(-Colombo, December 12, 2024-) ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh)தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. ஊழல் மற்றும் மோசடியை ஒழிப்பது […]
(-Colombo, December 12, 2024-)
ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh)தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
ஊழல் மற்றும் மோசடியை ஒழிப்பது தொடர்பில் கனடா அரசாங்கத்தின் அனுபவங்களை இலங்கை அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கு முன்பு காணப்பட்ட அரசியல் கலாசாரமே காரணம் என சுட்டிக்காட்டிய கனடிய உயர்ஸ்தானிகர், தற்போதைய அரசாங்கம் அந்த அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இலங்கைக்கான கனடிய தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் (அரசியல்) பெட்ரிக் பிகரிங் (Patrick Pickering) அவர்களும் இதன்போது கலந்துகொண்டார்.
(-Colombo, December 12, 2024-) அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்குள் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை அதிகரிப்பதுடன், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான தொழில்நுட்ப அறிவை பெற்றுத்தருவதாகவும் இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் காலித் நசர் அல் அமேரி ( Khaled Nasser AlAmeri) தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் காலித் […]
(-Colombo, December 12, 2024-)
அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்குள் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை அதிகரிப்பதுடன், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான தொழில்நுட்ப அறிவை பெற்றுத்தருவதாகவும் இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் காலித் நசர் அல் அமேரி ( Khaled Nasser AlAmeri) தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் காலித் நசர் அல் அமேரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது 150,000 இலங்கையர்கள் தொழில் செய்து வருவதாகவும் அந்த தொகையை மேலும் அதிகரிப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையின் ஆறாவது மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக ஐக்கிய அரபு அமீரகமே காணப்படும் நிலையில், அந்த சந்தை வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்திக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அதேபோல் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால நட்புறவை மேலும் பலப்படுத்திக்கொள்வதோடு இலங்கைக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு உதவியையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் தூதுவர் இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் உறுதியளித்தார்.
எதிர்வரும் காலங்களில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம்மொன்றை மேற்கொள்ளுமாறும், ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் முழு அதிகாரமுள்ள மினிஸ்டர் பதவி வகிக்கும் அஹமட் எம்.ஏ.ஏ. அல் ஷெஹி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
(-Colombo, December 07, 2024-) – தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவல்கள் தொடர்பான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ தெரிவிப்பு தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு எந்தநேரத்திலும் ஒத்துழைப்பு வழங்குவதற்கும், நாட்டுக்கு வௌியில் கொண்டுச் செல்லப்பட்டுள்ள பணத்தை நாட்டுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவல்கள் தொடர்பான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ […]
(-Colombo, December 07, 2024-)
– தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவல்கள் தொடர்பான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ தெரிவிப்பு
தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு எந்தநேரத்திலும் ஒத்துழைப்பு வழங்குவதற்கும், நாட்டுக்கு வௌியில் கொண்டுச் செல்லப்பட்டுள்ள பணத்தை நாட்டுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவல்கள் தொடர்பான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ (Donald lu) தெரிவித்தார்.
இலங்கையின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க அமெரிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் உதவி இராஜாங்க செயலாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தெற்கு, மத்திய ஆசிய அலுவல்கள் தொடர்பான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ ஆகியோருக்கு இடையில் இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடயங்கள் தொடர்பில் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டு புதிய அரசாங்கம் கொண்டு செல்லும் வேலைத்திட்டத்திற்கு அமெரிக்க அரசாங்கம் பாரட்டுக்களை தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையில் ஊழல் மற்றும் வீண் விரயம் தொடர்பில் அரசியல் கலசாரம் நேரடியாக தாக்கம் செலுத்துவதாகவும் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கி ஊழலையும் வீண் விரயத்தையும் மட்டுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் ஊடாக கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருப்பதாகவும், புதிய தொழில்நுட்பத்தை அரச துறையில் அறிமுகப்படுத்தி தரமான அரச சேவையை உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க, ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் ரொஷான் கமகே, இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் ஜூலி சங் ( Julie Chung) USAID இன் ஆசியாவுக்கான பிரதி உதவி நிர்வாகி அஞ்சலி கவூர் (Anjali Kaur), ஐக்கிய அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் ஆசிய மற்றும் பசுபிக் வலயங்களுக்கான பிரதி உதவிச் செயலாளர் ரொபர்ட் கப்ரொத் (Robert Kaproth), USAID தூதுக்குழுவின் பணிப்பாளர் கேப்ரியல் க்ராவ் (Gabriel Grau), அரசியல் மற்றும் பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான ஆலோசகர் ஷோன் கிரே (Shawn Gravy) ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்
