(-2025.06.13 – German-)
– ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
இலங்கையை சிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் சாதி, மத பேதமின்றி ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைத்ததாகவும், அன்று இந்நாட்டின் மக்கள் வைத்திருந்த எதிர்பார்ப்புகளை எந்த வகையிலும் சிதைக்க இடமளிக்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
நேற்று (13) பிற்பகல் ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை மக்களை சந்தித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பலர் இதில் கலந்து கொண்டதுடன், அவர்கள் ஜனாதிபதியை மிகவும் அமோகமாக வரவேற்றனர்.
இலங்கையில் தற்போது புதிய அரசியல் கலாசாரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக இங்கு தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று, முதல் தடவையாக, மக்களின் விருப்பமும் ஆட்சியாளரின் விருப்பமும் ஒன்றாக உள்ள அரசாங்கம் உருவாகியுள்ளதாகவும், இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் நாட்டினதும் மக்களினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிட்டார்.
முற்போக்கான சிறந்த அரசியல் பணிகளை முன்னெடுத்துச் செல்லும்போது, ஏனைய எதிர் குழுக்கள், தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அந்தப் பணிக்கு எதிராக ஒன்றுபடுவார்கள் என்று தெரிவித்த ஜனாதிபதி, அவர்கள் அவ்வாறு இணைவது நாட்டுக்காக அன்றி தங்களின் ஊழல், மோசடி மற்றும் குற்றங்களை மறைப்பதற்காகவே ஆகும் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெற்றிக்கு ஜெர்மனியில் வாழும் இலங்கையர்கள் வழங்கிய பங்களிப்பை இங்கு நன்றியுடன் நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்காலத்தில் நாட்டைக் கட்டியெழுப்ப மென்மேலும் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் அனைவரும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார்.
ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை மக்களிடையே உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:
நான் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் ஜெர்மனிக்கு வருகை தந்து, இலங்கையர்களை இவ்வாறு சந்தித்துள்ளேன். அதில் பல முகங்களை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். அந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும், நமது நாடு பயணிக்கும் அழிவிலிருந்து மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அதைத் தொடர்ந்து நடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் நாட்டு மக்கள் எங்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அந்த அதிகாரத்தைப் பெறுவதற்கு வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் பெரும் சக்தியாக இருந்தனர். எனவே, முதலில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நீங்கள் வழங்கிய பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
நாம் பெற்ற இந்த வெற்றி என்ன மாதிரியான ஒரு வெற்றி? நீண்ட காலமாக நமது நாடு சென்று கொண்டிருந்த பொருளாதாரப் பாதை மிகவும் அழிவுகரமானது.எனவே, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர். மேலும், மோசடி மற்றும் ஊழல் இல்லாத அரசாங்கம் இருக்க வேண்டும், மோசடி மற்றும் ஊழலைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர்.
மேலும், நாட்டில் அனைவருக்கும் சட்டத்தின் ஆட்சி சமமாக நிலைநாட்டப்பட வேண்டும் என்ற ஒரு கருத்து இருந்தது. அது மட்டுமல்லாமல், நீண்ட காலமாக அரசியல் தான் நமது நாட்டைப் பிரித்தது. எனவே, இந்த பிளவுபட்ட நாட்டிற்கு பதிலாக தேசிய ஒற்றுமையை உருவாக்கும் விருப்பம் மக்களிடையே இருந்தது.இவ்வாறு, மக்கள் பொதுவாக தங்கள் தனிப்பட்ட நலன்களுக்காக அன்றி, நாட்டினதும் மக்களினதும் பொதுவான அபிலாஷைகளுக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை உருவாக்கினர்.இந்த நாடு இதைவிட சிறந்த ஒரு தேசமாக மாற்றப்பட வேண்டும் என்ற பொதுவான விருப்பத்துடன், இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
இலங்கையில் முதன்முறையாக, வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தெற்கு பகுதிகளில் வசிக்கும் மக்கள், சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவரின் ஆசிர்வாதத்துடனும் விருப்பத்துடனும் ஒரு அரசாங்கத்தை அமைத்தனர். இதற்கு முன்னர், அந்தந்தப் பிரதேசங்களுக்கு ஏற்ப தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் இப்போது அவை அனைத்தும் முடிந்துவிட்டது.
