(-Colombo, March 29, 2025-)
– திஸ்ஸமஹாராம மக்கள் பேரணியில் ஜனாதிபதி உரை
பிரஜைகளின் வரிப் பணத்தில் ஒவ்வொரு ரூபாயினையும் மக்களுக்காக கவனமாகச் செலவிடப்படுவதை தற்போதைய அரசாங்கம் உறுதி செய்யும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் நேற்று (29) நடைபெற்ற “வெற்றி நமதே – ஊர் எமதே” என்ற வெற்றிக் கூட்டத் தொடரின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
திஸ்ஸமராம ஒவ்வொரு முறையும் எமக்கு பெரு வெற்றியைத் தந்தது. திஸ்ஸ தொடர்பில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. நாம் தற்போது இலங்கை அரசியலில் பாரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளோம். நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்த பழைய குழுவிடமிருந்து பொது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய குழுவிடம் அதிகாரம் கைமாறியுள்ளது. இது சாதாரண விடயமல்ல. அதற்கான முதல் திருப்பம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் செய்யப்பட்டது. பொதுத் தேர்தலில், இலங்கை வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்களுடன் பாராளுமன்றத் தேர்தலை வெற்றிக்கொண்டோம். உள்ளூராட்சி தேர்தலில் அதனை விடவும் அதிக வாக்குகளைப் பெறுவது உறுதி. ஏனெனில் நாங்கள் எற்படுத்திய திருப்பத்தை மாற்ற மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதை முன்னெடுத்துச் செல்வதுதான் நம் நாட்டுக்கும் மக்களுக்கும் இருக்கும் ஒரே வழியாகும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது நமது நாடு பொருளாதார ரீதியாக குணமடைந்த நாடாக இருக்கவில்லை. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நாடு பெரும் வங்குரோத்து நிலைக்குச் சென்றது. நீண்ட காலம் நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களின் பலவீனத்தால் ஒரு நாட்டிற்கு ஏற்படக்கூடிய மிகப்பெரிய பேரழிவை கொண்டு வந்தனர். நாட்டின் பொருளாதாரத்தை கொண்டு வரக்கூடிய மிகப்பெரிய அழிவு பொருளாதார வங்குரோத்து நிலையாகும். நாம் உலக நாடுகளிடம் கடன் பட்டு கடன் செலுத்த முடியாதென கூறி தனிமைப்பட்ட நாடு. இன்னும் நூறு வருடங்களில் இலங்கையின் பொருளாதாரம் பற்றி ஒரு புத்தகம் எழுதப்பட்டாலும் 2021-2023 பொருளாதார நெருக்கடி வரலாற்றில் எழுதப்படும். கடனை அடைக்க முடியாத நாடு. எண்ணெய் இறக்குமதி செய்ய டொலரை ஈட்டிக்கொள்ள முடியாத நாடு. மருந்து இறக்குமதிக்கு டொலரை ஈட்டிக்கொள்ள முடியாத நாடு, சமையல் எரிவாயு இறக்குமதி செய்ய பணமில்லாத நாடு, மக்கள் வீதியில் இறங்கி ஆட்சியாளர்களை விரட்டியடித்த நாடு. நாட்டை ஆண்டவர் மறைந்திருந்து உயிரை காப்பாற்றிய காலம் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது.
அப்படி ஒரு நாடு வங்குரோத்தடையும் போது அதிலிருந்து வழமைக்கு திரும்ப சுமார் பத்து வருடங்கள் ஆகும். உலகில் பல நாடுகள் இத்தகைய பேரழிவை சந்தித்த போது அத்தகைய காலம் சென்றது. ஆனால் குறுகிய காலத்தில் இந்த நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எம்மால் முடிந்தது.
முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வர நம்பிக்கை வேண்டும். கடந்த ஐந்து வருடங்களில் இந்த நாட்டுக்கு முதலீட்டாளர்கள் வரவில்லை. தற்போதைய அரசாங்கத்துடன் முதலீட்டாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இலங்கையின் மிகப் பெரிய முதலீடான ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டம் பற்றி நாம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவை தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்தியப் பிரதமரின் பங்கேற்புடன் எதிர்வரும் 5ஆம் திகதி சம்பூரில் மின் உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளது. முதலீடுகள் வர ஆரம்பித்துள்ளன. சியாம்பாலாண்டுவவில் 100 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க முதலீடுகள் வந்துள்ளன. கெரவலப்பிட்டியில் புதிய சேமிப்பு முனையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் முதலீடு செய்வதற்கு ஏற்ற காணி கண்டறியப்பட்டுள்ளதுடன், முதலீடுகளுக்காக அவை மிக விரைவில் பிரசித்தப்படுத்தப்படும். முதலீட்டாளர்கள் படிப்படியாக நம் நாட்டின் பக்கமாக கவனத்தை திருப்பியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை நிர்மாணித்த முதலீட்டாளர்கள கைவிட்டுச் சென்றனர். கட்டுநாயக்க திட்டத்தை இரண்டு மாதங்களில் பூர்த்தி செய்வோம். கடவத்த – மீரிகம அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணித்துக் கொண்டிருந்த முதலீட்டாளர்களும் வெளியேறினர். ஆனால் மீண்டும் அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளை ஆரம்பிக்கிறோம். கைவிட்டுச் சென்ற முதலீடுகள் மற்றும் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதில் அரசாங்கம் வெற்றி கண்டுள்ளது. டொலரை 300 ரூபாயில் தக்கவைக்க தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்துள்ளது. முன்பு டொலருக்கு இரவில் தூங்கும் போது ஒரு பெறுமதியும், காலையில் எழுந்தவுடன் மற்றொரு பெறுமதியும் இருக்கும். வட்டி விகிதம் தனி இலக்கத்தில் பேணப்படுகிறது. பங்குச் சந்தைபெரு வளர்ச்சியை காண்பிக்கிறது. இது பொருளாதார ஸ்திரத்தன்மையின் அடையாளமாகும். கடன் மறுசீரமைப்பிற்குப் பிறகு, நாங்கள் 500 டொலர் மில்லியன் கடனை அடைந்துள்ளோம். ஆனால் டொலரின் பெறுமதியில் எந்த மாற்றமும் இல்லை. ஐந்து முதல் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வாகனங்கள் இறக்குமதி நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது வாகன சந்தை படிப்படியாக திறக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பொருளாதாரத்தின் நல்ல சமிக்ஞையை காட்டுகிறது. தற்போதைய அரசாங்கத்தினால் கடந்த ஆறு மாதங்களில் பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கையுடன் நீங்கள் முன்னேற்றமடைய முடியாது.
பொருளாதார ஸ்திரத்தன்மை காரணமாக, நாங்கள் ஈட்டிக்கொண்ட நிதியை மீண்டும் மக்களை சென்றடைவதற்கான வழிகளை செய்திருக்கிறோம். நான்கைந்து ஆண்டுகளாக அரச சேவைக்கு ஊழியர்கள் உள்வாங்கப்படவில்லை. புதிதாக 30,000 பேரை அரச சேவைக்கு இணைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளோம். அதற்காக இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்திலும் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 15,700 வெற்றிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மீதமுள்ள வெற்றிடங்களை கண்டறிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களில் தொழில்நுட்ப அதிகாரிகள் (TO) இல்லை. வீதிகளை அமைக்கும் போது பல தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்படுகிறது. பொருளாதாரத்தில் அடைந்துகொள்ளும் ஸ்திரத்தன்மையின் பலன்கள் மக்களுக்கு மீளக் கிடைக்கும். எனவே, ஐந்து வருடங்களாக ஆட்சேர்ப்பு செய்யப்படாத அரச சேவைக்கு இந்த வருடம் மீண்டும் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளது. அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ளது. அதிகரித்த சம்பளத்தை செலுத்துவதற்காக மட்டும் 11,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. நெல் விளைச்சலுக்காக வழங்கப்படும் உர நிவாரணத்தை, மாற்றுப்பயிர் பயிரிடும் விவசாயிகளுக்கும் வழங்க அமைச்சரவை அனுமதி பெற்றுள்ளோம். இலங்கையில் முதல் தடவையாக பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பொருட்களை கொள்வனவு செய்ய பணம் வழங்கப்பட்டது. ஈட்டிக்கொள்ளும் பணத்தை பாதுகாத்து மக்களுக்காக ஈடுபடுத்தும் அரசாங்கம். சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மஹாபொல சலுகை கொடுப்பனவுகளை அதிகரிக்கப்பட்டுள்ளது. பாடசாலை உணவுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அஸ்வெசும கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது நிவாரணம் கிடைக்காத 400,000 பேர் கொண்ட நிவாரண குழுவிற்குள் அடுத்த ஜூன் மாதம் முதல் உதவி தேவை என்று கருதும் குழுவினருக்கும் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும். ஒவ்வொரு பாடசாலை மாணவியருக்கும் மாதாந்தம் எட்டு சானிட்டரி நப்கின்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. உதவி வழங்கும் திட்டத்தை பலப்படுத்தியுள்ளோம்.
போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் பேருந்து சேவையை ஒருங்கிணைக்கும் திட்டம் உள்ளது. பஸ் சேவைகளில் ஒரு குறிப்பிட்ட தரத்தை கொண்டு வருவோம். அதற்காக, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய பஸ்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. சொகுசு பஸ் சேவை உள்ளடங்களாக பொது போக்குவரத்து சேவையை தயார்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுகாதார துறைக்கு 650 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு, மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக, கட்டிடங்கள் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குடும்ப மருத்துவர் இருக்க வேண்டும். அதற்கான முன்னோடி திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களைப் பார்க்க மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் குடும்ப மருத்துவரின் பரிந்துரையின்படி நீங்கள் அடுத்த நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய திட்டத்தை நாங்கள் தயார் செய்கிறோம்.
கல்விக்காக 2026 இல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதன்படி, ஒன்பதாம் ஆண்டில் பரீட்சையை எதிர்கொண்ட பிறகு, பிள்ளைகளின் திறமைக்கு ஏற்ப செல்லக்கூடிய பாதை காண்பிக்கப்படும். சுகாதாரம், கல்வி, போக்குவரத்து என ஒரு குடும்பம் செலவிடும் தொகை குறைக்கப்படுகிறது. அதனை அரசாங்கம் கவனித்துக் கொள்ளும். எஞ்சும் பணத்தை வைத்து மக்கள் வேறு திட்டங்களுக்கு செல்லலாம். ஒரு திரைப்படத்தை பார்க்கலாம், சுற்றுலா செல்லுங்கள்.
சிறையில் இருப்பவர்களை எந்த அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை. எனவே, சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் தொழில் திறன்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு தொழில் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அனாதை இல்லங்களில் உள்ள பிள்ளைகளுக்கு மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதில் மூவாயிரத்தை நிலையான வைப்பாக பேண வேண்டும். திருமணமாகும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் வீடு கட்டுவதற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். எவரையும் கைவிடாத அரசாங்கம். மக்கள் நலனில் அக்கறை கொண்டு சேவைகளை மேம்படுத்தும் அரசாக நாம் செயலாற்றுகிறோம்.
சுற்றுலாத் துறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஆண்டாகும். சுற்றுலா பயணிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி காணும் தொழில்துறையாக மாற்றுவோம். அதிகளவான பொருட்கள் ஏற்றுமதி செய்யும் ஆண்டாக இந்த ஆண்டை நாங்கள் மாற்றுவோம் வெளிநாட்டு பணியாளர்களால் நாட்டிற்கு அனுப்பப்படும் அதிக டொலர்கள் இந்த வருடத்தில் கிடைக்கும் என்பது உறுதி. 2025 ஆம் ஆண்டுதான் அரசாங்கத்திற்கு அதிக வருமானம் கிடைக்கும் ஆண்டாகவும் அமையும். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு மாதத்திற்கு வழங்கப்பட்ட இலக்கை விட அதிகமாகச் வருமானம் ஈட்டி வருகிறது. பொதுமக்கள் வரி செலுத்த பழகி வருகின்றனர். வரி செலுத்தும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், பெறப்படும் ஒவ்வொரு ரூபாயும் மக்களுக்காக கவனமாக செலவிடப்படுகிறது. அப்படித்தான் ஒரு நாடு கட்டமைக்கப்படுகிறது. துரித வேலைத்திட்டத்தில் நாங்கள் நுழைந்துள்ளோம். எந்தவொரு பிரஜையும் தற்போதைய அரசாங்கத்தை நோக்கி விரல் நீட்டி ஆட்சியாளர்கள் திருடுகிறார்கள் என்று சொல்ல முடியாது. அதனால், எதிர்க்கட்சிகளின் அரசியல் எதிர்காலம் சரிவடைந்து வருகிறது.