(-Colombo, December 05, 2024-) டிஜிட்டல் பொருளாதாரம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் டொலர் வருவாயை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு அரசியல் அதிகாரத்தினதும் டிஜிட்டல் தொழிநுட்ப நிபுணர்களினதும் எதிர்பார்ப்புகள் ஒன்றாக இருக்கும் நிலையில் , நாட்டை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாட்டிற்கு அனைத்து தொழில்வல்லுநர்களினதும் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். எந்த சந்தர்ப்பத்திலும் அதற்கு ஒத்துழைப்பாக இருப்பேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். […]
(-Colombo, December 05, 2024-)
டிஜிட்டல் பொருளாதாரம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் டொலர் வருவாயை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
– டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு
அரசியல் அதிகாரத்தினதும் டிஜிட்டல் தொழிநுட்ப நிபுணர்களினதும் எதிர்பார்ப்புகள் ஒன்றாக இருக்கும் நிலையில் , நாட்டை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாட்டிற்கு அனைத்து தொழில்வல்லுநர்களினதும் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
எந்த சந்தர்ப்பத்திலும் அதற்கு ஒத்துழைப்பாக இருப்பேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
டிஜிட்டல் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக கடமைகளை இன்று (05) பிற்பகல் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகையிலே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக பொருளாதார நடவடிக்கைகளின் வினைத்திறனை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை உயர் மட்டத்திற்கு கொண்டு வர முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வறுமையை ஒழித்தல், சமூக மனப்பாங்குகளை மாற்றுதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் என்பன அரசாங்கத்தின் பிரதான இலக்குகளாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கட்டிடங்களை நிர்மாணிப்பதனால் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தியடையாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நிர்மாணத்துறை அமைச்சொன்று இருந்ததை நினைவு கூர்ந்ததோடு, தற்போது ஒவ்வொரு அமைச்சும் நிர்மாணப் பணிகளையே மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்த வருடம் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் பல்கலைக்கழக வேந்தர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும் கட்டிட நிர்மாணங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் மாத்திரமே இடம்பெற்றதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தொழில் அமைச்சுக்கு இரண்டு பாரிய கட்டிடங்கள் உள்ள போதிலும் இன்னும் மக்களின் வரிசையில் குறைவில்லை எனவும், அதற்கான தீர்வுகளை வழங்க டிஜிட்டல் மயமாக்கல் அவசியமானது எனவும் ஜனாதிபதி அநுனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
டிஜிட்டல் பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 15 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டவும் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஐந்தாண்டுகளில் டிஜிட்டல் பணியாளர்களை இரண்டு இலட்சமாக அதிகரிப்பது, முழு நாட்டையும் டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான செயல் திட்டத்தை எதிர்வரும் 5 வருடங்களில் செயல்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சராக பொறியியலாளர் எரங்க வீரரத்னவும் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, ஜனாதிபதியின் டிஜிட்டல் விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர், ICTA தலைவருமான ஹான்ஸ் விஜேசூரிய உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(-Colombo, November 18, 2024-) சர்வதேச நாணய நிதியத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் அதன் சிரேஷ்ட தூதுக்குழு தலைவர் பீட்டர் ப்ரூவர் ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய அமைச்சர்கள் குழுவை இன்று(18) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது அரசாங்கம் பெற்ற மக்கள் ஆணையுடன் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) […]
(-Colombo, November 18, 2024-)
சர்வதேச நாணய நிதியத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் அதன் சிரேஷ்ட தூதுக்குழு தலைவர் பீட்டர் ப்ரூவர் ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய அமைச்சர்கள் குழுவை இன்று(18) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது அரசாங்கம் பெற்ற மக்கள் ஆணையுடன் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒத்துழைப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக மீண்டும் உறுதிப்படுத்தினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர், தீர்மானகரமான தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி மற்றும் அணியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் வெற்றியானது தற்போதுள்ள ஆட்சியின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் தங்கியுள்ளது என வலியுறுத்திய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மக்கள் ஆணைக்கு அமைய செயற்படுவது தமது ஆட்சியின் பொறுப்பு எனவும் வலியுறுத்தினார்.
மக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு சமநிலையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்தார். தனது தலைமையின் கீழ், சிறுவர் வறுமை மற்றும் போசாக்கின்மை போன்ற அத்தியாவசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதையும் சமூக சேவைகளுக்கான ஒதுக்கீடுகள் திறம்பட பயன்படுத்தப்படுவதையும் உறுதிசெய்தார்.
