(-2025.10.14 – Colombo-)
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அவர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா அவர்களுக்கும் இடையிலான சுமூகமான கலந்துரையாடல் நேற்று (13) பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை பிரதிநிதித்துவம் செய்து நவ்யா சிங்லா (Navya Singla) அவர்களும் இணைந்து கொண்டிருந்தார்.
இதன்போது, நாட்டின் நிகழ்கால நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், இந்திய உயர்ஸ்தானிகர் கலந்துகொண்ட வீடுகளற்ற மலையக மக்களுக்கு வீட்டுரிமைகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் வெற்றி குறித்தும் கலந்துரையாடப்பட்டது. எதிர்காலத்தில் இவற்றுடன் சம்பந்தப்பட்ட உதவிகளை வழங்குவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தார். இந்த வீடுகளை வழங்கும் கருத்திட்டத்திற்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்கு தோழர் டில்வின் சில்வா இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
எதிர்வரும் காலத்தில் இந்திய முதலீடுகள் மற்றும் நன்கொடைகளை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், விவசாயம், தகவல் தொழில்நுட்பம், கடல் தொழிற்றுறை ஆகிய துறைகளில் இந்தியா பெற்றுக்கொண்ட முன்னேற்றம் பற்றிய அனுபவம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.