மாலை நேர செய்திகளை பார்க்கும் போது எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் ஊடகங்கள் முன் கதறி அழுகின்றனர். ஒரு கட்டத்தில் ஊடகங்களுக்கு முன்னால் இவ்வளவு அழுதால் வீட்டில் எவ்வளவு அழுதிருக்க வேண்டும் என்று நினைக்கிறது. அதனால் அரசாங்கம் சரியான பாதையில் செல்கிறது என்பது உறுதியாகிறது. அரசாங்கத்திற்கு சர்வதேச உறவுகள் இல்லை என்று எதிர் தரப்பினர் கூறினர். ஆனால் நாங்கள் ஆட்சியை கைப்பற்றி ஆறு மாதங்களுக்குள் இந்திய பிரதமர் இலங்கைக்கு வருகிறார். பொதுத் தேர்தல் முடிந்த உடனேயே இந்தியா மற்றும் சீனாவில் இருந்து எனக்கு அந்நாட்டுக்கு வருமாறு அழைப்பு வந்தது. அதேபோல் ஜப்பான் மற்றும் வியட்நாமில் இருந்து சுற்றுப்பயணத்திற்கான அழைப்புகளைப் பெற்றுள்ளோம். சர்வதேச உறவுகள் வலுப்பெறுகின்றன. நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகம் செய்யாமல் நேரடியான வலுவான சர்வதேச உறவுகளைப் பேணுவதற்கு நாங்கள் அர்ப்பணித்துள்ளோம். நாடு மிகவும் சாதகமான திசைக்கு மாறி வருகிறது. செய்திகளால் உருவாக்கப்பட்ட மாயைகளால் நாட்டின் அரசியலை திசை திருப்ப முடியாது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றங்கள் என்பன தற்போது சிறப்பாகச் செயற்படுகின்றன. இதுவரை மூன்று முன்னாள் அமைச்சர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு பொலிஸ்மா அதிபர் விளக்கமறியலில் இடப்பட்டுள்ளார். மற்றொரு அமைச்சர் தலைமறைவாகியுள்ளார். பொலிஸ்மா அதிபர் தலைமறைவாகயிருந்தார். இப்போது வெளியில் வந்திருக்கிறார். இந்த பரிசோதனைகள் நடவடிக்கைகள் சிறப்பாக நடந்து வருகின்றன. அவற்றில் தோற்றுப் போகாத வகையில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. கதிர்காமம் வீட்டு வழக்கு. வீடொன்று உள்ளது அதன் மின் கட்டண பட்டியல் நந்தசேன கோட்டாபய ராஜபக்சவின் பெயருக்கு வருகிறது. ஆனால் அவர் தனது வீடு இல்லை என்று கூறுகிறார். விசாரணைகள் நடந்து வருகின்றன. அனைத்து விசாரணைகளும் நடந்து வருகின்றன. ஊழலை நிறுத்தி இருப்பதும் ஊழல்வாதிகளை தண்டிப்பதும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மட்டுமே.
மக்களுக்கான வீதிகளை அமைக்க மூலதனப் செலவாக ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வேலைத் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் பணத்தை அடுத்த எட்டு மாதங்களுக்குள் சரியான திட்டங்களுக்கு பயன்படுத்தி முடிக்க வேண்டும். முன்பு வேலை செய்ய பணம் இல்லை. இன்று பணம் இருக்கிறது ஆனால் வேலை செய்ய ஆட்கள் இல்லை. அதனால்தான் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வீதிகளை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈட்டிக்கொண்ட பணம் மக்களுக்காக பயன்படுத்தப்பட்டுகிறது. எனவே, அரச சேவைத்திறனை அதிகரித்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். ஒதுக்கப்பட்ட நிதியை செயல்படுத்த அரசியல் தலைமைத்துவம் அவசியம். அந்த பொறுப்புகளை செய்வதற்கு உள்ளூராட்சி மன்றங்களின் அரசியல் அதிகாரம் தேவை. நாட்டின் பணிகளுக்கு ஜனாதிபதியும் பாராளுமன்றமும் உள்ளது கிராமத்தின் பணிகளுக்கு உள்ளூராட்சி சபைகளின் அரசியல் அதிகாரம் தேவை. மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் உள்ளூராட்சி மன்றம் தேவை. இல்லாவிட்டால் வண்டியில் இரண்டு வகை மாடுகள் கட்டப்பட்டது போல் ஆகிவிடும். ஒன்று நிலத்திற்கு இழுக்கும் போது, மற்றொன்று சேற்றுக்கு இழுக்கும். கிராம மட்டத்தில் செய்ய வேண்டிய பணிகளை மேற்கொள்வதற்கு உள்ளூராட்சி சபையின் தலைமைத்துவம் தேவை. எதிர்வரும் ஜூன் மாதம் வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கான முன்மொழிவுகள் பெறப்படும். அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். எனவே, ஜூன் மாதத்திற்குள் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளைத் தயாரிக்க தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் வழங்குவதன் மூலம் அதை வலுப்படுத்த முடியும். நீங்கள் தேசிய மக்கள் சக்திக்கு வெற்றியை பெற்றுத் தருவதற்காக பணியாற்றுவதை போன்றே நாங்கள் நாட்டின் வெற்றிக்காக உழைக்கிறோம்.