கடந்த காலங்களில் சமூக சேவை செலவினங்களுக்கான ஒதுக்கீடுகள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டதுடன், வளங்களை வினைத்திறனான ஒதுக்கீடு மற்றும் பாவனையை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தனர்.
நாட்டை ஆட்சி செய்வது மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவது குறித்து இங்கு முக்கியமாக ஆராயப்பட்டது. மக்கள் வழங்கிய ஆணையின் முக்கிய அம்சமான ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தானும் தனது அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
அந்த செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில், சட்டமியற்றும் மற்றும் ஏனைய நிறுவனரீதியான கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு தமது அரசாங்கம் கடுமையான ஒழுங்குவிதிகளை அமுல்படுத்தும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,சர்வதேச நாணய நிதிய குழுவிடம் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பில் ஒரு சாதகமான முன்னேற்றத்தைக் குறிப்பதோடு அதன் ஊடாக பொருளாதார மீட்சி மற்றும் நீண்டகால ஸ்திரத்தன்மைக்கான ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கான அடித்தளத்தை அமைக்கிறது.
இக்கலந்துரையாடலில் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் நிதியமைச்சின் பிரதிநிதிகளும் இணைந்து கொண்டனர்.
(-Colombo, November 18, 2024-) -தேசிய மக்கள் சக்திக்கு வலுவான ஆணையை வழங்க ஆர்வமாக உழைத்த அனைத்து மக்களுக்கும் நன்றி . -இந்தத் தேர்தலில் மகிழ்ச்சி அடையும் குழு மற்றும் விரக்தியடைந்த குழு என இரண்டு குழுக்கள் கிடையாது. – தேசிய மக்கள் சக்தி எதிர்பார்க்கும் இலக்கை அடைய அனைத்து மக்களின் ஆதரவும் நம்பிக்கையும் அவசியம் – இந்தத் தேர்தல் முடிவுகள் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான அறைகூவல். அவர்களுக்கு இந்த சுதந்திரம் அவசியம் நமது வெற்றி எவ்வளவு […]
(-Colombo, November 18, 2024-)
-தேசிய மக்கள் சக்திக்கு வலுவான ஆணையை வழங்க ஆர்வமாக உழைத்த அனைத்து மக்களுக்கும் நன்றி .
-இந்தத் தேர்தலில் மகிழ்ச்சி அடையும் குழு மற்றும் விரக்தியடைந்த குழு என இரண்டு குழுக்கள் கிடையாது.
– தேசிய மக்கள் சக்தி எதிர்பார்க்கும் இலக்கை அடைய அனைத்து மக்களின் ஆதரவும் நம்பிக்கையும் அவசியம்
– இந்தத் தேர்தல் முடிவுகள் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான அறைகூவல். அவர்களுக்கு இந்த சுதந்திரம் அவசியம்
நமது வெற்றி எவ்வளவு பெரியதோ, அதே போல பொறுப்பின் எடை அதே அளவானது
அதற்காக ஒன்றுபட்டுச் செயற்படுவோம்!
புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு
அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
எமது வெற்றி மகத்தானது எனவும், வெற்றியினால் எமக்கு வழங்கப்பட்ட பொறுப்பின் எடை அதேஅளவானது எனவும், அதற்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,
குறிப்பாக இலங்கை அரசியலில் மிகவும் முக்கியத்துவமான திருப்புமுனை செப்டம்பர் 21 ஆம் திகதி நிகழ்ந்தது.நீண்டகால எமது நாடு பயணித்த பாதையை மாற்றியமைப்பதற்கு மக்கள் செப்டம்பர் 21 ஆம் திகதி தீர்மானம் எடுத்தனர்.அதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் செப்டம்பர் 21 ஆம் திகதி எடுத்த தீர்மானத்தை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் எம்மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இந்த மாற்றத்திற்காக எமது நாட்டு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.இலங்கை வரலாற்றில் எப்பொழுதும் வடக்கிற்கு எதிராக தெற்கு அரசியலும் தெற்கிற்கு எதிரான வடக்கு அரசியலும் தான் அரசியல் வரைபடத்தில் பொதிந்திருந்தது. அல்லது ஒவ்வொரு மக்கள் குழுக்களிடையில் சந்தேகம் அவநம்பிக்கை, குரோதம் என்பவற்றை தூண்டும் அரசியலே காணப்பட்டது.
ஆனால் இந்த தேர்தல் முடிவுகள், இனியும் எமது நாட்டுக்கு பிரித்தாலும் அரசியல் செல்லுபடியற்றது என்பதை காட்டுகிறது. வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை ஒரே மையப்புள்ளியில் இணைக்க இந்தத் தேர்தலால் முடிந்துள்ளது.அதற்காக தேசிய மக்கள் சக்திக்கு பலம் வாய்ந்த மக்கள் ஆணையை வழங்குவதற்காக ஆர்வம் காட்டிய அர்ப்பணித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.