அது மட்டுமல்லாமல்,பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, இலங்கை வரலாற்றில் ஒரு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் பணிகளில் ஒரு குறிப்பிட்ட அளவு இப்போது நிறைவடைந்துள்ளன. அதிகாரத்தை வழங்கும் பகுதி நிறைவடைந்துள்ளது. இப்போது, ஆட்சியாளர்களாக நமக்கு ஒரு பொறுப்பு உள்ளதைப் போன்று, நாம் எவ்வாறு முன்னோக்கிச் செல்வது என்ற பொறுப்பும் மக்களாகிய நமக்கு உள்ளது.
உங்களுக்குத் தெரியும், நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்றபோது, எங்கள் நாடு உத்தியோபூர்வமாக வங்குரோத்தான நிலையில் இருந்தது. எனவே, கடனை திருப்பிச் செலுத்த முடியாத நாடாக, எங்களுக்கு கடன்களை வழங்கிய நாடுகளுடன் ஒரு இணக்கப்பாட்டை எட்ட வேண்டிய சவால் ஏற்பட்டிருந்தது. வங்குரோத்தான ஒரு நாட்டுக்கு புதிய பொருளாதார பயணம் ஒன்றைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது.
எனவே, முதலில் எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டியிருந்தது. அதன்படி, கடந்த வருடம் டிசம்பர் 15 ஆம் திகதி கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்தோம். அது ஒரு மிக முக்கியமான பொருளாதார திருப்புமுனையாகும். அது நடக்காவிடின், இன்று நம் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கக்கூட முடியாது.
அதன் பிறகு, இடைநடுவில் நிறுத்தப்பட்டிருந்த திட்டங்களை மீண்டும் தொடங்குவதே எமக்கு சவாலாக இருந்தது. அந்த நேரத்தில், கடவத்தை-மிரிகம அதிவேக நெடுஞ்சாலைப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. மேலும், கட்டுநாயக்க விமான நிலைய நிர்மானப் பணிகளும் ஸ்தம்பித்திருந்தன. அவ்வாறு, சீன அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டிருந்த 11 திட்டங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. சீனாவிற்கான விஜயத்தின் போது, சீன ஜனாதிபதி மற்றும் ஏனைய பிரதானிகளுடன் இது குறித்து நாம் கலந்துரையாடினோம்.
அதன்படி, நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான திட்டங்களை மீண்டும் தொடங்க முடிந்ததுடன், மேலும் ஏராளமான புதிய திட்டங்களை ஆரம்பிக்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. ஒரு இடத்தில் தடைப்பட்டிருந்த நாடு மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. அன்று முதலீட்டாளர்கள் நம் நாட்டைப் கண்டுகொள்ளவே இல்லை. இருப்பினும், இன்று அந்தத் திட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. இது ஒரு முக்கியமான திருப்புமுனையாகும்.
மேலும், வலுவான சர்வதேச உறவுகளை உருவாக்குவது எங்களுக்கு இருந்த மற்றொரு சவாலாகும். இந்த நூற்றாண்டில், உலகில் எந்த நாடும் தனிமையில் வாழ முடியாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். சந்தை வாய்ப்புகள், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் உலகம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, உலக நாடுகளுடன் வலுவான மற்றும் நிலையான வெளிநாட்டு உறவுகளை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அந்த வகையில் நாம் பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளோம். நமது அரசாங்கம் அமைக்கப்பட்ட மிகக் குறுகிய காலத்திற்குள், நமக்கு அருகில் உள்ள நாடான இந்தியாவின் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்தார். மேலும், சீனாவுடனான உறவுகளை நாம் வலுப்படுத்தினோம்.
