந்து நாட்டுக்கு கிடைக்கும் டொலர்களின் எண்ணிக்கை பெருமளவானது. 2025 அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகைத் தந்த ஆண்டாக மாறும். மார்ச் 30ஆம் திகதி வரை 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் வந்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் 30 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருவார்கள். பெலவத்தையை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலாத்துறையை மேம்படுத்த உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். கட்டுநாயக்க விமான நிலையத்தை வினைத்திறனாக்கும் பணிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

Crowd At Buttala Public Rally

அதேபோல், 2025 ஆம் ஆண்டு பொருட்கள் மற்றும் சேவைகளின் விற்பனை மூலம் அதிக ஏற்றுமதி வருவாய் ஈட்டப்படும் ஆண்டாக மாறும். 2030க்குள், 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை இலக்காகக் கொண்டு திட்டங்களைத் தயாரித்துள்ளோம். மேலும், 2025ஆம் ஆண்டு வெளிநாட்டு தொழிலாளர்கள் அதிக அளவு டொலர்களை அனுப்பும் ஆண்டாக மாறும். இவை நல்ல விடயங்கள் அல்லவா? 2021, 2022-2023 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட நிலைமை மீண்டும் ஏற்படுவதற்கு இடமளியோம்.

மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் கிராமத்துக்கு வர வேண்டும். நாட்டின் வெற்றிகள் கிராமத்தை வந்தடைவதற்கு உள்ளூராட்சி மன்றம் அவசியம். ஒன்றோடொன்று இணைந்திருக்கும் பிரதேச சபைகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டாமா? அடுத்த வரவு செலவு திட்டத்தை நவம்பர் மாதம் சமர்பிப்போம். ஜூன் மாதம் முதல் அதற்கான முதற்கட்ட முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வோம். அதன்போது பிரதேச அரசியல் அதிகார தரப்பினால் மத்திய அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். வரவு செலவுத் திட்டம் முடியும் வரை தேர்தலை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தன. ஆனால் மே 6 ஆம் தேதி தேர்தல் திகதி மிகவும் தாமதமானது. தேர்தலை மட்டும் நடத்திக்கொண்டிருக்க முடியாது. ஜூன் 02 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைகள் நிறுவப்பட வேண்டும். ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதத்திற்குள் அவற்றின் முன்மொழிவுகள் மத்திய அரசாங்கத்திடம் வழங்கப்பட வேண்டும். நவம்பர் மாதமளவில் தேவையான பணத்தை வழங்குவோம்.

நான் வடமாகாணத்திற்கு சென்ற போது, ​​வடமாகாணத்தில் பழுதடைந்த வீதிகளை புனரமைக்க பணம் தேவை என மாவட்ட அபிவிருத்தி குழு கலந்துரையாடலில் யோசனை முன்வைக்கப்பட்டது. பழுதடைந்துள்ள வீதிகளை சீரமைக்க இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 5000 இலட்சம் ஒதுக்கியுள்ளோம். இந்த 5000 இலட்சத்தை செலவழித்து இந்த டிசம்பருக்குள் வீதிகளை அமைக்க வேண்டும் என்பதுதான் இப்போது அவர்களுக்கு சவாலாக உள்ளது. அதற்கு பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளின் ஆதரவு தேவை. அநுராதபுரம் சென்றபோது, ​​ராஜாங்கனை குளம், நாச்சதுவ குளம், ஹுருலுவெவ உள்ளிட்ட நீர்ப்பாசன முறைகளை நவீனப்படுத்த பணம் தேவை என்று கூறினர். அவற்றை சீரமைக்க வரவு செலவுத் திட்டத்தில் 3000 இலட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு பேசிவிட்டு, 3,000 இலட்சம் அதிகம், 2,000 இலட்சம் போதுமானது என்று திறைசேரிக்கு அறிவித்துள்ளனர். அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அழைத்து, மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை கூறினேன். இந்த டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினேன். மேலும், அமைச்சுக்களின் செயலாளர்களையும் வரவழைத்து டிசம்பர் 31ஆம் திகதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று பணித்திருக்கிறேன்.