அதே போன்று எமக்கு வாக்களிக்காமல் வேறு கட்சிக்கு வாக்களித்தாலும் நாம் எதிர்பாக்கும் பணிகள் மற்றும் நோக்கங்கள் அவர்களினதும் நோக்கமாகும் என்பது திண்ணம்.பிரித்தாலும் அரசியலை எந்தப் பிரஜையும் விரும்புவார்கள் என நான் நினைக்கவில்லை. ஜனநாயகத்தை முடக்குவதை எந்த அரசியல்வாதியும் விரும்புவர் என்று கருதவில்லை. இவ்வாறான சாதகமான விடயங்கள் அனைத்து பிரஜைகளின் மனங்களிலும் பொதிந்துள்ளது.
எமக்கு வாக்களித்தவர்கள் சாதகமான விடயத்தை தேர்தலின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர்.எமக்கு வாக்களிக்காதவர்களிடமும் எமது எதிர்பார்ப்புகள் உள்ளன என நாமும் முழுமையாக நம்புகிறோம்.எனவே இனியும் இந்தத் தேர்தலில் மகிழ்ச்சி அடையும் குழு மற்றும் இந்தத் தேர்தலினால் விரக்தியடைந்த குழு என இரண்டு குழுக்கள் நாட்டில் இல்லை.
தேசிய மக்கள் சக்தியின் மூலம் இந்த நாடு விரும்பிய இலக்குகளை அடைவதற்கு இந்த மக்கள் அனைவரின் ஆதரவும் நம்பிக்கையும் எங்களுக்குத் தேவை. எனவே, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும், இந்த நாட்டில் ஜனநாயகத்தை எவ்வாறு அமைதியான முறையில் நிலைநிறுத்துவது, மற்றவர்களின் அரசியல் உரிமைகளை எவ்வாறு மதிப்பது என்பதை நாம் தேர்தல் முடிவுகளின் பின்னர் காட்டியுள்ளோம்.
இந்நாட்டு மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக நான் கருதுகிறேன். ஆனால் அந்த அனுபவம் நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எதிர்பார்க்கும் அனுபவம் என்று நாங்கள் கருதுகிறோம். அத்துடன், பொதுத் தேர்தலின் பின்னரும், தேர்தல் காலத்திலும் இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு எமது ஆட்சியில் வாய்ப்பளிக்கப்பட்டது. அது அவர்களின் உரிமையாகும். அத்துடன், இத்தேர்தல் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலாகும்.
இத்தேர்தலில் பல தனித்துவங்கள் உள்ளன, அளவுரீதியாக நோக்கினால் , இலங்கை வரலாற்றில், பொதுத் தேர்தலொன்றில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது.அரசியல் கட்சியென்ற ரீதியில் பெற்ற பாரிய வெற்றியாகும். தேர்தல் வரலாற்றில் ஒரு அரசாங்கம் அடைந்த முதல் வெற்றியாகும். மறுபுறம், இது மக்கள் மகிழ்ச்சியடையக் கூடிய வெற்றியாகும். அவ்வாறான வெற்றியொன்று நமக்கும் நமது குடிமக்களுக்கும் எப்படி கிடைத்தது. நம் நாட்டிற்கு அந்த மாற்றங்கள் தேவை.
நமது நாட்டுக்கு பல்வேறு வகையான வெற்றிகள் கிடைத்த போதெல்லாம், நமது பொதுவான இயல்பு தோல்வியுற்றவரின் அல்லது மற்ற தரப்பினரின் மனதை நோகடிக்கும் மற்றும் காயப்படுத்தும் வரலாற்றைக் கண்டுள்ளோம். ஆனால் இந்த தேர்தலின் பின்னர் நிரந்தரமாக புதிய அரசியல் கலாசாரத்தை எமது நாட்டுக்கு உருவாக்கியுள்ளோம். பொதுத் தேர்தலுக்குப் பிறகு, அதனை தொடர்ச்சியாக நாங்கள் பாதுகாத்துள்ளோம்.