ஏனைய நாடுகளுடனான எமது உறவுகளையும் நாம் வலுப்படுத்தி வருகிறோம். நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை வெற்றிகொள்ள வேண்டுமாயின், நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் சிறந்த வெளிநாட்டு உறவுகள் எமக்கு அவசியம். மேலும், அரச வருமானத்தை நாம் ஈட்ட வேண்டும். 2022 ஆம் ஆண்டில், உலகிலேயே மிகக் குறைந்த அரச வருமானத்தைக் கொண்ட நாடாக நமது நாடு மாறியது. எமது வருமானம் தேசிய உற்பத்தியில் சுமார் 7% ஆக குறைந்தது.
இந்த ஆண்டு தேசிய உற்பத்தியில் 15.1% சதவீதமாக எங்கள் வருமானத்தை அதிகரிக்கும் சவாலை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். இது 2022 ஆம் ஆண்டை விட இரண்டு மடங்கு அதிக வருமானமாகும். திறைசேரிக்கு நிதியை ஈட்டாமல், முதலீடு செய்யவோ, செயற்திறன் மிக்க அரச சேவைகளை வழங்கவோ, மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்கவோ முடியாது. எனவே, நாம் மிக முக்கிய வருமான இலக்குகளை திட்டமிட்டுள்ளோம்.
அரசு, வருமானம் பெற்றுக்கொள்ளும் மூன்று முக்கிய வழிகள் உள்ளன. உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம். இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றிற்கும் நாங்கள் மாதந்தோறும் இலக்குகளை வழங்கியுள்ளோம். அவற்றின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும்போது, அது குறித்து நாம் மகிழ்ச்சியடையும் நிலையே உள்ளது.
மேலும், நமது நாட்டில் வரி குறித்து ஒரு சிக்கல் இருந்தது. உழைக்கும் போது செலுத்தும் வரி, கணிசமான அளவு அதிகரித்திருந்தன.
சுமார், ஒரு இலட்சம் ரூபா உழைப்பவர்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்பட்டதுடன், அதே நேரத்தில் ஒன்றரை இலட்சம் ரூபா உழைப்பவர்களுக்கு 72% வரி விலக்கு அளிக்கப்பட்டது. இந்த முறையில், சாதாரண மக்களுக்கு அதிக வரி விலக்கு அளித்தோம். ஆனால் பெறுமதி சேர் வரி இன்னும் அதிகமாகவே உள்ளது.
எமக்கு ஒரு இலக்கு உள்ளது. எமது காலத்திற்குள் இந்த 18% வற் வரியைக் குறைப்பதற்கு. எனவே, வரி வலையமைப்பை நாம் உயர்த்தியுள்ளோம். அதற்காக நாம் டிஜிட்டல் மயமாக்கலை அதிகளவில் செயல்படுத்தி வருகிறோம். அதன்படி, இந்த வரிகளை முறையாக வசூலிப்பதற்கு தேவையான வழிமுறையை நாங்கள் தயாரித்து வருகிறோம். மேலும் பணப்பரிமாற்றத்தை படிப்படியாக நீக்கி, மென்பொருள் கட்டமைப்புகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். பின்னர், அந்தப் பரிமாற்றங்களை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள முடியும். வரி ஏய்ப்பு செய்பவர்களிடமிருந்து வரி வசூலிப்பதற்கான வழிமுறையையும் நாங்கள் நெறிப்படுத்தியுள்ளோம்.
மேலும், நமது அரச பொறிமுறை மிகவும் பலவீனமான மற்றும் செயற்திறனற்ற அரச பொறிமுறையாகும். எனவே, இந்த அரச பொறிமுறையை திறமையானதாக மாற்ற வேண்டும். அதற்காக, அறிவு மற்றும் திறன்களைக் கொண்டவர்களை அரச சேவைக்கு ஈர்க்க வேண்டும். எனவே, திறமை மற்றும் செயற்திறன் கொண்டவர்களை அரச சேவைக்கு ஈர்க்கவும், அரச சேவையை ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாற்றவும் நாம் சம்பளத்தை அதிகரித்துள்ளோம்.