People At Buttala Public Rally

இப்போது, ​​பணம் இருக்கிறது, வேலை செய்ய வேண்டும். அதற்கு கிராமத்திற்குள் வலுவான பொறிமுறையொன்று தேவை. முன்பெல்லாம், 10 இலட்சம் செலவாகும் வீதிக்கு 20 இலட்சம் வழங்க வேண்டியிருக்கும். இப்போது 10 இலட்சம் கொடுத்தால் போதும். அன்றைய பணத்திற்கு முன்பை விட இரண்டு மடங்கு அதிகமாக பணியாற்ற முடியும். ஆனால் இம்முறை பணம் அதிகரித்துள்ளதால் பணிகளை சிறப்பாகச் செய்ய முடியும். அச்சமின்றி பணத்தை ஒதுக்கக்கூடிய நல்ல பிரதேச பொறிமுறையொன்று எமக்குத் தேவைப்படுகிறது. உள்ளூராட்சி சபையொன்றின் அதிகாரத்தை வேறு யாராவது கைப்பற்றி யோசணைகளை அனுப்பினால் அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்க வேண்டியிருக்கும். அப்படி நடந்தால், பணத்தை ஒதுக்க முடியாது. எங்களுக்கு நம்பிக்கையான குழுவை அனுப்புங்கள். முன்னைய ஆட்சியாளர்கள் செய்த செயற்பாடுகள் காரணமாக வேறு தரப்புகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

76 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மக்களின் பணத்தை திருடாத அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் வேலை கிடைத்தால் அரசியல்வாதிகளுக்கும் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டும். வீதி அமைக்கும் போது கூட அமைச்சரின் வீட்டுக்கு ஒரு தொகை சென்றது.அரசாங்க அதிகாரிகளும் மோசடி, ஊழலில் ஈடுபடுவதாக எங்களுக்கு தகவல் வருகிறது. அது தெரியவரும் பட்சத்தில், கஷ்டங்களுடன் தேடிக்கொண்ட தொழிலை மிகக் குறுகிய காலத்தில் இழக்க நேரிடும். அப்படியல்லவா நாடு சீரமைக்கப்பட வேண்டும்? பொலிஸ் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பலர் ஊழல் காரணமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அரசியல் அதிகார தரப்பு திருடிக்கொண்டிருக்கும் போது, அரசாங்க அதிகாரிகளை திருட வேண்டாம் என்று சொல்ல முடியாது. அந்த பொறிமுறையை நாங்கள் சரியாக சீரமைத்திரு்கிறோம். மீண்டும் ஊழல்வாதிகள் ஆட்சி அமைக்க இடமளிக்கப்படாது. மத்திய அரசாங்கத்தின் திருட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக அதிகளவிள் சுரண்டப்பட்ட பிரதேச சபைகளையும் தூய்மைப்படுத்தி எங்களிடம் தாருங்கள்.

மோசடி செய்பவர்கள், ஊழல்வாதிகள் மீது ஏன் வழக்குத் தொடரவில்லை என்ற கேள்வி இன்னும் கேட்கப்படுகிறது. மோசடி செய்பவர்களை, ஊழல்வாதிகளை தண்டிக்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கு இல்லை. நீதிமன்றங்கள் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்து தண்டனை வழங்க வேண்டும். அதற்கான முழு சுதந்திரமான அதிகாரத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளோம். இதுபோன்ற மோசடி மற்றும் ஊழல் செய்பவர்கள் மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. முன்னைய ஆட்சியாளர்களுக்குச் சொந்தமான செவனகல, கதிர்காமம் வீடுகள் தொடர்பிலும் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஈஸ்டர் தாக்குதல், கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே மூன்று முன்னாள் அமைச்சர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் தலைமறைவாகியுள்ளார். எவ்வளவு காலம் மறைந்திருப்பார்கள் என்று பார்ப்போம். முன்னாள் பொலிஸ் மா அதிபரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாடு, அதிகாரம், பதவி, செல்வம் பற்றிய சிந்தனை இல்லாமல் செயல்பட்டவர்களுக்கு எதிராக சட்டம் செயல்படும் நாடு உருவாகியுள்ளது.