சம்பவங்கள் நடக்கலாம். மற்றொரு கட்டத்தில், அமைதியான ஜனநாயகம் இருக்கலாம். மற்ற சமயத்தில், மோதல் நிலைமை இருக்கலாம். ஆனால் அவை மீண்டும் மீண்டும் நிகழும் போது மட்டுமே அது சரி செய்யப்படுகின்றன. எனவே, இந்த ஜனநாயகத்திற்காக நாம் திறந்துள்ள கதவுகளும், பொதுமக்களுக்கிருக்கும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நமது கடமையும் ஓரிரு சந்தர்ப்பங்களுக்கு மட்டுப்படுத்தினால் அவை வெறும் நிகழ்வுகளாக மாறிவிடும்.
ஆனால் அதனை தொடர்ச்சியாக பேணினால் அவை வெறும் சம்பவங்களாக மாறிவிடாது. எனவே, இந்த ஜனநாயகத்தில், குடிமக்களின் உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாத்து, அவர்களை உயர்த நிலைக்குக் கொண்டு வருவது நமது பொறுப்பாகும் . இது அரசாங்கத்தின் முக்கியமான பொறுப்பு என்று நான் கருதுகிறேன்.
குறிப்பாக இந்த தேர்தல் பிரச்சாரத்தில் வெளிநாளில் வாழும் இலங்கையர்கள் எமக்கு மிகுந்த உற்சாகத்தையும் தைரியத்தையும் கொடுத்தனர். தேர்தல் வரலாற்றில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தலில் அதிக ஆர்வம் காட்டிய மற்றொரு சந்தர்ப்பம் இருக்கிறது. அந்த சந்தர்ப்பத்தை மிஞ்சும் வகையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் தலையீடும் பங்களிப்பும் செயற்பாடும் இத்தேர்தலில் கொடுக்கப்பட்டதாகவே கருதுகிறேன்.
அவர்கள் இலங்கைக்கு வெளியில் இருந்தாலும் இந்தத் தேர்தல் முடிவுகளை மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடியதை நாம் அறிவோம். அவர்களுக்கு நாம் எமது நன்றிகளை தெரிவிக்கிறோம்.பொதுவாக தேர்தலின் போது அரசியலின் மிக முக்கியமான பகுதி நமது கருத்தையும் நிலைப்பாடுகளையும் சமூகத்திற்கு எடுத்துச் செல்வது என்பதை நாம் அறிவோம். அதனைச் சமூகத்திற்குக் கொண்டு செல்வதில் ஒரு அரசியல் இயக்கமாக நாங்கள் சில பணிகளைச் செய்தோம்.சமூக ஊடகங்களில் அந்தப் பொறுப்பை தானாக முன்வந்து முன்னெடுத்த புதிய தலைமுறையொன்றும் இருந்தது. அந்த இளம் தலைமுறையினரின் விசேட எதிர்பார்ப்புகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்களில் வெறும் பந்தயம், போட்டி, வெற்றி தோல்வியை பகிர்ந்து கொள்ளும் போட்டி என்பன வெளிப்படுத்தப்படவில்லை.இது புதிய இளைஞர் தலைமுறையின் எதிர்பார்ப்புகளையும் இலக்குகளையும் வெளிக்காட்டியது. எனவே நாம் அதற்கு கடப்பட்டுள்ளோம். அது முக்கியமானது என்று நான் கதுதுகிறேன். எனவே, இந்த வெற்றியை அடைய பல்வேறு வழிகளில் உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆனால் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒருவிடயம் இருக்கிறது. பெரும் நம்பிக்கையுடன் இந்த மக்கள் எழுச்சி பெற்றதன் இரகசியம் என்ன? நீண்டகாலமாக எமது நாட்டுக் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வந்தனர். நம் நாட்டின் குடிமக்கள் சட்டத்தின் முன் அநாதரவாகவும் ஒடுக்கப்பட்டும் இருப்பது வழமையான காட்சியாகும். மேலும் பொருளாதார ரீதியில் புறக்கணிக்கப்பட்ட ஒரு குழுவினர் உள்ளனர். பொருளாதாரத்தில் அவர்கள் மனிதத் தூசியாகி விட்டனர். போதிய உணவின்றி, சரியான வீடின்றி, ஆரோக்கியமாக வாழ வாய்ப்பில்லாமல் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் குழுவொன்று உள்ளது.
மேலும், அவர்கள் தங்கள் அறிவையும் திறனையும் தங்கள் ஈடுபட்டுள்ள தொழிலில் சுதந்திரமாகப் பயன்படுத்த முடியுமா? எனவே தொழில் வல்லுநர்கள் தங்கள் தொழில்துறையில் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அழுத்தங்களை எதிர்கொண்டனர் . மேலும், தாம் பேசும் மொழியின்படி, பின்பற்றும் மதத்தின்படி, அவர்களின் கலாச்சாரத்தின்படி ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டம் இருந்தது. எப்போதும் தாம் இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டதாக நினைக்கிறார்கள். அவர்கள் இலங்கையில் ஒதுக்கப்பட்ட மக்கள் என்று நினைக்கிறார்கள்.அவர்கள் இலங்கையில் சம உரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பதிலாக, உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் குழுவென கருதுகிறார்கள். எனவே, அத்தகைய துன்புறுத்தல் இருந்தது.