எந்தவொரு நாட்டின் வளர்ச்சியிலும் அரச சேவைக்கு பெரும் பங்கு உண்டு. இந்த நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ள அரச சேவையை மீட்டெடுக்கவும் மீண்டும் கட்டியெழுப்பவும் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், 30,000 புதியவர்களை அரச சேவையில் சேர்ப்பதற்கு நாங்கள் அங்கீகாரம் அளித்துள்ளோம். இந்த ஆட்சேர்ப்புகள் மிகவும் முறையான வகையிலும் தேவைக்கேற்பவும் செய்யப்படுகின்றன. இன்று, எந்த அரச நிறுவனமும் தமது விருப்பப்படி ஊழியர்களை நியமிக்க முடியாது. அதற்காக நாங்கள் ஒரு குழுவை நியமித்துள்ளோம்.
இந்த ஆட்சேர்ப்புகள் இன்று, அரசியல் தேவையின் அடிப்படையில் செய்யப்படவில்லை. இந்த நாட்டை இவ்வாறு முன்னோக்கி கொண்டு சென்று, நமது காலம் முடிந்ததும் நமக்கு வெளியேறலாம். இல்லையெனில், நாம் முழுமையான உறுதியுடன் அரச சேவையை தூய்மைப்படுத்த வேண்டும். அந்த சவாலை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம்.
நமது நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் பொலிஸ் திணைக்களம் முக்கியமான பங்கு வகிக்கின்றது. இருப்பினும்,பொலிஸ் திணைக்களம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தன்மையை ஒத்திருந்தது. இதன் விளைவாக, இலங்கையில் முதல் முறையாக, பொலிஸ் மா அதிபர் பொலிஸிடமிருந்து மறைந்திருந்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் இன்னும் அவர் தான் பொலிஸ் மா அதிபர்.
நாங்கள் புதிய பொலிஸ் அதிகாரிகளை நியமிப்போம். அவர்களுக்கு பொருத்தமான சம்பளம் வழங்குவோம். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏனென்றால், நம் நாட்டில் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு பொலிஸ் திணைக்களத்தை நாம் உருவாக்க வேண்டும்.
அடுத்த முக்கியமான நிறுவனம் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஆகும் நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் சவால்களின்போது இது நமக்கு மிகவும் முக்கியமான நிறுவனமாகும்.
நம் நாட்டிற்குள் யார் நுழைகிறார்கள், யாரை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்பதை ஒரு நாடு அறிந்து கொள்வது முக்கியம். ஆனால், அண்மையில் என்ன நடந்தது? குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் , பாதாள உலகத் தலைவர்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்கியுள்ளது. பாதாள உலகத் தலைவர் வெளிநாட்டில் இருக்கிறார். நீங்கள் கடவுச்சீட்டைப் பெறும்போது,புகைப்படத்தைப் பதிவேற்ற வேண்டும். உரிமையாளர் வந்து தனது கைவிரல் அடையாளத்தை வழங்க வேண்டும்.
ஒரு பாதாள உலகத் தலைவருக்கு மூன்று கடவுச்சீட்டுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், கைவிரல் அடையாளங்கள் புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஒரு புத்தக விற்பனையாளரால் கொடுக்கப்பட்டுள்ளன. நாங்கள் அவரைக் கைது செய்துள்ளோம். இந்தத் திணைக்களம் அந்தளவு வீழ்ச்சியடைந்துள்ளது . அடுத்தது போக்குவரத்துத் திணைக்களம். காலையில் கிடைத்த தகவலின்படி, சம்பந்தப்பட்ட அதிகாரியின் அலுமாரியை சோதனை செய்தபோது, நான்கு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் இருந்தது. சேகரிக்கப்பட்டதைப் பகிர்ந்துகொண்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
மாத்தறை சிறைச்சாலையில் சீர்திருத்தங்கள் காரணமாக, அங்குள்ள கைதிகளை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றினோம். பின்னர் மாத்தறை சிறைச்சாலையிலிருந்து ஏழு கைவிலங்குகளைப் கண்டு பிடித்தோம். அதாவது கைவிலங்குகள் கைதிகளிடம் இருந்தன. கைவிலங்குகளில் 27 திறப்புகள் காணப்பட்டன. தொலைபேசிகள், சார்ஜர்கள், ஐபேட்கள். இதுதான் இந்த நாட்டின் நிலமை. அதுமட்டுமின்றி, சிறைச்சாலை அதிகாரிகளும் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கத் தொடங்கியுள்ளனர். நான் சொல்ல வருவது என்னவென்றால், நமது நாடு முன்பு இவ்வாறுதான் இருந்தது. இவை முக்கியமான நிறுவனங்கள். சுங்கம், சிறைச்சாலைத் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இவை ஒரு நாட்டின் முதுகெலும்பு. ஒரு நாட்டின் இருப்புக்கான முக்கிய காரணிகள். அவை அனைத்தும் பலவீனமாக உள்ளன.
இவை அனைத்தையும் தூய்மைப்படுத்தும் முயற்சிற்கு நாம் கை கொடுப்போம். நமது பிள்ளைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் அவசியம். அது இல்லாமல், நாடு முழுவதும் சிறிய சிறிய சிற்றரசுகள் உருவாக்க இடமளிக்க முடியாது. இந்த சிற்றரசுகள் அனைத்தையும் அழித்து விடும். இலங்கையில் ஒரே ஒரு அரசே உள்ளது. அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசு. இந்த இடத்திற்கு கொண்டு செல்வதே எமது குறிக்கோள். அதைத்தான் நாங்கள் செய்கிறோம்.
அரசியல் அதிகாரமாக, நாம் நமது நேர்மையைப் பற்றி பெருமைப்படலாம். நாம் மக்கள் பணத்தில் ஒரு ரூபாவைக் கூட திருடுவதில்லை. அதை வீணாக்குவதில்லை. அந்த முன்மாதிரியை நாம் ஏற்படுத்தியுள்ளோம். அது போதாது. அரச சேவையும் அந்த இடத்திற்கு வர வேண்டும். அவர்களை அங்கு வருமாறு நாம் தொடர்ந்து அழைத்திருக்கிறோம். மேலும், இந்த நாட்டு மக்கள் நீதிக்காக ஏங்குகிறார்கள். குற்றங்களைத் தண்டிக்கும் அதிகாரம் அரசியல் அதிகாரத்திற்கு இல்லை. சட்டம் அந்த அதிகாரத்தை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், ஆகியவற்றிற்கு வழங்கியுள்ளது. ஒரு குற்றத்தை, ஒரு மோசடியை விசாரிக்க, அந்தத் திணைக்களங்களால் முடியும்.
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு, சட்டங்கள் மூலம் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் சட்டங்கள் போதுமானதாக இல்லை என்றால், அதிக சட்டங்கள் இயற்றப்படும். பாராளுமன்றத்திற்கு அந்த அதிகாரம் உள்ளது. ஏப்ரல் 8 ஆம் திகதி, சட்டவிரோதமாக சேகரித்த சொத்துக்களை பறிமுதல் செய்ய ஒரு சட்டத்தை நாங்கள் நிறைவேற்றினோம். அந்த சட்டங்களின்படி நிறுவனங்களை நிறுவுவோம். இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு ஒரு சிறிய அலுவலகத்தில் இருந்தது. எங்கள் அமைச்சர்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை. இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வீடு வழங்கப்பட்டது. முன்பு, அமைச்சர்கள் வீடுகளில் வசித்து வந்தனர். இப்போது அமைச்சர்களைத் தேடுபவர்கள் வசிக்கின்றனர்.
அவர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான சம்பளம் வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அவர்களுக்கு தேவையான வாகனங்கள் மற்றும் வசதிகளை நாங்கள் வழங்குவோம். அதுதான் அரசாங்கத்தின் வேலை. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நாங்கள் எங்கள் ஆதரவை வழங்கியுள்ளோம். பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்ட விவகாரங்களுக்கு உதவ, விசாரணை அதிகாரிகள் உள்ளதுடன், சட்டத்தரணிகளை நியமிப்பது குறித்தும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.