ஒவ்வொரு துறையிலும் உள்ள மக்கள் குழுக்களை அவதானித்தால், அவர்களுக்கே உரித்தான, அவர்களுக்கே தனித்துவமான பல அடக்குமுறைகளை பொதுமக்கள் எதிர்கொண்டனர். சட்டத்தை அமுல்படுத்த முயலும் அரச அதிகாரிகள் இந்த அடக்குமுறைக்கு பலியாகி இருப்பதை நான் அறிவேன். அதுதான் உண்மை நிலை. எனவே, இந்தத் தேர்தல் முடிவுகள் ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரத்தின் அழைப்பாகும். அவர்கள் இந்த சுதந்திரத்தை எதிர்பார்த்தனர். இந்த பல்வேறு வழிகளிலுமான அடக்குமுறைகளில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும். இந்த தேர்தல் முடிவு சுதந்திரத்தின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. எனவே அந்த குடிமக்களுக்குக் கிடைக்கும் சுதந்திரத்தை மட்டுப்படுத்த எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே, ஒவ்வொரு துறையிலும் முழு சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்.
தொழில் வல்லுநர்களாகிய நாம் அவர்களின் அறிவுக்கு ஏற்ப தங்கள் பங்கை சரியாகச் செய்ய வழங்கப்படும் சுதந்திரம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரிகளுக்கு அவர்களின் பங்கைச் செய்ய நாம் வழங்கும் சுதந்திரம், பொருளாதாரத்தில் நியாயமான பங்கைப் பெறுவதற்கு நாம் வழங்கும் சுதந்திரம், தமது மதம், மொழி மற்றும் கலாச்சாரத்தின் படி நாம் வாழ்வதற்கான உரிமை போன்ற அனைத்தையும் நாம் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். அதனால்தான் இலங்கையை மறுமலர்ச்சி யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறுகிறோம்.
இந்த நாட்டு மக்களுக்கு இதனை விட சுதந்திரமான சூழலை உருவாக்க வேண்டும். இந்த வெற்றியை அடைவதில் பொது மக்களின் பெரும் ஈடுபாடு இருந்ததை நாம் அறிவோம். எங்களுடைய அரசியல் இயந்திரத்துடன் தொடர்பில்லாத, எங்களைச் சந்திக்காத, எங்களுடன் கதைக்காத, ஊர், இடம் தெரியாத ஏராளமான மக்கள் எங்களுக்காகப் பாடுபட்டனர். பஸ்ஸில், ரயிலில், பணியிடத்தில், நிகழ்வுகளில் எங்கள் வெற்றிக்காக பெருமளவானவர்கள் பங்களித்தனர். இந்த வெற்றிக்காக நாங்கள் நீண்ட காலமாக போராடினோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பல தசாப்தங்களாக போராடினோம்.
இங்குள்ள பலர் தங்கள் இளமைக் காலத்திலிருந்தே இந்தக் கனவுக்காகப் போராடியதை நான் அறிவேன். இந்தப் போராட்டத்தில், அவர்களின் நேரத்தையும் உழைப்பையும் மட்டுமல்ல, இந்த வெற்றிக்காக அவர்களின் உயிரையும் கூட தியாகம் செய்தனர். அது மட்டுமின்றி, ஆரம்பத்தில் மிகவும் கடினமான சந்தர்ப்பங்களில் இந்த இயக்கத்தைப் பாதுகாக்க தலையிட்டோம். சிலர் நடுவழியில் சென்றுவிட்டனர். பாதியில் விட்டு சென்றாலும், இந்த வெற்றியை அடைவதற்கு, ஆரம்பத்தில், நடுவில், எந்த கட்டத்திலும் எங்களுக்கு ஆதரவு வழங்கினர். அவைகளும் இந்த வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தது.