அடுத்து, இந்த நிறுவனங்கள் விசாரிக்க வேண்டும். பின்னர், விடயங்களை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அவற்றில் அதிகமானவை ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், அது போதாது. பின்னர், மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்து அந்த விடயங்களின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். அதுதான் இறுதி நடவடிக்கை. அதன் பிறகு, வழக்குகளை விசாரித்து தண்டனை விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
கடந்த காலத்தில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டும் உள்ளன. சட்டமா அதிபர் திணைக்களத்தில் மிக விரைவில் அவர்களுக்கான குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு, அதற்கான நடவடிக்கைகள் நீதிமன்றங்களின் வசம் உள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தங்கள் வாதங்களை முன்வைக்கின்றனர். சட்டத்தரணிகள் தங்கள் வாதங்களை முன்வைக்கின்றனர். நீதிமன்றம் ஒரு முடிவை எடுக்கிறது. அண்மையில் நீதிமன்றம் எடுத்த முடிவுகள் உள்ளன.
ஒரு வழக்கில், கடந்த காலத்தில் நமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால், மக்களும் நாடும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாக நீதிபதி கூறுகிறார். இதற்குக் காரணம் மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயம்.
எனவே, சாதாரண தண்டனை வழங்கக்கூடாது. அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். மற்றொரு வழக்கில், இந்த வழக்கைத் தாக்கல் செய்வதில் ஏன் 10 ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டது என்று நீதிபதி கேட்கிறார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சட்டத்தரணிகள், அவர்கள் 10 ஆண்டுகளும் ஆட்சியில் இருந்தது தான் காரணம் என்று பதிலளிக்கின்றனர். இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்கள் பொறுப்புகளுக்கு கணிசமான அளவிற்கு பொறுப்பேற்கத் தொடங்கியுள்ளன என்பதை இவை காட்டுகின்றன. எனவே, இந்த நாட்டின் மக்கள் எதிர்பார்த்த பணியை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று நான் நினைக்கிறேன்.
தேசிய ஒற்றுமையில் நாம் கவனம் செலுத்தினால், வடக்கு மக்கள் இலங்கையில் முதல் முறையாக எங்களை நம்புவது ஒரு முக்கியமான மைல்கல் ஆகும். இலங்கையில் பழைய இனவெறி அரசியலை மீண்டும் உயிர்ப்பிப்பதே தோல்வியுற்றவர்களின் நோக்கம். எல்.டி.டி.ஈ. முக்கியமான ஒருவரைச் சந்திக்கவே நான் ஜெர்மனிக்கு வருவதாக கூறுவதைக் கண்டேன். அந்த அரசியலை மீண்டும் அனுமதிக்க முடியாது. இலங்கையில் மீண்டும் இனவெறியை வைத்து அரசியல் செய்ய யாராவது முயன்றால், இருக்கும் சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்டங்கள் இயற்றப்படும், ஆனால் இனவெறி தலைதூக்க அனுமதிக்கப்பட மாட்டாது.
ஏன் என்றால்? இனவெறி காரணமாக பெரும் பேரழிவைச் சந்தித்த நாடு நாம். கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலப் போரில் வடக்கு மற்றும் தெற்கில் மக்கள் இறந்தனர்.பூமி நனையும் வரை இரத்தம் சிந்தப்பட்டது. நமது நாடு பின்னோக்கிச் சென்றது. அது வேறு எதனாலும் அல்ல. ஏனென்றால் இனவெறி அதிகாரத்தைப் பெறவும் அதைத் தொடரவும் பயன்படுத்தப்பட்டது. எனவே, இனவெறி அரசியலை மீண்டும் அனுமதிக்க மாட்டோம். தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்கவும் வலுப்படுத்தவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