ஃஃஃஃ
எனவே, எங்களுக்கு இரு வகையான பொறுப்புகள் உள்ளன. ஒன்று பொது மக்களின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளுக்கான பொறுப்பு. இரண்டாவது இயக்கம் தொடர்பான பொறுப்பு. அதிகாரம் என்பது மிகவும் விசேடமான ஒன்று என்று நாங்கள் கருதுகிறோம். அதிகாரத்தில் இருந்து அதிகாரம் பிறப்பிக்கப்படுகிறது. அதிகாரத்தில் இருந்து அதிகாரம் விரிவுபடுத்தப்படுகிறது. அதிகாரத்தில் இருந்து மேலும் அதிகாரம் வளர்க்கிறது. ஆனால் சிலர் அதிகாரத்தை மோசடி என்று கூறுகின்றனர். அந்த எல்லையற்ற அதிகாரமானது எல்லையில்லாத அளவு மோசமானது என்கிறார்கள். அது நிரூபிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் இதுபோன்ற அதிகாரங்கள் உருவாக்கப்பட்ட பல சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால், அந்த அதிகாரங்களின் இறுதி முடிவை எடுத்துக் கொண்டால், அவை மக்களுக்கு நியாயமான பெறுபேறுகளை கொண்டு வரவில்லை. அந்த அதிகாரங்கள் எப்போதும் நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராகவே பயன்படுத்தப்பட்டன. எல்லையில்லா அதிகாரம் கிடைத்திருப்பதால் அந்த எல்லையற்ற அதிகாரம் நம்மை எங்கே தள்ளும் என்ற சந்தேகம் சமூகத்தில் உருவாக்கி இருக்கிறது.
கொஞ்சமாவது சந்தேகம் கொள்ளும் அனைவருக்கும், நாம் சொல்வது ஆம் எமக்கு அதிகாரம் கிடைத்திருப்பது உண்மைதான். ஆனால் இந்த அதிகாரத்தின் எல்லைகளையும், இந்த அதிகாரம் நமக்குக் கையாளக் கொடுத்துள்ள எல்லையின் அளவையும் நாங்கள் அறிவோம். அதிகாரம் இருக்கிறது. ஆனால் அந்த அதிகாரத்திற்கு நமக்கு வரம்புகள் உண்டு. நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அதிகாரத்தில் ஒரு நோக்கம் இருக்கிறது. மக்களுக்கு வழங்கப்பட்ட நல்ல இலக்குகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் பொறுப்பு நீண்ட காலமாக அந்த அதிகாரத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக இந்த அதிகாரத்துடன் பொறுப்பும் இருக்கிறது. யாருக்கு? ஒருபுறம், குடிமக்களுக்கான பொறுப்பு. மறுபுறம் இயக்கத்திற்கான பொறுப்பு. எனவே, சட்டங்கள் மற்றும் அரசியலமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் எங்களுக்காக எந்த வகையான அதிகாரத்தை உருவாக்கினாலும், இந்த அதிகாரத்தை நாம் கையாள்வதில் நாம் பொறுப்புக் கூற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
எமக்கு பொறுப்பு உள்ளது.பிணைப்பு இருக்கிறது. எனவே, ஒரு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சருக்கு ஒரு சாதாரண குடிமகனை விட பாரிய பொறுப்பு உள்ளது. உங்களுக்கெல்லாம் அது புரியும். நான் புதிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை. உங்களிடம் அந்த வரம்புகள் உள்ளன. உங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. உங்களிடம் ஒரு பிணைப்பு உள்ளது. அதனைப் பாதுகாப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும், இங்கு அமைச்சரவைக்கு மாத்திரமன்றி பாராளுமன்றத்துக்கும் பலர் புதியவர்கள். ஆனால் நாங்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காக பல்வேறு துறைகளில் நீண்ட காலமாக பணியாற்றியுள்ளோம். நீங்கள் ஒரு தொழிற்துறையைப் போலவே வேகமாக பணியாற்றியிருக்கிறீர்கள். அரசியல் செயற்பாட்டாளராக பணியாற்றியுள்ளீர்கள். எனவே, நீங்கள் அனைவரும் அமைச்சரவைக்கு புதியவர்கள், பாராளுமன்றத்திற்கு புதியவர்கள், ஆனால் அரசியலுக்கு புதியவர்கள் அல்ல. பணியாற்றுவதில் புதியவர்களல்ல,
எனவே இந்த அமைச்சரவையினால் புதுவிதமான முன்மாதிரிகள் பலவற்றை மக்களுக்கு வழங்க முடியும் என்று நினைக்கிறோம். நாடு எதிர்பார்க்கும் சாதனைகளை முன்னெடுக்க இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையால் முடியும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் சிறப்பாக வழிநடத்தி பாடுபட்டால் அந்த இலக்கை அடையலாம். அதற்கான திறமை உங்களுக்கு இருக்கிறது. உங்களுக்கு அந்த நோக்கம் இருக்கிறது.நீங்கள் மோசடியற்றவர்கள். நீங்கள் நேர்மையானவர் என்று தனிப்பட்ட முறையில் நான் அறிவேன். இந்தப் பணியை நிறைவேற்றும் தைரியம் உங்களுக்கு இருக்கிறது.