எங்களுக்கு ஒரே நாடு வேண்டும். ஒரே இலங்கை தேசம். மொழி, மதம் மற்றும் கலாசாரத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படாத ஒரு நாடு. பிளவுபட்ட அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து மீண்டும் இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும். இது ஒரு பெரிய மற்றும் சவாலான முயற்சி. இது எளிதில் செய்யக்கூடிய ஒன்றல்ல. எதிர் தரப்புகளில் உள்ள பிற்போக்குவாதிகள் இதற்கு எதிராக ஒன்று சேர்கின்றனர். பிரதேச சபைத் தேர்தல்களில், நாங்கள் 267 நிறுவனங்களை வென்றோம். அவற்றில் 152 இல், ஏனைய அனைத்தையும் சேர்த்தாலும், எங்கள் எண்ணிக்கை அதிகம். ஆனால் நாங்கள் 115 ஐ வென்றிருந்தாலும், அடுத்தவைகளைச் சேர்க்கும்போது, எங்களை விட அதிகம். அவர்களுக்கு தனித்தனி அரசியல் நீரோட்டங்கள் உள்ளன. அரசியல் நீரோட்டங்களைக் கருத்தில் கொண்டால், அந்த பிரதேசத்தின் மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஆனால், 115 நிறுவனங்களில் எங்களுக்கு பெரும்பான்மை இல்லை. இப்போது அது எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதைப் பாருங்கள். குளியாப்பிட்டி பிரதேச சபையை எடுத்துக் கொண்டால், எங்களிடம் சுமார் 21 உறுப்பினர்கள் இருந்தனர். மொட்டில் 6 உறுப்பினர்கள் உள்ளனர். இப்போது தலைவர் யார்? மொட்டைச் சேர்ந்தவர். தலைவர் பதவியைப் பெற அவர்களுக்கு யார் ஆதரவு அளித்தார்கள்? ஐ.ம.ச. மற்றும் ஐ.தே.க. கதிரை , இவ்வாறு அனைவரினதும் ஆதரவுடன் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் எங்களுக்கு எதிராக ஒரு தரப்பை உருவாக்குகிறார்கள்.
இலங்கையில் முதல் முறையாக இந்த தீவிர அரசியல் பிரிவு உருவாகி வருவதாக நான் நினைக்கிறேன். வரலாற்றில் பல அரசுகள் இந்த சவால்களை எதிர்கொண்டுள்ளன. ஒரு முற்போக்கான மற்றும் நல்ல அரசியல் பணி முன்னெடுக்கப்படும்போது, மற்ற விரோதக் குழுக்கள் தங்கள் பகைமையை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்று சேர்கின்றன. நீங்கள் ஒரு ஊடக விவாதத்தைப் பார்த்திருக்கலாம். ஐ.ம.ச. இன் திஸ்ஸ அத்தநாயக்க, மொட்டைச் சேர்ந்த அதன் செயலாளர், ஐ.தே.க. இன் தலதா போன்றவர்கள் அனைவரும் ஒரே தரப்புக்கு வருகிறார்கள். ஆனால், இதுவரை அவர்கள் நமக்கு எதைக் காட்டியுள்ளார்கள்? அவர்கள் இரண்டு பிரிவினர் என்று.
ஆனால் இன்று அவர்கள் ஏன் ஒன்றாக சேர்ந்துள்ளனர்? வேறு எதற்கும் அல்ல. அவர்கள் செய்த பழைய ஊழல், மோசடி மற்றும் குற்றங்களை மறைக்க ஒன்றாக சேர்ந்துள்ளனர். அவர்கள் மொட்டு என்றாலும் ஐ. ம. ச. என்றாலும் பரவாயில்லை. அவர்கள் குற்றம் அல்லது மோசடி செய்திருந்தால், அவர்களுக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்படும். எனவே, நாம் என்ன செய்ய வேண்டும்? இந்த பயணத்தை தோற்கடிக்க அவர்கள் அவர்களது விரோதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இணைய வேண்டும். இல்லையெனில், அரசியல் ரீதியாகப் பார்த்தால், சஜித் பிரேமதாசவும் நாமல் ராஜபக்ஷவும் இணைவது நாமலுக்கு பாதகமானது. அது சஜித்துக்கு பாதகமானது. அது இருவருக்கும் பாதகமானது.