எனவே, இந்தப் பணியை நேர்மையாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அந்த நம்பிக்கையுடன் தான் நாம் செயல்படுகிறோம். மேலும், ஒரு சமயத்தில் அரசியலில், அரசியல் நோக்கங்களுக்காக இயக்கத்தைக் கட்டியெழுப்ப அதற்காக பங்காற்ற வேண்டியிருந்தது. எங்களிடம் நல்ல நோக்கங்கள் இருந்தன. அந்த நோக்கங்களை அடைவதற்கான அதிகாரத்தைப் பெறுவதற்கு நாங்கள் பாடுபட்டோம். நமது கோசங்கள், நமது செயல்பாடுகள், இவை அனைத்தும் அதிகாரத்தைப் பெறும் போராட்டத்தின் போக்கில் தான் இருந்தன. நாம் முட்டிமோதி இந்த நாட்டு மக்களுக்கு இந்தத் தேவையை உணர்த்தியுள்ளோம். அதுதான் பெறுபேறு. அரசியல் வெற்றி கிடைத்துள்ளது. எம்மை இனி அரசியல் கோஷங்களால் மட்டும் அளவிடக் கூடாது.
செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னரும், நவம்பர் 14 ஆம் திகதிக்கு முன்னரும், எங்கள் கோஷங்களின் அடிப்படையில் தான் எம்மை அளவிட்டார்கள். ஆனால், நவம்பர் 14ஆம் திகதிக்குப் பிறகு, ஆட்சியில் நாம் சிறப்பானவர்களா இல்லையா என்ற காரணிக்கமையவே அளவிடுவர். முன்பெல்லாம் நமது அரசியல் செயல்பாடு நல்லதா கெட்டதா என்பதை வைத்து அளவிடப்பட்டது. இனிமேல் நமது ஆட்சி நல்லது கெட்டது என்ற காரணியால் எம்மை அளவிடுவர்.
எனவே, எமது நீண்டகால முயற்சிகளையும், மக்களின் எதிர்பார்ப்புகளையும், அவர்கள் எதிர்பார்த்த இலக்குகளையும் வெற்றியடையச் செய்வதற்கு
நல்லாட்சி அவசியமாகும். இனியும் நாம் கோஷங்களாலும் சித்தாந்தங்களாலும் அளக்கப்படப் போவதில்லை. இன்றிலிருந்து நமது கோஷங்களுக்கு எவ்வளவு உயிர் கொடுக்க முடிந்துள்ள ஆட்சி என்பதை வைத்து அளவிடப்படுவோம்.
எனவே,எங்கள் வெற்றி பாரியது என்பதோடு வெற்றி ஊடாக ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பின் பாரமும் அதற்கு சமமானது. சில சமயங்களில் வெற்றிக்காக போராடுவோம் என்றும், வெற்றிக்குப் பிறகு திறமையுள்ள குழுக்கள் அடுத்த அடியை எடுத்து வைக்கும் என்றும் எமக்குக் கூறப்பட்டது. ஆனால் நல்லதோ கெட்டதோ வெற்றிக்காக போராட வேண்டியிருந்தது. வெற்றிக்குப் பிறகு அந்தப் பணியில் வெற்றிபெறும் முன்னோடிகளாகிவிட்டோம்.
எனவே அனைத்தும் உங்கள் மீது தான் சுமத்தப்பட்டுள்ளது. நீங்கள்தான் பிரதானம். உங்களால் எந்த அளவிற்கு உங்கள் துறைகளை திறம்பட நிர்வகித்து உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற முடியும்? தனிப்பட்ட போக்குகள்,பொறுப்புகள் என்பவற்றை எந்தளவு உங்களால் நிறைவேற்ற முடியும்? இந்த அடிப்படையில் தான் நமது அடுத்த வெற்றி அல்லது தோல்வி தீர்மானிக்கப்படுகிறது.
செப்டம்பர் 21 மற்றும் நவம்பர் 14 ஆகிய இரு கட்டங்களிலும் நாம் சித்தியடைந்துள்ளோம். அடுத்து, நாங்கள் சித்தியடைவோமா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் உங்கள் வகிபாகம் பெரியது. சிறந்த ஆட்சிக்கான உங்களின் பொறுப்புக்கூறல் மற்றும் அர்ப்பணிப்பினால் தான் இதனை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும். அதற்காக ஒன்றுபட்டு செயற்படுவோம். அதற்காக ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்.