இருப்பினும், இருவரும் பிரிந்தாலும் அது பாதகமாக இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எனவே என்ன செய்ய வேண்டும்? நமக்கு எதிராக ஒன்றுபட வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் நீண்டகால அரசியல் பாதகத்தை அவர்கள் கருத்தில் கொள்வதில்லை. அடுத்த தேர்தலில் இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்கள் எப்படி வர முடியும்? ஏனென்றால் இப்போது அது ஒரு அரசியல் முகாம். அவர்களுக்கு அது தெரியும். அப்படி இருந்தாலும், குறுகிய காலத்தில், இந்த குறிப்பிட்ட தருணத்தில், அவர்களின் இருப்பைப் பாதுகாக்க, அவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக ஒன்றுபட வேண்டும். அது அவர்களின் தனிப்பட்ட நலனுக்காகவே. ஆனால், நினைவில் கொள்ளுங்கள். என்ன செய்தாலும், தேசிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்ட ஆணையின்படி ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிரான எந்தவொரு விசாரணையும் தடைபட அனுமதிக்க மாட்டோம். மேலும், எங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை எங்கள் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளையும் நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம்.
எனவே, இலங்கையில் முதல் முறையாக, ஒரு புதிய அரசியல் உருவாகியுள்ளது. எங்கள் நாட்டைப் பற்றிய ஒரு தொலைநோக்குப் பார்வை உங்களிடம் உள்ளது. எங்களுக்கு எப்படிப்பட்ட நாடு வேண்டும்? முன்பு, மக்களின் தொலைநோக்குப் பார்வையும் ஆட்சியாளரின் தொலைநோக்குப் பார்வையும் இரண்டு வெவ்வேறு விடயங்களாக இருந்தன. மக்களுக்கு ஒரு ஆசை இருந்தது. ஆட்சியாளருக்கு மற்றொரு ஆசை இருந்தது. முதல் முறையாக, உங்கள் விருப்பங்களும் எங்கள் விருப்பங்களும் ஒன்றாக மாறிய ஒரு அரசாங்கம் உருவாகியுள்ளது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
நீங்கள் ஊழலை நிறுத்த விரும்புகிறீர்கள். எங்களுக்கும் அது வேண்டும். ஊழல் செய்பவர்களை நீங்கள் தண்டிக்க வேண்டும் என்டு விரும்புகிறீர்கள். எங்களுக்கும் அது வேண்டும். நீங்கள் சட்டத்தின் ஆட்சியை நிறுவ விரும்புகிறீர்கள். எங்களுக்கும் அது வேண்டும். எங்கள் நாட்டில் ஒரு சிறந்த பொருளாதாரத்தை நிறுவ விரும்புகிறீர்கள். எங்களுக்கும் அது வேண்டும். அதன் அர்த்தம் என்ன? மக்களும் ஆட்சியாளரும் இரு தரப்பினர் அல்ல. இலங்கையில் மக்களும் ஆட்சியாளரும் ஒன்றாக இருக்கும் ஒரு அரசாங்கம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
இது எங்கள் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு. அந்த வாய்ப்பை உருவாக்க நீங்கள் கடுமையாக உழைத்திருப்பதை நான் அறிவேன். உங்கள் குரலும் பங்கும் இல்லாமல், ஒரு வலுவான அரசாங்கத்தை உருவாக்க முடியாமல் போயிருக்கலாம். அதில் நீங்கள் ஒரு பாரிய பங்கை வகித்துள்ளீர்கள். எதிர்காலத்திற்காக நாங்கள் பல இலக்குகளை திட்டமிட்டுள்ளோம். 2025 ஆம் ஆண்டு வரலாற்றில் இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஆண்டாக இருக்கும்.
மேலும், 2025 ஆம் ஆண்டை வரலாற்றில் அதிக ஏற்றுமதி வருமானத்தைக் கொண்ட ஆண்டாக மாற்றுவோம். 2025 ஆம் ஆண்டை வரலாற்றில் ஒரு அரசாங்கம் அதிக வருமானம் ஈட்டிய ஆண்டாக மாற்றுவோம். அது மட்டுமல்லாமல், வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட்ட ஆண்டாக இந்த ஆண்டை மாற்றுவோம். நல்ல நோக்கங்களுடனும் நம்பிக்கையுடனும் அதை நோக்கி நாங்கள் முயற்சிக்றோம். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்! எழுந்து நிற்போம்! என்று உங்களை அழைக்கிறோம்.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இக் கூட்டத்தில் உரையாற்றினார்.